ஏழு ராஜாக்களின் தேசம் நூல் ஆசிரியர் அபிநயா ஸ்ரீகாந்த் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

ஏழு ராஜாக்களின் தேசம்!

நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : யாவரும் பப்ளிகேஷன்ஸ்.
பக்கங்கள் : 248 ; விலை : ரூ. 275 ; அலைபேசி : 90424 61472

******
நூல்ஆசிரியர் அபிநயா ஸ்ரீகாந்த் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியல் பட்டம் பெற்றவர். ஐக்கிய அரபு நாட்டில் இணையரின் வேலை நிமித்தமாக இரண்டு ஆண்டுகள் வசித்து, சுற்றிப்பார்த்து பயணக் கட்டுரையாக இந்நூல் வடித்துள்ளார்.

நூலில் 27 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. அமீரகத்தை ஏற்கெனவே சுற்றிப்பார்த்தவர்கள் அசைபோட்டுக் கொள்ளவும், இன்னும் பார்க்காதவர்களுக்க்கு உடன் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் எழுதி உள்ளார். முதல் நூல் என்றே சொல்ல முடியாது. அனுபவம் வாய்ந்த முதிர்ந்த எழுத்தாளர் போல நல்ல நடையில் சுவையாகவும், பல பயனுள்ள தகவல்களையும் வழங்கி உள்ளார். பாராட்டுகள்.

துபாய் என்பதன் பெயர்க்காரணம் தொடங்கி பல தகவல்கள் நூலில் உள்ளன. பாலைவன வேடிக்கை, ஒட்டகச் சவாரி, தனுரா நடனம், முசண்டம் படகு சவாரி எல்லா இடங்களுக்கும் நேரடியாகச் சென்று ரசித்து, படங்கள் எடுத்து அந்த படங்களையும் நூலில் சேர்த்து இருப்பது சிறப்பு. நான் அரசுப்பணி காரணமாக எந்த வெளிநாட்டிற்கும் சென்றதில்லை. ஆனால் துபாய் புகைப்படங்களைப் பார்த்து, பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது. பணிநிறைவு பெற்றவுடன் சென்று கண்டு வரவேண்டுமென்று முடிவெடுத்து விட்டேன். எனது நூல்களை எல்லாம் துபாயில் உள்ள இனிய நண்பர் ஹிதாயத் தவறாமல் வெளியிட்டு, படமும் செய்தியும் அனுப்பி வருகிறார். நான் செல்லாவிட்டாலும் எனது நூல்கள் துபாய் சென்றுள்ளன.தாகூர் நினனைவு நூலகத்தில் எனது நூல்கள் உள்ளன.

துபாயில் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன? அங்கு என்ன உள்ளது? என்ன விற்பனையாகின்றன? என அனைத்து தகவலும் நூலில் உள்ளன. துபாய் சுற்றுலா கையேடு என்றே சொல்லலாம். குளோபல் வில்லேஜ் முகப்புத் தோற்றம் படம் உள்ளது. தெற்காசிய கூடாரங்கள், ஆப்ரிக்கக் கூடாரங்கள், கிழக்குக் கூடாரங்கள், ஐரோப்பிய கூடாரங்கள் அதில் என்ன உள்ளன என்பது பற்றி விரிவாக விளக்கமாக எழுதி உள்ளார்.
அந்தரத்தில், உயரத்தில் பறந்து உண்ணும் உணவுக்கூடம். படங்கள் பார்க்கும் போது, துபாய் நாடு எந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்று பார்க்கும் போது வியப்பாக உள்ளது. கொரோனா கொடுமையின் காரணமாக விமானம் துபாய்க்கு செல்லவில்லை. துபாயிலிருந்தும் வரவில்லை. தினமும் துபாய்க்கு மதுரையிலிருந்து விமானம் சென்று வந்தது. ஜூலை 2021 மாதம் முழுவதும் துபாயிலிருந்து ஒரு விமானம் கூட வரவும் இல்லை, செல்லவும் இல்லை.

நிலைமை சீராக விமான போக்குவரத்து விரைவில் தொடங்க வேண்டும். அனைவரும் சென்று களிக்க வேண்டும். உலகில் அவசியம் காண வேண்டிய நாடுகளில் துபாய் முதலிடம் வகிக்கும் வண்ணம், துபாய் நாட்டின் சிறப்பை நூல் முழுவதும் சிறப்பாக விளக்கி உள்ளார்.
குதிரை அருங்காட்சியகம், காபி கண்காட்சியகம், நாணய அருங்காட்சியகம், துபாய காவலர்கள் அருங்காட்சியகம் - படிக்க படிக்க, காண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக எழுதி உள்ளார், பாராட்டுகள்.

அமீரகக் கோயில் இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என சகல மதக் கோயில்களும் அங்கு இருப்பது வியப்புத்தான். என் மகன் பிரபாகரன் இரண்டு ஆண்டுகள் துபாயில் பணிபுரிந்தான். தற்போது மதுரை வந்து விட்டான். இந்த நூலில் உள்ள பல இடங்கள் அவன் சென்று பார்த்ததாக குறிப்பிட்டான். இந்து கோயில்கள் உள்ளன என்பதையும் குறிப்பிட்டான். மிகைப்படுத்தி எதுவும் எழுதாமல், உள்ளது உள்ளபடியாக எழுதி இருப்பதால், உண்மை இருப்பதால் படிக்க சுவையாக உள்ளது.

பயணக் கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக எழுதி உள்ளார்கள். போரடிக்கும் புள்ளி விபரங்கள் எதுவும் இல்லாது காண வேண்டிய இடங்கள் அங்கு என்ன உள்ளன என்பதை தெள்ளத் தெளிவாக எழுதி இருக்கிறார். துபாய் மாலும் அதன் நீரூற்றும், புர்ஜ் கலிபாவின் இருப்பு புகைப்படங்களே சிறப்பாக உள்ளன. இப்படி எல்லாம் நம் தமிழகத்தில் இல்லையே என்ற ஏக்கம் தரும் விதமாகவும் இதுபோன்ற நவீனம் நம் தமிழகத்தில் வருவதற்கும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற ஏக்கத்தையும் வரவழைத்தது.
மிராக்கிள் கார்டனும் பட்டாம் பூச்சிகளும் கட்டுரையில் பறவைக் கோணம் புகைப்படம் நன்று. நீர் மேலாண்மை எப்படி நிர்வகிக்கின்றன. ஒட்டுமொத்த நாட்டின் மேலாண்மையும் சிறப்புத்தான். பாலைவன நாடு, எண்ணெய் வளம் பெற்றதும் உலகில் சிறந்த நாடாக சுற்றுலா தளமாக மாறிவிட்ட விந்தை.

சாய்வு கோபுரமும் அங்கு உள்ளது. தியாகத் திடலும் அங்கு உள்ளது. பிரமாண்ட மசூதிகள் கட்டிடக் கலைக்கு பெயர் பெற்ற கட்டிடங்கள், யாரும் பார்த்ததில்லை. துபாய் தான் சொர்க்கம் என்றால் மிகையன்று. சொர்க்கம் போன்று செல்வ செழிப்புடனும் கண்களுக்கு விருந்து வைக்கும் காட்சி அமைப்புடனும் துபாய் விளங்குகின்றது.

அஜ்மான் திருவிழா, சோரா இயற்கை சரணாலயம், எட்டி சாலட் கட்டிடம், அஜ்மான் மீன் சந்தை, அஜ்மான் வானொலி, படகுக் கட்டுமானத் தளம் இப்படி எதையும் விட்டு வைக்காமல், நூல் ஆசிரியர் அபிநயா ஸ்ரீகாந்த் இரண்டு ஆண்டுகள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி திட்டமிட்டு நேரத்தை வீணாக்காமல், துபாயில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களுக்கும் சென்று படம் எடுத்து ஆராய்ந்து வடித்த பயணக் கட்டுரை சிறப்பு. சென்று வந்த பயணத்தை சிறப்பாக்கி விட்டார்கள். துபாய் பற்றி வந்துள்ள ஆகச்சிறந்த நூல் இது என்று பாராட்டி முடிக்கிறேன்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (13-Aug-21, 8:38 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே