அன்றைய வெற்றியும் ஆறாத வடுகளும்

அன்றைய வெற்றியும்... ஆறாத வடுகளும்....

சென்னையில் குடியேறிய சிலநாட்களில் , 1971'ல் நாங்கள் குடியிருந்த ஆதம்சாகிபுத் தெருவில் அருகில் உள்ள சின்னச் சின்ன கடைகளுக்கு மட்டும் சென்றுவர அம்மா எனக்கு ஏவல் செய்வார்கள் ... குறிப்பாக அதே தெருவில் சின்னத் தாத்தா (அப்பாவின் ஒன்றுவிட்டச் சித்தப்பா திரு.P.வைதிலிங்கம் அவர்கள் ) வைத்திருந்த மளிகைக் கடைக்கே பெரும்பாலும் செல்ல உத்தரவு எனக்கு ....

அன்று மாலை இருள் சூழும் நேரம், இரவு உணவு சமைக்க அம்மா தேவையான சில மளிகைப் பொருட்களை வாங்க சிறு துண்டுச் சீட்டில் ஒரு பட்டியல் எழுதி கொடுக்க... நானும் சின்னத் தாத்தா கடைக்கு ஓட்டமும் நடையுமாக சென்றேன்... (காரணம் , அப்போது கடைகள் எல்லாம் ஏழு மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவாம்)
கடையின் முன் வரிசையில் அரிசி மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும்....அதற்கு மேல் சிறு மர ரேக்கில் பட்டர் பிஸ்கட் , பெப்பர்மெண்ட் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், கடலை மிட்டாய், சிவப்பு ஜீரா மிட்டாய், கப்பல் பிஸ்கட் என கண்ணாடி பாட்டில்களில் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.... நடுவில் தொங்கும் இரும்பு தராசுத் தட்டுகளுக்கு பக்கத்தில் ஒரு சிறு நாற்காலியில் தாத்தா எப்போதாவது அமர்ந்திருப்பார்.....,, நான் கடையில் நின்றால், தாத்தாவிற்கு தெரியவே தெரியாது.... நான் எட்டி எட்டி குதித்து , தாத்தா தாத்தா என்று குரல் கொடுத்தவாரே பட்டியலை நீட்டினேன்....

"அட, அமுதாளா.... சீக்கிரம் சீட்டக்குடு... கடைய மூடணுமே இப்ப... கொஞ்ச முன்னாடியே வந்திருக்லாம்ல...?" எச்சரித்தவாரே முன்னே இருந்த மரப்பலகை தடுப்பை விலக்கி குனிந்து பட்டியலை என்னிடமிருந்து வாங்கி, பொருட்களை வேகவேகமாக காகித்த்தில் பொட்டலம் கட்டி, சணல் கயிற்றால் சுற்றினார்....

"அம்மா பை கொடுத்திருக்காங்கலா...? வினவியவண்ணமே, நான் நீட்டிய பையை வெடுக்கென்று வாங்கி , வீதியின் இருபுறமும் விழித்து பார்வையை வீசியபடியே கட்டிய பொட்டலங்களை பை உள்ளே அவசர அவசரமாய் திணித்தார்..... சட்டென கடையிலிருந்து இறங்கி நான்காக மடிக்கக் கூடிய கடையின் பச்சைநிற மரக்கதவில் இரண்டை மட்டும் மூடினார்.... நான் கொடுத்த காசையும் வாங்கி, வேகமாக எண்ணிவிட்டு, "கணக்கு பாத்து மீதிய நாளைக்கு தரேன் தாத்தா, நீயும் வாய்ப்பரப்பு பாக்காம சீக்ரமா வீட்டுக்குப்போய் சேரு " என்று எச்சரித்தார்.... ஆனால் நானோ வாடிக்கையாய் அவர் எனக்குத் தரும் பொட்டுக்கடலைக்காய் என் குட்டிக் கையை நீட்டினேன்.... தாத்தாவின் அவசரம் எனக்குப் புரியவில்லை... அவருக்கும் எனக்கு 'இல்லை போ' என்று சொல்ல மனம் வரவில்லை.....
மீண்டும் எட்டி ரேக்கில் இருந்த பாட்டிலை திறந்து எடுத்து , என் பிஞ்சுக் கைகளிலிருந்து கீழே சிந்தாதவண்ணம் , என் கையை அவர்கைகளில் தாங்கிப் பிடித்தபடி பொட்டுக்கடலையை நிரப்பினார் .... நானோ அத்தோடு விடவில்லை .... "தாத்தா கூட கொஞ்சம் கருப்பட்டியும் குடுங்க" மெதுவாய் கேட்டபடி, பையை என் முழங்கை வரை தள்ளிவிட்டு அடுத்தக் கையையும் நீட்டினேன்..... தாத்தா பொறுமையை இழந்துவிட்டார்.... இருந்தாலும் மறுபடியும் கடைக்குள் புகுந்துச் சென்று சிறு கருப்பட்டித் துண்டை எடுத்துப் கொடுத்து, " நிக்காம ஓடிப்போ வீட்டுக்கு " என்று சொன்னவாரே , கடையை முழுதாய் அடைத்து, குறுக்கும் நெடுக்காமான இரு இரும்புக் கம்பிகளை ஓரத்தில் இருந்த வளையத்தில் பொறுத்தி பெரிய இரும்புப் பூட்டை போட்டார்.... நானோ அங்கேயே நின்று பொட்டுக்கடலையையும் கருப்பட்டித் துண்டையும் ஒன்றாய் கொஞ்சம் வாயில் போட்டு சுவைத்துக் கொண்டிருந்தேன்.....
"ஏய், என்ன இன்னு இங்கனையே நிக்குற? இப்ப போலீஸ் வரும், வெளிய வெளாடிட்ருக்க பிள்ளைகளெல்லா லத்தி வச்சி அடிப்பாக, பெறவு ஜெயில்ல போட்ருவாக... ஓடு சீக்ரம்" தாத்தா என்னை இப்போது சற்றுக் கடுமையாக எச்சரித்தார்..... வேறுவழியின்றி வேகமாக வீட்டை நோக்கி நடையை கட்டினேன்.....

வீதியில் விளையாடிக்கொண்டிருந்த தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் உள்ளே இழுத்துச் சென்றனர்.... வீட்டித் திண்ணைகளில் அமர்ந்திருந்த பெரியவர்களும் உள்ளே நடையை கட்டினர்....

அப்போது காக்கி அரைக்கால் டவுசர், காக்கிச் சட்டை, கனமான பூட்ஸ் மற்றும் உயரமான சிவப்பு நீலம் கலந்த தொப்பி அணிந்த நான்கைந்து காவலர்கள் கைகளில் லத்தியை வைத்து அடிப்பதுபோல் பாவனை காட்டி வீதியில் திரிந்த இளம்வெட்டுகளை எச்சரித்து விரட்டினர் ... வீதியை ஒட்டிய வீட்டு சன்னல் கதவுகளையும் லத்தியால் தட்டி மின் விளக்குகளை அணைக்கும்படி கட்டளையிட்டனர்... சற்று நேரத்திற்கெல்லாம் வீதியே வெறிச்சோடிவிட்டது.... அந்தப் பகுதி முழுவதுமே இருட்டோடிக்கிடந்தது... அதைக்கண்டு ஏதோவொரு அச்சம் என்னையும் தொற்றிக்கொள்ள.... வேகமாய் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தேன்... எப்போதும் பத்துமணிக்கு வரும் அப்பா ,6.30 மணிக்கே வீடு திரும்பி இருந்தார்... வானொலி பெட்டியில் ஆகாஷ்வாணி செய்தி “ ஆகாஷ்வாணி ! செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி” என்றுத் தொடங்கி கம்பீரக் குரலில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது... எங்கள் வீட்டு மின்விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது... அம்மா சிறு காடா விளக்கு மட்டும் ஏற்றி வைத்திருந்தார் .... சுற்றி நடப்பவை யாவும் எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது.... அப்பாவிடம் காரணம் கேட்டேன்.... அப்பா மும்முரமாக செய்தி கேட்டுக்கொண்டிருந்ததால் என்னை அமைதியாய் இருக்கும்படி சைகையில் கட்டளையிட்டார்... நானும் அமைதியாய் அவர் அருகில் அமர்ந்து செய்தியை செவிமடுத்தேன்....
பின்னர் அப்பா விளக்கத் தொடங்கினார்,
"நம்ம நாட்டுக்கும் எதிரி நாடு பாக்கிஸ்தானுக்கும் இப்போ போர் நடக்குது, எதிரி நாட்டு விமானப்படை நம்ப மேல குண்டு போட்ருவாங்க... எல்லா வீட்லையும் லைட்டு எரிஞ்சா, மேல ஏரோப்லேனுலருந்து அவங்க பாக்கும்போது இங்கன வெளிச்சமா இருந்தா, பெரிய நகரம் இருக்குனு அவங்களு தெரிஞ்சிரும், அப்றம் மெட்ராஸ் மேல குண்டு போட்டுருவாங்க, அதா போலிஸ் காரங்க லைட்ட அணைக்கச் சொல்றாங்க.... "

அப்பாவின் விளக்கம் சற்று தெளிவைத் தந்தாலும்... பின்னர் பெரிய வகுப்புகளில் வரலாறு படிக்கும்போதே மிகத் தெளிவாகப் புரிந்தது... அப்போதைய நம் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இந்த வரலாற்று சிறப்புமிக்கப் போரின் விளைவாக வரலாறு மட்டும் படைக்கவில்லை , பூகோளத்தையும் படைத்தார் என்பதை அறிந்தேன்...

1971'ம் ஆண்டு டிசம்பர் 3'ஆம் நாள் தொடங்கிய இந்திய பாக்கிஸ்தான் போர் பதிமூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது ... டிசம்பர் 13'ம் தேதி இந்திய இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சாம் மானேக்‌ஷா பாக்கிஸ்தானை கடுமையாக எச்சரித்தார். " உடனே சரணடையுங்கள் அல்லது நாங்கள் உங்களை முழுவதுமாக துடைத்து அழிப்போம்" என்று எச்சரிக்கை விடுத்தார். கடுமையான போருக்குப்பின்
பாகிஸ்தான் படைகளின் தலைவர் ஜெனரல் ஏஏ கான் நியாசி 93,000 துருப்புகளுடன் இந்தியப் படைகள் முன் நிபந்தனையின்றி சரணடைந்தார். இந்த வரலாற்று சம்பவம்தான் வங்கதேசம் நாடு உருவாக வழிவகுத்தது. ஆனால் போரில் 10மில்லியன் மக்கள் அகதிகளாய் வெளியேற்றப்பட்டனர். 3 மில்லியன் மக்கள் பாக்கிஸ்தான் படையால் கொல்லப்பட்டனர். போர் நடந்து ஐம்பது ஆண்டுகள் முடிவுற்றதை வெற்றி ஜோதி ஏற்றி பொன்விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம், போரினால் தங்கள் உற்ற உறவுகளை பிரிந்தும் , உயிர் உறவுகளை இழந்தும், இதயத்தில் வலியின் வடுவோடு கண்ணீரை தேக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும் லடாக் பகுதி கிராமத்து மக்களின் துயரை எவ்வாறு துடைக்கப்போகிறோம் என்றக் கேள்வி என் நெஞ்சில் இழைந்தோடுகிறது.....

எழுதியவர் : வை.அமுதா (4-Aug-21, 10:22 pm)
பார்வை : 89

சிறந்த கட்டுரைகள்

மேலே