கலர் கோழிக்குஞ்சு

கலர் கோழிக்குஞ்சு

மழை பஸ்ஸின் மேற்கூரையில் மத்தளம் வாசிக்க தொடங்கிவிட்டது. ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்த தும்புருவின் வீச்சால் மழையின் அனுத்திருதம் திருதமாக மாறிக்கொண்டிருந்தது. இசை மழையிலும் தன்னை நனைத்துக்கொண்டிருந்த தும்புருவை தாண்டியும் தன் முகத்தின் மேல் விழும் மழையின் சாயலை சகாயம் துடைத்துக்கொண்டிருக்கிறான் . வீட்டை விட்டு கிளம்பும்போதே வானம் தெற்கில் முக்காடிட்டிருந்ததை,
“ இன்னைக்கு எப்படியாவது இந்த வேலைய முடிச்சுதான் ஆகனும் “
என்ற எண்ணம் பொருட்படுத்தவில்லை .

“ திருமகள் கலையதூர்தி செயமாது திசை தெய்வமான பலவும் அருநெதி நல்ல நல்ல “ என்று குழந்தையின் பேச்சை நம்பி குடை எடுத்துவராததை , பஸ்ஸில் ஏறிய இரண்டாவது நிமிடமே வானம் பல் இழித்து தவறென்று உணர்த்திவிட்டது. பெருத்த மூச்சுக்காற்றுடன் விரைந்து வந்து தனக்கு டாட்டா காட்டும் மரங்களும் ஒற்றடையாய் படிந்திருக்கும் மலைகளும் சிறிது நேரம் கழித்து சலித்துவிட்டது. எதிர்புற சீட்டில் இரண்டு பெண்கள்; அக்கா தங்கையாக இருக்கக்கூடும். அக்காகாரியின் குறுக்குவெட்டுத் தரிசனம்; நதியாய் சீட்டு வரை வழிந்துகொண்டிருக்கும் தலைமுடி; நனைந்த முதுகில் கிளை நதிகளாய் ஒரு சில தலைமுடிகள்; ஜடை இடுக்கில் வேர் பதித்திருந்த ஒற்றை ரோஜா; வழக்கத்திற்கு மாறான சற்று தடித்த வரப்பாய் வகுடு . அதன் இரு மருங்கிலும் வெடித்து வியாபித்திருந்த கேஷம்; பற்றுக்கொம்பிற்காக சுழன்று கண்ணின் ரப்பையில் தஞ்சம் அடைந்துக்கொண்ட வாறே இருக்கும் முன்நெற்றியின் கற்றை முடி; அதை ஒதுக்குவதுலேயே மும்மரமாக இருந்த பீன்ஸ் விரல்கள் . அப்படி ஒதுக்குகையில் அவளுக்கு மட்டுமே கேட்கும் சத்தமாய் கட்டைவிரல் நகம் பட்டு ஆடும் ஜிமிக்கியின் நடுநாவின் சத்தம்; அவளது அரக்கு நிற சேலையில், சேலையில் மட்டுமே பூக்கும் மூன்று இதழ்கொண்ட விசித்திர வெள்ளை பூக்கள்;கையை கவ்விக்கொண்டிருக்கும் குங்கும நிற இரவிக்கை; அதன் பழமைக்கு சாட்சியாய் இரவிக்கைக்கு சற்று கீழே தோலில் பதிந்திருக்கும் கருப்பு வட்டம்; மிகவும் எச்சரிக்கையுடன் சேலை கட்டும் பாணியின் விளைவாக, அரக்கு நிற சேலைக்கும் குங்கும நிற இரவிக்கைக்கும் இடையில் ஒரே ஒரு சிறிய மின்னல் கீற்றாய் வெளிப்படும் இடுப்பு; அதையும் சில வேளைகளில் மறைக்கும் பூப்போட்ட கர்ச்சிப்
இதற்கு முன்பு இப்படி சேலைக்கட்டும் பாணியை தனக்கு புதுநன்மை அளித்த மதரிடம் பார்த்ததாய்தான் சகாயத்திற்கு ஞாபகம்; ஏதோ ஒரு மெட்டுக்கு தாளம் போட்டுக்கொண்டிருக்கும் பாதம்; தாளத்துடன் லயித்து ஆடும் கொலுசு சக பிரயாணிகளை ஈர்ப்பதை கண்டுகொள்ளாமல் வாயில் ஏதோ முணுமுணுப்பு.சற்று நனைந்த முகத்தில் காதோரம் ஒட்டிக்கொண்டிருக்கும் பவுடர் திட்டுகள்; இவை தான் அந்த குறுக்குவெட்டுத்தோற்றத்தம்மன் அருள்பாலித்த விதம். பக்கத்திலேயே பின்புறத்தோற்றத்தம்மனின் சன்னதி.
அவளுக்கு கூந்தல் நதியாய் வழிந்ததென்றால் இவளுக்கு கடல் அலையாய் சுருண்டு சுருண்டு, அதுவும் சீட்டை அடைந்ததா இல்லை நடுமுதுகிலேயே
கரைக்கண்டுவிட்டதா என்று தெரியவில்லை; அவளுக்கு ஒற்றை ரோஜா என்றால், இவளுக்கு வேப்பமர வேர்களாய் புரையோடியும் வெளிப்பட்டும் நிற்கும் தேன்மிட்டாய் கனகாம்பரச்சரம்; அவளுக்கு விசித்திர வெள்ளைப் பூக்களென்றால், இவளுக்கு அன்னப்பறவைகளின் சரணாலயம்.
ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்திற்கும் பின்புறத்தோற்றத்திற்கும் உள்ளாகவே
இத்தனை வேறுபாடுகளா என்று மிரண்ட சகாயத்தின் விழிகள், இருமல் சத்தம் கேட்டு உருண்டு, ஒரே விதமாக கத்தரிக்கப்பட்ட கிராப் தலைகளையும் விசித்திர வெள்ளை பூக்களும் அன்னப்பறவைகளும் இல்லாத வேட்டி சட்டைகளையும் பார்த்த கணத்திலேயே சலித்து திரும்பிக்கொண்டன. தன்னையும் மறந்து, அந்தக்கரணங்கள் ஒடுங்கி துரியையில் அந்த இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த சகாயம்,
“ அம்பாசமுத்திரமெல்லாம் கீழ இறங்கு “ என்றதை கேட்டவுடன்தான்
தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு கீழே இறங்கினான்.
மழை நின்று வானம் சப்புகொட்டிக்கொண்டிருந்தது. மழைநீர் நிலத்துள் புகாமல் தயக்கத்துடன் உமிழ்ந்துக்கொண்டிருந்தது. சைக்கிள் ஸ்டாண்டை பார்த்து பெருமூச்சுடன் நடக்கத்துவங்கினான். அவனது செருப்புச் சுவடுகள் தாமரைகளாய் நிலத்தில் பூத்து அவனை பின்தொடர்ந்தன; இரண்டு மைல்களுக்கு. அந்த தெருவை பார்ப்பதற்கே சகாயத்திற்கு பிடிக்கும்.
ஆடு புலி, மூணு சீட்டு என்று ஆடுவதற்கென்றே தோள்வரை தணிந்த ஓடுவேய்ந்த சாவடிகளும்; ஜனசந்தடிகளும்; முழுதாக உடுத்தியிருந்த குழந்தைகளும்; படி வைத்து கட்டிய மேட்டுவீடுகளும்; அந்த வீட்டுற்கும் தெருவுக்கும் இடையேயான தூரமும்; அதில் கிடக்கும் வைக்கோல் மலைகளும்; மோட்டார்சைக்கிளும்;இரண்டு வீட்டிற்கு நடுவே உள்ள இடைவெளியும் என்று சகாயம் பிரமிப்பதெற்கென்றே அந்த தெரு தன் சகல வாளிப்பையும் காட்டி நிற்கும். ஆனால் இது ஏழாவது பிரவேசம் என்பதால் அவனுக்கு சலித்துவிட்டது. வேட்டியை வரிந்து கட்ட முடியாததனால் சேற்றை சமாளித்து நடந்து வரும் சகாயத்தின் கவனத்தை,
“ என்ன கொமரா கொட்ற மழையோட இந்த பக்கம் “ என்று சாவடியில் ஷ்கூட் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பெரியசாமியின் குரல் கலைத்தது.

“ ஐயாவ பாக்கலாமுனுதான்…. “ என்றான் சமீபத்திய சகாயம்.
“ இப்பதான் வீட்டுக்கு போனாக போய் பாரு “
பெரியசாமிக்கு வணக்கம் வைத்ததில் சேறு வேட்டியைக் கவ்விக்கொண்டது.
வீட்டுவாசலில் நின்ற சாகயத்தை முதலில் பார்த்தது சுஜா தான்.
“ அம்மா கோழிக்குஞ்சு மாமா வந்துருக்காரு “ என்று அவனுக்கு கட்டியம் சொல்லி வரவேற்றதும் சுஜா தான்.

“ யாரு கொமரனா உள்ள வா “
அந்த தெருவை பொருத்தமட்டும் சகாயம் எப்போதும் குமரன் தான். தலையை குனிந்தே வாசலை தாண்டினான்; பழக்கதோஷம்.

“உக்காரு, ஐயா கொஞ்சம் சோழியா இருக்காக,பிறவு வருவாக . டீ குடிக்கிறியா ? “
என்ற சுஜாவின் அம்மா சகாயத்திடமிருந்து எந்த பதிலும் எதிர்பார்க்காமல் அரிசிப் புடைப்பதில் ஆழ்ந்துவிட்டாள். அவள் எப்போதும் ஒரு ஓரங்க நாடகம்தான்.
“ மாமா இங்க பாரு ராமுவ “ என்று சுஜா ஒரு கோழிக்குஞ்சை காட்டினாள்.
அது ஒரு கோழிக்குஞ்சு; கலர் கோழிக்குஞ்சு;அதுவும் கருநீலக்கலர்.சமீபத்தில் வளர்ந்திருந்த மயிர்நுனி அதன் வெள்ளை நிறத்தை பிரதிபலித்தது. கிட்டத்தட்ட அந்த கோழிக்குஞ்சு சுஜாவின் உள்ளங்கையிலிருந்து எழும் கடல் அலை தான்;அதே வெள்ளை நுரைகளுடன்.
“ குவாக் குவாக் “
அந்த சத்தம் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் சூரியஉதயத்தை கருப்புத் திரையின் ஊடே எதிர்பார்த்து கழுத்தில் சுருக்குடன் நிற்கு நினைவுகளை மீட்டுவந்தது.

✯ ✯ ✯ ✯ ✯ ✯ ✯ ✯ ✯ ✯ ✯
இன்று போல் அன்று மழை இல்லை, ஏறு வெயில் தார் ரோட்டில் பட்டு
கண்ணாடித் துண்டுகளாய் சிதறியது. வெயிலின் அரவணைப்பினால் கண்கள் சுழன்ற இடமெல்லாம் கருப்பு வட்டங்கள்; அம்பாசமுத்திர பஸ்ஸ்டாண்டிலில் இறங்கி நடந்த அந்த இரண்டு மைல்களுக்குள் ஹாஸ்யத்துடன் நிற்கும் ஏழெட்டு வேப்பமரங்களை சுவீகரிக்க வேண்டியதாயிற்று. மரம் என்றாலே அது வேப்பமரம் தான். நரம்புகளாய் புடைத்துநிற்கும் வேர்களும்; காலத்தின் சாட்சியாய் நிற்கும் செதில் உடம்பும்; சுயபிரஸ்தாபம் இல்லாத இலைகளும்; ஆ இலைகள்! தண்டவாளமாய் ஓடும் இலைகளுக்கு முன் ரயிலாய் ஓடும் கடைசி இலை; தங்களுக்குள்ளாகவே சிநேகித்துக்கொள்ளும் பூக்களும்; தங்களை அர்ப்பணித்து தரையில் கிடக்கும் தற்கொலைப் படை தாத்தாப் பழங்களும்; அவற்றின் நடுகற்களாய் நிற்கும் வேப்பம்கொட்டைகளும்;
வேறு எந்த மரத்திடமும் அமைவதில்லை.
அன்றும் தெரு அதே வாளிப்புடன் நின்றது. வாசலை நெருங்கும்போதே வாசனை காலான் மேகங்களாய் வீடு முழுக்க விஸ்தரித்திருந்தது. அயிரையோ ?
“ யாருப்பா நீ “
“ செவ்வந்திபுரத்துல இருந்து வாரேன் . ஐயாவ ஒரு சேதியா பாக்கனும், ஐயா இருக்காகலா “
“ சங்கரன்கோவிலுக்கு போயிருக்காக வர அந்தியாவுமே இருந்து பாத்துட்டு போறியலா, இல்ல…. “
“ ம்ம்ம்.. இருந்து பாத்துட்டே போயிர்ரேனே “

அயிரை இல்லை அயிரையைப் போட்டுப் பிடித்த கெளுத்தி . இரண்டு கெளுத்திகள் பாற்கடலில் நீந்திக்கொண்டிருந்தன. கொழம்பு ரத்தமாய் கசிந்து சோற்றுக்கிடையே ஊடுருவி தட்டின் ஓரங்களில் அங்கலாய்த்துக்கொண்டிருந்தது. சோறு சலித்துப்போய் புகைப்பதை நிறுத்திவிட்டிருந்தது.
“ ஏண்டி இப்ப நீ சோறு திங்கிறியா இல்லயா ? “
“ முடியாது எனக்கு கலர்கோழிக்குஞ்சு வாங்கி தந்தாதான் நான் சாப்புடுவேன் “ என்ற சுஜாவின் குரல் அலமாரிக்குபின்னிருந்து கேட்டது.அவளது குரல் ஒரு குழந்தையின் குரலாக அல்லாமல் வெகுநேரம் படபடவென வெடித்தே தன் ஆற்றலை கரைத்துக்கொண்டு தனது இறுதி மூச்சில் தன் சகாக்களுக்கு முத்தமிட்டு மறையும் கடுகின் ஓலமாகத்தான் கேட்டது.

“ ஏண்டி அவன் இந்த தெருவுல வாரயில வாயில கொழுகட்டையாடி வஞ்சிருந்த, அப்பையே சொல்லித்தொலைக்காம அவன் ஏழு சீம தாண்டுனதுக்கப்புறம் ஏண்டி என் உசுர வாங்குற “
“ அப்ப நான் பத்தாயத்துக்கு பின்னாடி ஒழிஞ்சிட்டிருந்தேன் பரணி மட்டும் போய் வாங்கிட்டு வந்துட்டான் “

“ அப்ப போய் அவன்கிட்டயே கேளு “

வீடெங்கும் வியாபித்த மௌனம் திண்ணையிலும் தன்னை விஸ்தரித்துக்கொண்டது. வெறுமையினாலோ இல்லை சங்கோஜத்தினாலோ அதற்குமேல் சகாயத்திற்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை. வழியில் அதே ஹாஸ்யத்துடன் கைகாட்டும் பல வேப்பமரங்களை நிராகரித்து ஒரு மைல் நடந்ததன் பலன் கண்ணில்பட்டது. மண்பாதையின் விளிம்பில் ஒரு மூங்கில் களி .ஆறு அடி நீளம்; முன்பகுதியில் ஒரு முழம் இடைவெளிவிட்டு நான்கு விரல்கள் நுழைவதற்கு தகுந்தாற்ப் போல் துவாரம்; விரல்களை மூங்கில் வெட்டாமல் இருக்க துவாரத்தின் மேலும் கீழும் தேங்கா பூ துண்டின் எச்சங்கள்; மையத்தில் தோளில் உட்காருவதற்கேற்றார்போல தேங்காபூ துண்டின் சொச்சம் சுற்றிய வளைவு; மறுமுனையில் ஒரு முழம் தள்ளியிருந்த துளையிலிருந்து வழிந்த வேட்டி தொட்டில்; அதில் கட்சிதமாக உட்கார்ந்த்திருந்த கூண்டு; கூண்டின் எட்டு நுனியிலும் சுற்றியிருந்த நைலான் நூல்; இப்படி எல்லாவற்றிலும் ஏழ்மையின்அறிவு தவழ்ந்தது. கூண்டில் இருந்தது ஒரே ஒரு கோழிக்குஞ்சு; கருநீலகலர் கோழிக்குஞ்சு; நாஸ்தி நாஸ்தி என்று ஒவ்வொன்றாய் கடந்து மையத்தில் நின்று, அம்மையமே பெருகி பெருகி உலகை நிரப்பி; அம்மையத்தின் மையத்தில் நின்று மையத்தை வெறும் சாட்சியாய் வேடிக்கை பார்க்கும் சாரம் அந்த கோழிக்குஞ்சிடம் இருந்தது. இது என்ன தவமா? விரக்தியா? வைராக்கியமா? கோபமா? அலட்சியமா? இல்லை இதுதான் உண்மையா? கோழிக்குஞ்சு ஒரு முறை
“ குவாக் குவாக் “
என்று கத்திவிட்டு மீண்டும் வேட்டியை கொத்தத்தொடங்கிவிட்டது. இது என்ன என்னிடம் பேசுகிறதா? கோழிக்குஞ்சு பேசுமா? பேசினால் யோசிக்க வேண்டுமே? யோசிக்க மனம் அவசியம். மனம் இருந்தால் என்ன யோசிக்கும்? மனிதனை போல் எல்லாஜீவராசிகளை பற்றியும் யோசிக்குமா? இல்லை கோழியை பற்றி மட்டும் யோசிக்குமா? கோழியை பற்றி யோசித்தால் என்ன யோசிக்கும்? அந்த கோழி அழகாக இருக்கிறதென்றா? இன்று மதியம் என்ன சாப்பாடு என்றா? ஏன் தன் கணவன் திரும்பி வரவில்லை என்றா? திரும்பி வந்தால் குதுகளிக்குமா? கோழிக்கு உணர்வுண்டா? கோபம் ,சிநேகம், வெறுப்பு,காதல்,காமம், கருணை,ஆசையெல்லாம் உண்டா ? கோழியின் ஆசை எப்படி இருக்கும்? புகழ்,வாழ்க்கைத்துணை,அங்கீகாரமெல்லாம் அதில் இருக்குமா? இல்லை ஒரு சில கொழுத்த புழுக்களுடன் அது நின்றுவிடுமா?
இதெல்லாம் ஏன் மனிதனுக்கு தெரிவதில்லை? இதுதான் படைப்பின் ரகசியமா? இல்லை கண்ணுக்கெதிரே இருந்தும் நாம் காணமறுக்கும் நிதர்சனமா? இதுதான் நிதர்சனமா இல்லை இது வெறும் கோட்பாடா? வெறும் கோட்பாட்டுக்காக அது நிதர்சனமோ? ஒரு வேலை நிதர்சனமே கோட்பாடுதானோ? கோட்பாடுகளில் நிதர்சனம் உண்டெனில் நிதர்சனத்தில் கோட்பாடுகள் ஏதும் உண்டா? உண்டெனில் அந்த கோட்பாடுகளும் நிதர்சனம்தானா? நிதர்சனத்தின் கோட்பாடுகளும் நிதர்சனம்தான் என்று விதி ஏதும் இல்லையே? அப்போது நிதர்சனத்தின் கோட்பாடுகள் எல்லாம் நிதர்சனத்தை காட்டி நிற்கும் பொய்த்தேரா? பொய்த்தேருக்கு மூலம் வேண்டுமே? அப்போது பொய்த்தேர் கோட்பாடுகளுக்கு நிதர்சனம்தான் மூலமா? ஆமெனில் பொய்த்தேர்க்கோட்பாடுகளை நிதர்சனம் சுவீகரிப்பதன் காரணம் என்ன? இதுதான் படைப்பின் ரகசியமா? இல்லை கண்ணுக்கெதிரே இருந்தும் நாம் காணமறுக்கும் நிதர்சனமா? இதுதான் நிதர்சனமா இல்லை இது வெறும் கோட்பாடா?

“ அத பாத்து என்ன யோசிச்சிட்டு இருக்கவ, அது வெறும் கோழிக்குஞ்சு “ என்ற கலர்கோழிகுஞ்சுக்காரனின் குரல் சகாயத்தின் எண்ண சங்கிலியை அறுத்தது.
“ ஓ என்னடா ஒண்டியா இருக்குனு பாக்குறியலா,கழுத சோடி மரின்சுடுச்சு அத வச்சு என்ன பண்ணுவானேனு தூக்கி வெருகுக்கு போட்டேன் “
காலரில் ஒட்டிக்கொண்டிருந்த கருநீல கோழி இறகை அனாயசமாக சகாயத்தின் கை தட்டிவிட்டது.
“ ஒண்டிக் குஞ்சுக்குறதுனால மூணு ரூவாய்க்கு தாரேன், எடுத்துக்கறியலா “

“ ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும்,உங்கள் பிதாவின் சித்தமில்லாமல்,அவைகளின் ஒன்றாகிலும் தரையிலே விழாது ”

ஒன்று தரையில் விழுந்தாயிற்று;அப்படி விழுந்தது தன் ஜோடியின் விலையையும் குறைத்துவிட்டது. இதுதான் பிதாவின் சித்தமோ? பிதாவிற்கு இவன் கோழிக்குஞ்சு விற்பதில் சித்தமுண்டுதானே. இல்லை,இவன் ஒற்றை விலா எலும்பிற்காக பழிவாங்குகிறானா? ஐந்தாம் நாள் ஜெனித்த கோழிக்குஞ்சை ஆறாம் நாள் ஜெனித்தவன் விற்பது விசித்திரம்தான். இவன் ஏன் ஒன்று இறந்துவிட்டதென்று மூன்று ரூபாய் கேட்கிறான்? இந்த மூன்று ரூபாய் எதற்கு? கோழிக்குஞ்சிற்காகவா? கோழிகுஞ்சுக்கெனில் இவன் செத்த கோழிக்குஞ்சிற்காக வெருகுகளிடம் மூன்று ரூபாய் கேட்கவில்லையே. கோழிகுஞ்சுக்கில்லையெனில்,அந்த மூன்று ரூபாய் உயிருக்காகவா? அது என்னிடமே இருக்க அதை காசு கொடுத்து வாங்குவானேன்? அந்த மூன்று ரூபாய் கோழிக்குஞ்சிற்க்கும் இல்லை உயிருக்கும் இல்லை என்றால் எதற்கு தான் அந்த மூன்று ரூபாய்? இவன் எதைதான் என்னிடம் இழக்கிறான் மூன்று ரூபாய் பெறுவதற்கு? கோழிக்குஞ்சையா? இழக்கக்கூடாதென்றால் பிறகு அதை விற்பானேன்? நான் எதை பெறப்போகிறேன்? கோழிகுஞ்சையா? அது அவ்வளவு முக்கியமெனில் அதை அவன் விற்பானேன்? பிதாவே நான் இவனிடம் எதை தான் இழக்கபோகிறேன்?

“ என்ன மூணு ரூவா இழக்க இம்புட்டு யோசிக்கிறீய, சரி ரெண்டாரூவாக்கு வாங்கிக்கிறீயலா? “
அந்த அரைரூபாய் தள்ளுபடியிலேயே மத்தேயு மறைந்துவிட்டார்.
கோழிக்குஞ்சை சட்டைப்பாக்கட்டில் போட்டுக்கொண்டு நடக்கத்துவங்கிவிட்டான். திரும்பி போகும் வழியும் அதே ஒரு மைல் தொலைவுதான். ஆனால் இப்போது தனியாக இல்லை புதிய “ குவாக் குவாக் “ நண்பனுடன்.

“ உன் பேர் என்ன? “
“ குவாக் குவாக் ”
“ ஓ அப்படியா,என் பேரு சகாயம்.நீ இந்த ஊரு தானா? “
“ குவாக் குவாக் “
“ நான் செவ்வந்திபுரம் “
“ குவாக் குவாக் “
“ நான் ஏன் இங்க வந்தேன்னு கேக்குறியா ? நான் ஒரு சோழியா ராமசாமி ஐயாவ பாக்கலாம்னு வந்தேன் “
சட்டைப்பாக்கட்டில் இருந்தக் கோழிக்குஞ்சு தான் இதுவரை அறிந்திராத இதயத்துடிப்பை புழு என்று வியந்து சகாயத்தின் நெஞ்சில் கொத்துவதும் ஏமாந்து கத்துவதுமாகவே இருந்தது.
“ உனக்கு மத்தேயு 10:31 தெரியுமா ?
ஆகவே பயப்படாதிருங்கள் ; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் “
“ குவாக் குவாக் “
“ நான் உன்னைய விட எந்த விதத்தில ஒசத்தி ?”
“ குவாக் குவாக் “
“ நீ எந்த விதத்துல என்னை விட கம்மி ?“
“ குவாக் குவாக் “

வழியில் எப்போதுமே ஹாஸ்யத்துடன் கையசைக்கும் பல வேப்பமரங்களை தாண்டி, வீட்டை அடைகையில் ராமசாமி வீட்டிற்கு வந்திருந்தார்.

“ அப்புறம் கடைசியில அந்த சூனியக்காரிகிட்டயிருந்து ராசகுமாரிய ராசகுமாரன் காப்பாத்திட்டான் “
“ அப்ப அந்த சூனியக்காரிக்கு என்ன ராமு ஆச்சு “
“ கடைசி வாய் வாங்கிக்க அப்பதான் சொல்லுவேன். ஆ காட்டு “

தட்டில் இருந்த எல்லா சோறும் தீர்ந்து விட்டது. சுஜாவின் கண்களில் நண்டின் கால்களாய் ரேகை மட்டும் புரையோடியிருந்தது. சகாயம் சட்டை பாக்கட்டிலிருந்து கோழிக்குஞ்சை வெளியே எடுத்ததுதான் தாமதம்
“ கையால் எடுத்தது கண்டார்; இற்றது கேட்டார் “ என்பதற்கேற்ப,
“ அம்மா கலர்க்கோழிக்குஞ்சு வந்துடுச்சு “ என்ற ஆரவாரம் தான் கேட்டது.
“ யாரடி வாங்கியாந்தது உங்க அப்பாவா ? “
“ ராமு ஒன்னு வாங்கியாரல “
“ எத்தன தடவடி சொல்றது இனிமே அப்பாவ ராமுனு சொன்ன கொல்லி கட்டைய எடுத்து சூடு வச்சிருவேன் “
“ வெவ்வவெவ்வவ “ என்று செங்குரங்காய் முகைத்தை வைத்து ஒழுங்குகாட்டிவிட்டு சுஜா கொல்லைக்கு ஓடிவிட்டாள்.

“ நீங்க தான் செவ்வந்திபுரத்துலருந்து வந்தவகலா “
“ ஆமாயா “
“ பேரு “
“ சகாயம் “
“ சகாயமா? “
“ ம்ம்ம்…. இல்ல கொமரன் “
“ நமக்கு இந்த வித்தியாசமெலாம் கிடையாது சகாயம். ஊரு எப்படி வேணா கிடக்கட்டும். ஆனா நான் அப்படி கிடையாது. 1905ல சக்கரவர்த்தினி வந்தப்ப வருஷம் ரெண்டு ரூவா சந்தா கட்டி வாங்குனது இந்த ஊருலே என் தாத்தந்தான். மாசமாச்சுன்னா வாசல்லேயே போஸ்ட்மேன் வர வரைக்கும் உட்கார்திருப்பாகலா. தற்குரிங்குறதுனால வந்த போஸ்ட்மேன பத்திரிக்கைய முழுசா படிச்சிக்காட்டுனாதான் விடுவாகலா.
எங்க அப்பன் வைத்தியநாத ஐயர் மீனாட்சியம்மன் கோவில்ல நுழையுறப்ப அந்த கூட்டத்துல இருந்தாக. நான் ஒன்போது வயசு பயலா என் அப்பன் வேட்டிய புடிச்சுகிட்டே நிக்கேன். ஊரு எப்படி வேணா இருக்கட்டும் நான் அப்படி கிடையாது. செவந்திபுரத்துல என்ன பண்ரீய? “

“ ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வர அப்பாவும் நானும் பெரியகௌண்டர் நிலத்துல வேலைபாத்துட்டு இருந்தோம்,காமராசரு சட்டம் போட்டதுல சர்க்காரு கொஞ்சம் நிலம் கொடுத்துச்சு. ஆக்க தெரிஞ்ச சனத்துக்கு விக்கத்தெரியல.அதான் போன மாசம் நிலைத்த வித்துட்டேன். புழைக்க ஒரு வழி தேடிதான் ஐயா முன்னாடி நிக்கேன். “

“ நான் என்ன பண்ணனும் “
“ அம்பாசமுத்துர பஸ்ஸ்டாண்ட் சைக்கிள்ஸ்டாண்டு குத்தகைக்கு வந்துருக்கு, ஐயா சொன்னா கிடைச்சுடும்னு விளிச்சாக.அதான் …. ”
“ இதுக்கு ஏன் தயங்குரீய, சிவாரிசு தான கேக்குரீய . ரூவா கேக்குறவனே நெஞ்ச நிமித்திக்கிட்டு கேக்குரான். இதுக்கு போய் தயங்குரீய. நான் ஒருமுற விளிச்சுவக்கேன், நம்ம பேச்சுக்கு மறுபேச்சில்ல, ரூவாயெல்லாம் வச்சிருக்கீகல? “
“ ரூவாயெல்லாம் இருக்குயா “
“ அப்புறம் என்ன நான் விளிச்சுவக்கேன் “

இராமசாமி சம்பாஷணையை முடிக்கும் அறிகுறியாக ஒருமுறை வீட்டை திரும்பி பார்த்தார்.
“ அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன்யா “
“ நல்லது போயிட்டுவாங்க “

அன்றிலிருந்து சகாயம் இராமசாமியிடமிருந்து அவரது தாத்தாவின் சக்கரவர்த்தினி கதையையும், மீனாட்சியம்மன் ஆலயநுழைவு கதையையும் பல முறை கேட்டாயிற்று காலப்போக்கில் அதனுடன் சில ஜாதிச்சண்டைகளும் அதற்க்கு அவர் சொன்ன சமயோஜிதமான தீர்ப்புகளும் சேர்ந்திருந்தன. சகாயம் வரும்போதெல்லாம் மாறியிருந்தது கலர்க்கோழிக்குஞ்சும் சுஜாவும்தான்.
“ மாமா பரணிகிட்ட இத காட்டுனனா அவன் உடனே காய் விட்டுட்டான் “ என்றாள் ஒருமுறை.
“ மாமா நான் இதுக்கு ராமுனு அப்பா பேர வச்சத்துக்கு, அம்மா வையுரா மாமா “ என்றாள் மறுமுறை
“ மாமா பரணி கிட்ட இருந்த கோழிக்குஞ்சு கழனி தண்ணில விழுந்து சாயம் போயிடுச்சு.அவன்கிட்ட கேட்டா நம்ம ராமுவும் ஒரு நாள் சாயம் போயுடும்னு சொல்றான். அம்மாவும் ராமு சாயம் போயுடும்னு சொல்றா மாமா, நீ சொல்லு மாமா ராமு சாயம் போவாதுல “ வாழ்நாள்நம்பிக்கையுடன் தன்னுள் புதையவிருக்கும் நீர்துளிக்காக விழித்திருக்கும் சிப்பியாய் சுஜாவின் கண்கள் விழித்தது.
“ ராமு சாயம் போகாதுமா இது சாயம் போகாத கோழிக்குஞ்சி “
“ அம்மாகிட்ட சொல்லு மாமா அவ கேக்கமாட்டங்குறா “


“ மாமா நீ சொன்ன மாரியே ராமு சாயம் போல மாமா “ என்ற சுஜாவின் குரல்தான் காத்தாடியாய் நினைவுகளில் அனாயசமாக அலைந்த மனத்தை இழுத்தது.
ராமுவின் கருநீலக்கலர் கண்ணில் தைத்தது ; அதன் நவாப்பழம் வெதும்பிய நிறம்,சிருஷ்க் கோளாறின் சாட்சியாய் அழியாமல் திகட்டியது. சாயச்சட்டியில் கடைசியாக தேங்கிய சாயத்தை ஏற்றுக்கொண்ட சில கோழிக்குஞ்சுகளுள் ராமுதான் பிரதானமானதாக இருக்கக்கூடும்.
“ குவாக் குவாக் “ இப்போதெல்லாம் சகாயத்திற்கு ராமு பேசுவதாக தோன்றுவதில்லை அது வெறும் “ குவாக் குவாக் “ தான்.
பின்வாங்கிய மழை மீண்டும் புது வியூகத்துடன் தாக்கத் துவங்கிற்று.

“ வா கொமரா என்ன இந்த மழையுல வந்துருக்க, நான் தான் சொன்னல விளிச்சுவக்கேனு. என் மேல நம்பிக்கை இல்லயாக்கும் “ என்று மோட்டார்சைக்கிளிலிருந்து இறங்கியவாறே இராமசாமி அங்கலாய்த்தார். சகாயம் மூன்றாவது சந்திப்பிலேயே குமரனாகிவிட்டான்.

“ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லயா. நாள் நெருங்கிடுச்சு அதான் ஒரு தடவ சொல்லிட்டு போகலாமுனு..”
“ அது செரி, அதான் நான் சொல்லிட்டேன்ல விடு எல்லாம் நல்லா தான் நடக்கும், மழை பேயுதே கொட எடுத்தாந்தியா இல்லயா? “

“ இல்லயா, நான் அப்படியே ஒதுங்கி ஒதுங்கி போயிருவேன் “
“ ம்ம்ம் .. சரி “

மீண்டும், சகாயத்தின் சாட்சியாய் அவனை தொடர்ந்த தாமரைப்பூ செருப்புச் சுவடுகளை மழைநீர் ஊடுருவி அழித்துக்கொண்டே விரைந்தது.

“ அவன் தான் இத்தன தடவ வாரான்லே, அத ஒரு தடவ பாத்தியனா என்னதான் கொறஞ்சிட போவுது ?“
“ நீ சும்மா கடடி முருகேசன் இருக்கான்,நம்மாளு. அவன விட்டுப்போட்டு இவனுக்கா நாம செய்யுறது “

“ ராமு!“
“ என்னம்மா ஆச்சு ? “
“ ராமு ….ராமு… மழையில நினஞ்சு…. சாயம் போயிருச்சு “
“ கழுத இதுக்கா இப்படி கத்துனவ, தண்ணி பட்டா சாயம் போவதா ? “
“ கோழிக்குஞ்சு மாமா சாயம் போவாதுனு சொன்னிச்சு “
“ அவன் கிடக்கான் .. நாளைக்கு ராமுவுக்கு திரும்பி சாயம் பூசிக்கலாம் விடு .“

✸ ✸ ✸ ✸ ✸ ✸ ✸ ✸✸

எழுதியவர் : சீரா (30-Jul-21, 8:00 pm)
சேர்த்தது : Sirah
Tanglish : color kolikkunju
பார்வை : 89

மேலே