உள்ளத்தே நீர்மை படிந்திலதேல் நீடியவன் நிலை நீள்கானல் நீராகி ஒழியும் - தகவு, தருமதீபிகை 860

நேரிசை வெண்பா

கோடி வெளிவேடம் கொண்டாலும் உள்ளத்தே
பாடிய நீர்மை படிந்திலதேல் - நீடியவன்
நின்ற நிலையெல்லாம் நீள்கானல் நீராகி
ஒன்ற ஒழியும் ஒருங்கு! 860

- தகவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

புறத்தே ஆடம்பரமான கோலங்கள் பல கொண்டாலும் அகத்தே நல்ல நீர்மை இல்லையேல் அவை யாவும் அவமானமாயிழிந்து படும்; அவனும் அவலமாய் அழிந்து படுவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

வேடம் என்ப்து ஆடை அணி முதலியவற்றால் வெளியே பகட்டாய்க் கொள்ளும் கோலம். உள்ளத்தில் தகுதியுடையவர் அதற்குத் தக்கபடி புறத்தே புனைந்து கொள்ளின் அது நல்ல தவ வேடமாம்; அங்ஙனம் இல்லாமல் கள்ளமாய் வனைந்து கொள்ளின் அது பொல்லாத அவ வேடமாய்ப் புலையே தரும்.

அயலார் கண்டு தம்மை உயர்வாக மதிக்கவேண்டும் என்னும் மயலான ஆவல் எல்லாரிடமும் இயல்பாய் அமைந்துள்ளது. மனிதனுடைய உண்மையான பெருமை புறப்பொருள்களில் இல்லை. அவனது அகத்திலேயே அமைதியாய் உள்ளது.

நல்ல எண்ணங்களோடு நல்ல காரியங்களை எவன் செய்து வருகிறானோ அவன் நல்லவனாய் உயர்கிறான். அங்ஙனம் இல்லாதவன் பொல்லாதவனாய் இழிந்து புலையுறுகின்றான்.

தன்னலமே நாடித் தான் ஒருவனே சுகமாய் வாழ வேண்டுமென்று அவாவி உழலுகின்றவன் யாண்டும் உயர்ந்த மதிப்பை அடைவதில்லை. பிறர் நலமுற உரிமையோடு கருதுகின்றவனே பெரிய மனிதனாய் அரிய மேன்மைகளை அடைகின்றான்,

தன் வயிற்றை நிறைத்துச் சுய நலமாய்த் திரிபவன் ஒரு நலமும் காணாமல் ஊனமாய் ஒழிந்து போகிறான். அயலாரைப் பேணுபவன் உயர்நலங்களை ஒருங்கே காணுகிறான். பிற உயிர்கள் இன்புற அன்பாய் ஆதரித்து வருபவன் அதிசய தருமவானாகிறான்; ஆகவே அந்தப் புண்ணிய வேந்தனை யாவரும் ஆவலோடு எண்ணி ஏத்துகின்றார். சீவர்கட்கு இதம் செய்பவன் தேவனாம்.

உறையூரிலிருந்து அரசு புரிந்துவந்த சோழ மன்னன் இறந்து போனான்; அப்பொழுது அவனை நினைந்து பொத்தியார் என்னும் புலவர் பெருமான் பாடிய பாடல் ஒன்று அயலே வருகிறது.

நேரிசை ஆசிரியப்பா

பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
5 மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
10 வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னல்லிசை சூடி
நடுக லாயினன் புரவல னெனவே 221 புறநானூறு

அரிய பல புகழும் உயிர்கள் பால் பேரன்பும் உடைய செங்கோல் வேந்தனை எமன் கொண்டு போய் விட்டான் என அவனை வைது நொந்து புலவர் அழுதிருக்கும் நிலையை அறிந்து இங்கே நாம் வருந்தி நிற்கிறோம். இத்தகைய உத்தம அரசரைப் பெற்றுள்ள மக்கள் பெரிய பாக்கியவான்களாகின்றார், குடை, கொடி, முடி முதலிய அரிய ஆடம்பரங்களால் அரசன் பெரியவன் ஆகான்; உள்ளத்தில் அமைந்துள்ள நல்ல குணங்களாலேயே எல்லாரும் உவந்து புகழ அவன் உயர்ந்து திகழ்கிறான்.

நேரிசை வெண்பா

பள்ளத்தில் வெள்ளம் படிந்து பயனருளும்
உள்ளத்தில் நீர்மை உயர்வாகும் - பள்ளமிலா
மேட்டில்நீர் நில்லாது மேட்டிமையும் அப்படியே
காட்டும் துயரம் கடுத்து!

பள்ளத்தில் வெள்ளம் தங்கியுள்ளது போல் மனிதன் உள்ளத்தில் நல்ல நீர்மைகள் நிறைந்திருந்தால் எல்லாரும் அவனைப் புகழ்ந்து போற்றுவர்; அங்ஙனமின்றி மேட்டு நிலம் போல் மேட்டிமை காட்டிச் செருக்கி நின்றால் யாவரும் இகழ்ந்து எவ்வழியும் அவனை வெறுப்பர் என இது உணர்த்தியுளது.

உயர்ந்த பதவியை அடைந்துள்ள அரசன் உள்ளம் பதமாய் உயிர்களுக்கு உதவி புரிந்து வரவேண்டும். செய்துவரும் ஆதரவின் அளவே ஆட்சி மாட்சியாய்ச் சிறந்து வருகிறது.

மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை (நறுந்தொகை) என ஒரு மன்னன் இன்னவாறு அரசு நிலையைக் கூறியுள்ளான்;

மன்னுயிரைக் காப்பது மன்னன் கடமையாதலால் அதனை உரிமையோடு செவ்வையாய்ச் செய்த போதுதான் தெய்வ அருளை நேரே அவன் எய்த நேர்கிறான்.

Truth is a divine word. Duty is a divine law. - Douglas

சத்தியம் கடவுள் வார்த்தை; கடமை கடவுளின் கட்டளை என்னும் இது இங்கே உறுதியாய் நன்கு கருதியுணரவுரியது.

ஆண்டவனுடைய ஆணையை ஆளுகின்றவன் நாளும் பேணி ஒழுகுவது காணியாய் வந்தது. தக்கவன் என்று கருதித் தந்த உரிமையைத் தகவோடு ஆற்றி வருகிற அரசன் யாண்டும் ஏற்றம் மிகவுடையனாய் உலகம் போற்ற ஒளிபெற்று நிற்கிறான்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-21, 11:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே