அரிய வினைகளை ஆற்றி வருவார் உரியசீர் யாவும் பெறுவர் - தரம், தருமதீபிகை 861

நேரிசை வெண்பா.

அரிய வினைகளை ஆற்றி வருவார்
பெரியர் எனவே பெருகி - உரியசீர்
யாவும் பெறுவர் எவரும் அவரையே
மேவி வருவர் விழைந்து! 861

- தரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரிய காரியங்களைச் செய்து வருகின்றவர் பெரிய மேன்மைகளை எய்தி உயர்கின்றார்; அந்த மேலோரையே யாவரும் விழைந்து புகழ்ந்து வியந்து உவந்து போற்றி வருவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தகுதி, தரம் என்னும் மொழிகள் பொருள்களின் உயர்நிலைகளை உணர்த்தி வருகின்றன. உயர்ந்தது வியந்து புகழப் பெறுகிறது; இழிந்தது இகழ்ந்து தள்ளப்படுகிறது. மனிதனுடைய உயர்வு தாழ்வுகளுக்கு மூலகாரணம் அவன் அகத்திலேயே அமைந்திருக்கிறது. உள்ளம் உயர உயிர்கள் உயர்கின்றன.

உள்ளம் துணிந்து ஊக்கி முயன்று அரிய காரியங்களை ஆற்றுகின்றவன் பொருளும் புகழும் ஏற்றமாய்ப் பெறுகின்றான்; பெறவே உலகம் அவனை விழைந்து நோக்குகிறது; வியந்து போற்றுகிறது. ஊன்றிய முயற்சியால் உயர்ச்சிகள் உறுகின்றன.

ஒருவன் செய்து வருகிற அரிய செயல் அவனைப் பெரிய மனிதனாய் ஆக்கி வருகிறது. வினையாண்மை வியக்கத்தக்க மேன்மைகளை விளைத்து வருதலால் அது மனிதனுடைய மகிமைக்கு வித்தக வித்தாய் விளங்கி எத்தகைய நலங்களையும் அருளுகின்றது.

பறவை மிருகம் முதலிய எல்லாப் பிராணிகளினும் மனிதன் மேலான நிலையில் மேவி நிற்பது அவனது உள்ளம் உணர்வு செயல்களினாலேயாம். உள்ளத்தால் எண்ணுகிறான்; எண்ணிய அந்த எண்ணத்தை உணர்வு ஒழுங்கு படுத்தி உயர்த்துகிறது; உயர்ந்த அந்த நினைவைச் செயல் சிறந்ததாகச் செய்தருளுகிறது.

வித்திலிருந்து முளை தோன்றி மரமாய் வளர்ந்து பலன் தருகிறது; அதுபோல் உள்ளத்திலிருந்து உணர்வு தோன்றிச் செயலாய் விரிந்து உயர்நலன்களை உதவுகிறது. நினைவு அறிவுகள் இருந்தாலும் செயல் இல்லையானால் யாதொரு பலனும் இல்லை. செயல்களே மனிதருடைய நிலைகளை நேரே தெரியச் செய்கின்றன.

செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செயகலா தார்! 26 நீத்தார் பெருமை

அரிய காரியங்களைச் செய்வார் பெரியர் எனத் தேவர் இவ்வாறு கூறியுள்ளார். பெரியரையும் சிறியரையும் அறிந்து கொள்ளுவதற்குச் செயல் கருவியாய் வந்துள்ளது. அருமை புரிபவர் பெருமை யுறுகின்றார். மனிதர் விழைந்து செய்கின்ற கருமங்கள் அவருடைய தரங்களை வரைந்து காட்டி விடுகின்றன.

Great actions speak great minds. - John Fletcher

பெரிய செயல்கள் பெரிய உள்ளங்களைத் தெரியச் செய்கின்றன என்னும் இது இங்கே அறியவுரியது.

உள்ளத் திறலோடு ஊக்கி வினைசெய்பவர் உயர்ந்த மேன்மைகளை ஆக்கிக் கொள்கின்றனர். அருந்திறலாண்மை பெருந்திருவாய்ப் பெருகிச் சிறந்த சீர்மைகளை அருளி வருகிறது.

நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் இளமையிலேயே அரியணை ஏறினான்; அதிசய நிலையில் ஆட்சி புரிந்தான். வயதில் இளையவன் என இவ்வழுதியை எளிதாக எண்ணிச் சோழ மன்னனும் சேர அரசனும் சேர்ந்த ஐந்து குறுநிலத் தலைவரைத் துணை சேர்த்துக் கொண்டு இவனோடு போராட வரவே வீறோடு இவன் போருக்கு எழுந்தான். அப்பொழுது இவன் கூறிய வீர வாதம் எப்பொழுதும் யாவரும் கூர்ந்து சிந்திக்கத் தக்கது. அதன் ஒரு பகுதி அயலே வருகிறது.

இளையன் இவன்என உளையக் கூறிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ
டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே னாகுக! 72

- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், புறநானூறு

'என்னை இளையன் என்றிகழ்ந்து கூறிப் போருக்கு வந்த வேந்தரைப் பொருது தொலைத்து நான் வெற்றி பெறேனாயின் கொடுங்கோலன் என்று என் குடிகள் தூற்றும் பழியை நான் அடைவேனாக” என்று இவ்வாறு வீர சபதம் கூறிச் சென்றவன் போரில் அனைவரையும் ஒருங்கே வென்று பெருங்கீர்த்தி பெற்றான். இவனது வெற்றி நிலை எங்கும் வியப்பை விளைத்தது.

கொய்சுவல் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்ப,
15 சேரல், செம்பியன், சினம்கெழு திதியன்,
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,
நார்அரி நறவின் எருமை யூரன்,
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநனென்(று)
20 எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரைசெல,
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
வென்றி கொள்வீரர் ஆர்ப்பினும் பெரிதே! 36 அகநானூறு

சோழன் முதலிய ஏழு மன்னரையும் அவர் தம் சேனைகளோடு ஒருங்கே வென்று இந்த விரபாண்டியன் வெற்றிபெற்றுள்ள நிலையை நக்கீரர் இவ்வாறு வியந்து பாடியிருக்கிறார். பருவம் நிரம்பாத இளைஞனாயிருந்தும் அரிய செயல்களை ஆற்றி அதிசயங்களை விளைத்திருத்தலால் உலகம் இவனைத் துதிசெய்து தொழுது வந்தது. வீரத்திறலால் விழுமிய மேன்மைகள் விளைந்தன.

மனவுறுதியும் வினையாண்மையும் மனிதனை மகிமையாளனாய் உயர்த்துகின்றன. உரத்தோடு ஊக்கி வினை செய்பவன் தரத்தில் உயர்ந்து தரணியில் சிறந்து நிறைந்த புகழுடன் திகழ்கின்றான்.

ஆற்றும் வினைகள் அருமை யுடையவெனின்
போற்றும் உலகம் புகழ்ந்து.

உள்ளம் துணிந்து உயர்ந்த குறிக்கோளோடு காரியங்களைச் செய்து வருபவன் சீரிய புகழை அடைந்து கொள்கிறான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Aug-21, 8:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே