தாளாண்மை யோடு வேளாண்மை செய்யின் நீளாண்மை பரவி நிற்கும் - உரம், தருமதீபிகை 871

நேரிசை வெண்பா

தாளாண்மை யோடுமுன் தாமீட்டி வந்ததை
வேளாண்மை செய்யின் வியனாகி - நீளாண்மை
எங்கும் பரவி இசைபெருகி நிற்குமே
பொங்கும் மகிமை பொலிந்து! 871

- உரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

முயற்சி செய்து ஈட்டிய பொருளை உயிர்களுக்கு இதமாய் உபகாரம் செய்க, அவ்வாறு செய்யின் அது மேன்மையாய் வளர்ந்து புகழும் புண்ணியமும்.21 பயந்து எவ்வழியும் செவ்விய நலங்களை அருளித் திவ்விய மகிமைகளை விளைத்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இனிய செயலும் இயலும் மனிதனுடைய உயர்நிலைகளுக்கு மூலகாரணங்களாயுள்ளன. உரிய பான்மைகளிலிருந்து பெரிய மேன்மைகள் பெருகி வருகின்றன. ‘பெற்றி அளவே பெருமை’ என்னும் பழமொழி அரிய பல பொருள்களை உய்த்துணரச் செய்துள்ளது. நீர்மையிலிருந்தே சீர்மைகள் விளைகின்றன.

இங்கே மூன்று ஆண்மைகள் அடையடுத்து வந்துள்ளன. ஆள் என்னும் சொல் மனிதனை குறித்து வருகிறது. இந்த ஆண்மகன் ஆற்றிவரும் நீர்மையே ஆண்மை என அமைந்தது.

ஆடவனிடம் ஆளும் தன்மை கூடியுள்ளமையால் ஆண்மையாளன் என நேர்ந்தான். ஆண்டவன் என்னும் அருமைப் பெயரும் இந்த ஆண்மையடியாகவே கேண்மையாய்த் தோன்றியுளது.

முயற்சியைத் தாளாண்மை என்றது. கால் பெயர்ந்து ஆற்றுவது என்னும் காரணக் குறியாய் வந்தது. கருங்கடல் கடந்தும் மலைவனங்களில் நடந்தும் அயலிடங்களில் அலைந்தும் ஆற்றி வருவது என உழைப்பு நிலையை இது இங்கு நன்கு விளக்கி நின்றது.

வேளாண்மை – உபகாரம்; வேள் என்னும் சொல் விருப்பம், மண், அழகு முதலியவைகளைக் குறித்து வரும். மண்ணைப் பண்படுத்தி விளை பொருள்களை உளவாக்கி வருபவர் வேளாளர் என நேர்ந்தார். நிலவளம் உடைய அவர் குலவளம் உடையராய்ப் பிறர்க்குக் கொடுத்து உதவுவராதலால் உபகாரம் அவர்க்கு இயல்பான உறவுரிமையாய் ஒளிபுரிந்து வந்தது.

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் - திரிகடுகம்

என்றதனால் பிறரை ஊட்டி உண்ணும் உண்மையும் வண்மையும் தெரிய நின்றன. முன்பு உபகார நிலையைக் குறித்து வந்த வேளாண்மை பின்பு விவசாயத்தையும் குறிக்க நேர்ந்தது.

நல்ல ஆண்மகனாய்ப் பிறந்தவன் தாளாண்மையும் வேளாண்மையும் உடையனாய் எவ்வழியும் நீளாண்மையோடு செவ்வையாய் வாழ வேண்டும் என்பது ஈண்டு உணர வந்தது. தாம் பாடுபட்டு ஈட்டிய பொருளைப் பிறர்க்கு யாதும் நீட்டாமல் பொத்தி வைத்துத் தாமே உண்டு களிப்பவர் உயர்ந்த பலனைக் கண்டு கொள்ள மாட்டார். இழிந்த நிலையையே காண நேர்வார்.

பிற உயிர்கட்கு இதமாய் உதவி புரிபவரே தம் உயிர்க்கு நயமாய் நலம் புரிகின்றார். ஈதல் உயிர்க்கு ஊதியம்’ என்றது அனுபவ சாரமான வேத மொழி. உண்ணுகின்றவன் உடலை வளர்க்கின்றான். உதவுகின்றவன் உயிரை வளர்க்கின்றான்.

எரு முதலிய உரங்களை நிலத்திற்கு இட்டால் அது வளமாய்ச் செழித்து விளையும், உரம் செய்த நஞ்செய் உயர்ந்த பலன்களை அருளுகிறது; அது செய்யாதது வறண்டு வறுமையடைகிறது. உரிமையோடு உபகாரம் செய்வது தருமம் ஆகிறது. ஆகவே அது இருமையும் பெருமையாய் அவனுக்கு இன்பங்களை அருளுகின்றது. ஈந்து வருபவன் ஏந்தலாய் வருகிறான்.

போகங்களை நுகரவே பொருள் யாண்டும் ஈட்டப் படுகிறது; அந்த நுகர்ச்சி என்றும் குன்றாமல் தழைத்து வருவது இழைத்து வரும் உபகாரத்தாலேயாம். இந்த உண்மையை உணர்ந்துதான் ஈதற்குச் செய்க பொருளை என்.று ஓதியருளினார்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு! 212 ஒப்புரவறிதல்

உயர்ச்சியான மனிதர் முயற்சி செய்து ஈட்டிய பொருள் முழுவதும் பிறர்க்கு உபகாரம் செய்யும் பொருட்டேயாம் என்னுமிது ஈண்டு ஊன்றி உணரவுரியது. சீவர்களுக்கு இதம் செய்வதால் திவ்விய மகிமைகள் பெருகி வருகின்றன; அந்த வருவாயை வளமாகப் பெருக்கிக் கொள்பவர் புண்ணிய லோகத்தை அடைந்து எண்ணரிய போகங்களை இனிது நுகர்கின்றனர். ஈகை வழியே போகங்கள் பொங்கி வருகின்றன.

தருமம் ஆகிய உரம் சேர்ந்த போதுதான் கருமம் நன்கு கைகூடி வருகிறது; அது சேரவில்லையானால் வினையாண்மையும் வியன் பயன் காணாமல் மெலிந்து படுகிறது. செய்யும் முயற்சி மனிதனுக்குச் செல்வத்தைத் தருகிறது; அதனை இதமாய்ச் சீவர்களுக்கு உதவின் அது தருமமாய் வருகிறது; அந்த நல்வினையால் எல்லா மேன்மைகளும் எளிதே விளைகின்றன. தருமம் மருமமாய் மருவி வருகிற கருமமே அதிசய நலன்களை அருளுகிறது. புண்ணியம் இல்லையானால் முயற்சியும் எண்ணியபடி கண்ணியமான பலனைக் கொடாமல் வறிதே கழிந்து போகிறது

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

மறுவில் முயற்சி இல்லாத மக்கள் போன்றும், மாற்றரிய
பொறியில் மாந்தர் தாளாண்மை போன்றும், அரன்மேல் அன்பில்லார்
நெறியின் ஆற்றும் நல்விரதம் போன்றும், நிகரில் கவினின்றி
எறிவேல் அவுணர் பெருஞ்சேனை இழிவுற்(று) இடரின் ஆழ்ந்தனவே.

- காசிகாண்டம்

முயற்சியில்லாத மக்கள் வாழ்வு, நல்லூழ் இல்லாத ஆள்வினை, சிவனை நினையாத தவமென அசுரர் சேனைகள் அமரில் உடைந்து ஒழிந்து போயின என இது உணர்த்தியுள்ளது. முயன்று வாழ், உயிர்களுக்கு இரங்கி உதவு, தெய்வ சிந்தனை செய் என்னும் போதனைகளை இவ்வாறு கவி போதித்திருக்கிறார்.

ஒருவனுடைய தாளாண்மையின் பலன் வேளாண்மையோடு சேரவேண்டும்; இல்லையானால் புண்ணிய பலம் அவனுக்கு இல்லாமல் போம் என்பதை இங்கே நுண்ணிதாய் உணர்ந்து கொள்கிறோம். பகுத்து உண்ணுதல், பல்லுயிர் ஒம்புதல் உயர்ந்த மனிதப் பண்பாடுகளாய்ப் புகழ்ந்து போற்றப் பெற்றுள்ளன.

Benevolence is the distinguishing characteristic of man. - Meneius

உபகாரம் என்பது உயர்ந்த மனிதத் தன்மையின் சிறந்த அடையாளமாயுள்ளது என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணரவுரியது. இனிய உதவியால் மனிதன் புனிதனாகிறான்.

We praise those who love their fellow-men. - Aristotle

பிறர் பால் அன்பாய் உதவி செய்பவர்களை நாம் புகழ்ந்து போற்றுகிறோம் என அரிஸ்டாட்டல் என்பவர் உபகார நிலையை இங்ஙனம் உவந்து கூறியுள்ளார்.

Only those live who do good. - Tolstoy

பிறர்க்கு நன்மை செய்பவர்கள்தாம் என்றும் சுகமாய் வாழுகிறார்கள் என ரசிய தேசத்து ஞானியான டால்ஸ்டாய் இவ்வாறு உரைத்திருக்கிறார் உதவி நிலைகள் உணர உரியன.

உபகார நீர்மையை எந்த நாட்டு மேதைகளும் உவந்து புகழ்கின்றனர். தொழில் செய்வதால் பொருள் வருகிறது; அது உலக வாழ்வை வளம்படுத்துகிறது; அதில் ஒருபகுதியை உயிரினங்களுக்கு உதவின் உயர்ந்த புண்ணியமாகிறது; ஆகவே இம்மை மறுமை யாண்டும் அது இன்பங்களை அருளுகிறது.

தாளாண்மையோடு பொருளை ஈட்டி வேளாண்மை செய்து வியனாய் வாழுக; அதுவே நல்ல ஆளாண்மையாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Aug-21, 10:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே