உள்ளம் உயரின் உலகில் அவனுயர்ந்து மேன்மைகளை மேவுகின்றான் - தகவு, தருமதீபிகை 859

நேரிசை வெண்பா

உள்ளம் உயரின் உலகில் அவனுயர்ந்து
வெள்ளமென மேன்மைகளை மேவுகின்றான் - உள்ளம்
இழிந்து படினோ இழிமகனாய் எங்கும்
கழிந்து படுகின்றான் காண்! 859

- தகவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளம் நல்ல வழியில் பழகி உயர்ந்தால் உலகில் உயர்ந்து அளவிடலரிய மேன்மைகளை அடைகிறான்; அது இழிந்து பட்டால் அவன் இழிமகனாய்க் கழிந்து ஒழிந்து போகிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உடலின் உள்ளேயிருந்து உணர்வது உள்ளம் என வந்தது. வெளியே நிகழுகின்ற செயல் நிலைகளுக்கெல்லாம் இது மூல யந்திரமாயுள்ளது. உள்ளம் அகத்தே யிருந்து இயக்க மனித வுலகம் புறத்தே இயங்கி வருகிறது. இதன் அதிசய ஆற்றல்கள் அளவிடலரியன. இது ஆட்டியபடியே யாவரும் ஆடி வருகின்றனர். மனம் நடத்த மானிடங்கள் நடக்கின்றன.

கண்ணாடி உருவங்களைக் காட்டுதல் போல் மனம் மனிதனுடைய மருமங்களையெல்லாம் தெளிவாகக் காட்டுகிறது. உயர்வு தாழ்வு, இன்பம் துன்பம் என வருவன யாவும் இதன் இயல்பின் அளவே விளைவனவாம். சிந்தை வழியே சீவர்கள் வாழுகின்றனர்.

உள்ளம் நல்ல பண்பு படிந்துவரின் அந்த மனிதன் எல்லா மேன்மைகளையும் எளிதே எய்தி இன்பம் மிக அடைகின்றான். இது பொல்லாததாய்ப் புலை படிந்து வரின் எல்லா வழிகளிலும் இழிவும் பழியும் அழிகேடுகளும் அல்லல்களுமே விளைந்து வரும்.

தூய உள்ளம் பேரின்ப வெள்ளத்தைப் பெருக்கியருளுகிறது; அது தீயதாயின் கொடிய நரக துயரங்களையே கூட்டி விடுகிறது. மாசு நீங்கிய அளவு அங்கே ஈசன் அருள் ஓங்கி எழுகிறது. நெஞ்சத் தூய்மையே நிமலன் நிலையமாம்.

பரிசுத்த இதயம் பரஞ்சோதி நிலையமாயுள்ளமையால் அது அதிசய மகிமையாய் யாண்டும் துதி செய்யப் பெறுகிறது.

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தின் ஆரும் கலந்தறிவார் இல்லை!

இறைவன் மனிதனது தூய உள்ளத்தில் உளன், கள்ளம் படிந்த நெஞ்சர் அவனைக் காண முடியாது; உள்ளம் தூயரே காணுகின்றனர் எனத் திருமூலர் இவ்வாறு காட்டியுள்ளார்.

மாசற்ற மனம் ஈசனை நேரே காண்பதால் ஈசன் ஆகவே அது காட்சி தந்து எவ்வழியும் இன்பம் அருளுகிறது.

Our mind is God - Menander

நமது.மனமே கடவுள் என இது காட்டியுளது;

God is Mind, and God is infinite; hence all is Mind. - Baker Eddy

கடவுள் எல்லையின்றி எங்கும் நிறைந்தவர்; உள்ளமாயுள்ளார்; ஆகவே எல்லாம் உள்ளமே என்னும் இது ஈண்டு உணரவுரியது. சித்த சுத்தி சிவம் என நின்றது.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே! 1

- இரண்டாம் தந்திரம்
- 18 தீர்த்த உண்மை, திருமந்திரம், பத்தாம் திருமுறை

புனித உள்ளம் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களிலும் உயர்ந்தது; அதனையுடையவர் பரம பரிசுத்தராய் உயர்கின்றார் என இது உணர்த்தியுள்ளது. தன் உள்ளம் நல்லதானால் அவன் தூய தெய்வீக நிலையில் துலங்கி இன்பமாய் இலங்கி நிற்கிறான்.

உள்ளம் உடைமை யுடைமை; பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்! 592 ஊக்கம் உடைமை

ஊக்கம் உடைய நல்ல உள்ளமே பெரிய பாக்கியம்; அதற்கு நிகரான செல்வங்கள் வேறு யாதும் இல்லை எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிறார். மனிதன் அடையவுரிய பெருமைகள் யாவும் உள்ளத்திலேயே மருமமாய் மருவியுள்ளன.

இத்தகைய உள்ளத்தைப் புனித நினைவுகளால் இனிது பண்படுத்திவரின் அந்த வேந்தனிடம் மேம்பாடுகள் விரிந்து விளைந்து வருகின்றன. மனம் பெருந்தன்மையாய் உயர்ந்து வருதற்கு அடையாளம் தாழ்ந்த இனங்களை ஆழ்ந்த அனுதாபத்தோடு ஆதரித்து வருவதேயாம். அன்பு நலம் இன்ப நிலையமாகின்றது.

தலைவனாய் உயர்ந்துள்ள மன்னன் குடிகளை உரிமையோடு பேணி வருங்கால் அரிய பல பெருமைகளை அடைந்து கொள்ளுகிறான். உலகமாந்தர் அவ்வேந்தனை உவந்து புகழ்ந்து வருகின்றார். உண்மையான உதவியால் உயர்ந்த மகிமைகள் உளவாம்.

உலகத்தோரே பலர்மன் செல்வர்;
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்!
எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின், 5

தோட்டி தந்த தொடி மருப்பு யானை,
செவ் உளைக் கலிமா, ஈகை வான் கழல்,
செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே!
பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள்அவை!
வாணுதல் கணவ! மள்ளர் ஏறே! 10

மைஅற விளங்கிய, வடுவாழ் மார்பின்,
வசைஇல் செல்வ! வான வரம்ப!
'இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்,
தருகெஎன விழையாத் தாஇல் நெஞ்சத்து,
பகுத்தூண் தொகுத்த ஆண்மை, 15
பிறர்க்கென வாழ்திநீ ஆகன் மாறே. 58 பதிற்றுப்பத்து

சேர மன்னனுடைய சீர்மை நீர்மைகளை இது கூறியுள்ளது. குற்றம் இல்லாத நல்ல உள்ளம் உடையனாய் எல்லார்க்கும் இரங்கி உதவிப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிப் பிறர்க்கென அவன் வாழ்ந்து வந்தான்; ஆகவே உலக மன்னர் எல்லாரினும் உயர்ந்த கீர்த்திமானாய் ஒளி பெற்று எவரும் புகழ்ந்து போற்ற நின்றுள்ளான் என்பதை இங்கே உணர்ந்து கொள்கிறோம்.

உள்ளத்தில் நல்ல நீர்மை தோய்ந்தவன் இனிய தருமவானாய் உலகத்தில் உயர்ந்து திகழ்கிறான். உயர்வுகள் செயல்களின் இனிமைகளால் செழித்துத் தேசு மிகுந்து சிறந்து வருகின்றன.

தேசத்தைச் சேமமாய் ஆள நேர்ந்த அரசன் முதலில் தன் நெஞ்சத்தை நேமமாய் ஆளவேண்டும்; அங்ஙனம் ஆளானாயின் அவனது ஆட்சி மாட்சியுறாது; தாழ்ச்சியே அடையும். மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கமாய் மகிமை தருகிறது; அந்த அரிய நலத்தை இழந்தவன் எல்லா நலங்களையும் ஒருங்கே இழந்து எவ்வழியும் உய்தி காணாமல் வெவ்வியனாய் இழிந்து போகிறான்.

உள்ளத் தூய்மை தெய்வத்திரு; அதனை எய்தி இன்புறுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jul-21, 8:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே