தலைவன் முருகன் தமிழுள்- வெண்டுறை

உலகின் தலைவன் முருகன் தமிழுள் வீற்றிருக்க
மனதில் கலக்கம் கொள்ளுதல் வேண்டாம் யாருமே
தினமும் அவனை நினைக்கும் நாழியில் வருவான்
வினைகள் தொடங்கும் நிலையில் அவனைத் துதிப்பின்
அனைத்தும் சுபமாய் முடியும் உணரலாமே --- (1)

அறிவின் குருவாய் ஆகியே நின்றநல் இறைவன்
பிறவியின் ஒழுக்கம் காக்கவே சென்னியில் நின்றே
செறிவாய் தத்துவ விளக்கம் கொடுக்கும் முருகனின்
நிறைவு மிகுந்த உருவத்தைக் காண்பதும் தவமாம்
பிறையாய் திருநீரு புனைந்த தோழனவன் --- (2)

விழையும் எவர்க்கும் நீரென இளகியே வருவான்
மழையாய் கருணைப் பார்வைக் கொண்டே காண்பான்
தழைக்கும் வகையில் நம்புவோர் வாழ்க்கையை மாற்ற
பிழையைக் களைந்து போற்றும் நபராய் எவரையும்
மாற்றுவது அவனின் பெரிய கடமையே. --- (3)

முக்காலம் அறிந்த சிறந்த ஞானத்தின் மூலமவன்
எக்காலம் அழைப்பினும் நிற்காமல் வருவான் விரைந்து
சொக்கத் தங்கத்தின் மறுவுறு நிறையழகு முருகன்
பக்கத்தில் இருந்தே பலனைக் கொடுப்பான் நாளுமே
உக்கிர வேலுடன் உள்ளவனை பணிவோமே. --- (4)

தாயுள்ளம் கொண்ட தரணியின் முதல்வன் அவனே
வாயுவின் மீதேறி வந்திடும் கலையை அறிந்தவன்
தேயாத தெளிவான அன்பினை பலமாய்க் கொண்டவன்
ஓயாத தமிழுள் இளமைமிகு உயிராய் இருப்பவன்
மாயவன் முருகனை மனதுள் துதிப்போம். --- (5)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Jul-21, 10:23 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 33

மேலே