கொரோனா – தொடாதே, தொற்றே இரண்டாம் அலை நூல் ஆசிரியர் மருத்துவர் SG பாலமுருகன், MS, MCH, FRCS, PhD, நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கொரோனா – தொடாதே, தொற்றே !

இரண்டாம் அலை !

நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D.,
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு குரு மருத்துவமனை
******

நூலாசிரியர் மருத்துவர் S.G. பாலமுருகன் அவர்கள் மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிவிட்ட குரு மருத்துவமனையின் தலைவர். உழைப்பால் உயர்ந்த வல்லவர், நல்லவர். இன்முகத்திற்கு சொந்தக்காரர், எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் இனியவர். இலக்கிய விழாக்கள் நடத்தும் இலக்கிய ஈடுபாடு மிக்க மருத்துவர். இந்த நூலை குரு மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர், இனிய நண்பர் கலாம் கே.ஆர். சுப்பிரமணியம் நேரில் கொண்டு வந்து கொடுத்தார்.

கொடிய கொரோனா தொற்றை உலகில் யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்பதைப் போல கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என வந்து கோரத்தாண்டவம் ஆடி விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பறித்துச் சென்றது.

மருத்துவர் S.G. பாலமுருகன் உள்ளிட்ட மருத்துவப்படை குரு மருத்துவமனையின் மூலம் மரணவாயிலுக்குச் சென்ற பலர் திரும்பி வந்து உயிர் பிழைக்க வைத்த அரும்பணி ஆற்றினார்கள். நானும் சில நண்பர்களை அனுப்பி வைத்தேன். உயிர் பிழைத்து வந்து தற்போது நன்றாக உள்ளனர். இந்த அனுபவத்தை வரலாற்று ஆவணமாக இனிவரும் தலைமுறைக்கு பாடம் கற்பிக்கும் விதமாக சிறப்பாக தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுகள். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, தரமான தாள்கள் என மிக நேர்த்தியாக அச்சிட்டு பதிப்பித்து வழங்கி உள்ளார்.

ஆசிரியரின் தலையங்கத்தில் உள்ள இறுதி வைரவரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. “மீண்டும் ஒரு அலை வரக்கூடாது என்பதே எங்களைப் போன்ற மருத்துவர்களின் எண்ணம். ஒருவேளை அப்படி ஒரு அலை வந்தால், அந்த வரப்போகும் மூன்றாவது அலையில் மனிதகுலம் எப்படி மீண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் எழுதப்பட்டதாகும் இந்த நூல்.”

மருத்துவர் S.G. பாலமுருகன் அவர்கள், தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய கல்வித்தந்தை S. குருசாமி பிள்ளை அவர்களின் மகன். தந்தைக்கு இந்த நூலை காணிக்கை ஆக்கி உள்ளார்.

என் மாதா+பிதா+குரு+தெய்வம் = என் தந்தை. நான்கும் சேர்ந்த கலவையே என் தந்தை என்று எழுதி பெருமை சேர்த்து உள்ளார். பாராட்டுகள். நூலிற்காக உழைத்த அனைவருக்கும் மறக்காமல் பெயர் குறிப்பிட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார். பொய் சொல்லா மாணிக்கம் என்று போற்றப்பட்ட துணைவேந்தர் வ.சுப. மாணிக்கனார், புதுக்கவிதை கோமான் கவிஞர் மீரா, எது வேண்டும், எது இல்லை என்ற இரண்டு கவிதைகளுடன் தொடங்கி இருப்பது சிறப்பு,

தமிழ் மூதறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் சிறப்பான அணிந்துரை நல்கி உள்ளார். வேந்தர் கோ.விசுவநாதன், மருத்துவர் S. கீதாலெட்சுமி, மருத்துவர் T.S. செல்வ விநாயகம், திரு. N. ஜெகதீசன், முனைவர் ஞா. சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உள்ளனர்.

நிகழ்வுகள் : உண்மையில் நிகழ்வுகள் காட்சிகளாக விரிகின்றன. அப்பா இழந்து அம்மாவோடு வாழ்ந்த இரு மகன்கள். அம்மாவிற்கு கொரோனா தொற்று சிகிச்சை பெற்ற போதும் சிறுவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் மருத்துவமனை வாசலிலேயே படுத்து இருந்ததும், சுற்றி சுற்றி வந்ததும், கடைசியில் அம்மாவும் இறந்துவிட அனாதையாகி விட்ட சிறுவர்கள். படிக்கும்போது நம் கண்களில் கண்ணீர் வருகின்றது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல எழுதி உள்ளேன். இதுபோல் பல நிகழ்வுகள். பிழைத்து வந்து உயிர் வாழ்ந்த நிகழ்வுகள். வாழ்வில் யாராலும் மறக்க முடியாதது கொரோனா தொற்று. முதல் அலை முடிந்துவிட்டது என்று காலரை தூக்கி விட்டு சுதந்திரமாக எல்லோரும் நடந்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டாம் அலை வந்து சுருட்டி விட்டது சுனாமி போல. மதுரையில் மருத்துவமனை கிடைக்காமல் அலைந்த நிகழ்வுகளும் நடந்தது. நான் வேண்டிக்கொண்டு சிலரை குரு மருத்துவமனையில் அனுமதித்தனர். நன்கு உயிர் பிழைத்தும் வந்தனர்.

பேரிடர் பெருந்தொற்று காலத்தில் மிகப்பெரிய தொண்டினை அர்ப்பணிப்பு உணர்வுடன் குரு மருத்துவமனை நிகழ்த்தியது. அந்த மரண போராட்டத்தை நினைவில் வைத்து, குறித்து வைத்து வரலாற்று ஆவணமாக நூலாக்கி இருக்கிறார். பாராட்டுகள். இந்நூல் படித்த பின்னர் இனியாவது நாம் கவனமாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒருவேளை மூன்றாம் அலை வந்தால் அதையும் எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இந்த நூல் வழங்கி உள்ளது. பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன. மறக்க முடியாத கொரோனாவை மறக்க முடியாதபடி நூல் வடித்துள்ளார்.

உலக அளவில் எந்த எந்த நாடுகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா வந்து எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேர் இறந்தனர் என்ற புள்ளி விபரங்கள் யாவும் உள்ளன. இந்தியாவில் தென்மாநில நிலவரங்கள் தமிழ்நாட்டில் நகரம் வாரியான விபரங்கள் என அனைத்துப் புள்ளி விபரங்களும் உள்ளன.

கோவிட் வைரஸ் கொரோனா என்றால் என்ன? அது பரவும் விதம் தொற்றின் அறிகுறிகள், தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? நமது கடமை என்ன? தொற்றுகாலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்ன? என்ன யோகா செய்யலாம்? நோய் எதிர்ப்பு சக்தியின் அவசியம் என்ன? தொற்று எப்படி நம்மை பாதிக்கிறது. கண்டறிவது எப்படி? சிகிச்சை முறைகள் என்ன? வீட்டில் தனிமைப்படுத்தல், இணை நோய்கள் என்ன? புதிய நோயான கருப்பு பூஞ்சை பற்றியும் தொற்று வந்த கர்ப்பிணிப் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என யாவும் விளக்கமாகவும் விரிவாகவும் உள்ளன.

கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசியே வழி என்று உலகமே முடிவெடுத்து செயல்படுத்தி வருகின்றனர். தடுப்பூசி பற்றிய விபரம், தொற்றால் இறந்தவர்களின் உடலை கையாள்வது எப்படி? தொற்று தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள் குரு மருத்துவமனை தலைவர் S.G. பாலமுருகன் அவர்களின் மனைவி மருத்துவர் B. கல்பனா அவர்கள் கணவருக்கு உற்ற துணையாக இருந்து உடன் பணிபுரிந்த மருத்துவர்கள் அனைவரின் புகைப்படமும் நூலில் உள்ளது. இவர்கள் சந்தித்த சவால்கள், வென்ற விதம் அனைத்தும் நூலில் உள்ளது. அரிய பொக்கிசமாக வைத்து படித்து பயன்பெற வேண்டிய ஒப்பற்ற நூல்.

இப்படி ஒரு தகவல் களஞ்சியமாக உள்ள ஒரு நூலை இதுவரை நான் படித்தது இல்லை.

******

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (31-Jul-21, 10:17 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 100

சிறந்த கட்டுரைகள்

மேலே