மனம் தேடும் ஆசை

மனம் தேடும் ஆசை

ஹலோ சார் எப்படி இருக்கீங்க?
ஏதோ நினைவுக்குள் மூழ்கியிருந்த பங்காரு கண் விழித்து கேட்ட மருத்துவரை பார்த்தார்.
அப்படியே தான் இருக்கேன் டாக்டர்..
நோ..நோ.. இப்ப நீங்க வேற யோசனையில இருந்தீங்க, நான் கேட்ட பின்னால இந்த பதிலை சொல்றீங்க. உண்மைதானே, சிரிப்புடன் டாக்டர் கேட்டார்.
உண்மைதான் டாக்டர் வெட்கத்துடன் தலையாட்டினார்.
குட், இப்படி ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும், உங்களுக்கு இதை பத்தி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு நினைக்கிறேன்.
அப்படி சொல்ல முடியாது டாக்டர், எவ்வளவுதான், இந்த உலகத்துல சாதிச்சு பெரிய ஆளாயிருந்தாலும் கடைசியில இந்த படுக்கையில படுத்து, கால முடிவுக்காகவும், அதை தடுக்க உங்க தயவை எதிர்பார்த்தும் காத்து இருக்கும் போது அந்த திறமை எல்லாம் காணாம போயிடும் டாக்டர்
நல்லா பேசறீங்க, சொல்லியபடியே அவரை பரிசோதித்த டாக்டர் அருகில் நின்றிருந்த நர்ஸ்சிடம் எந்ததெந்த வகையான மருந்துகளை கொடுக்க வேண்டும் என்று விளக்கினார்.
ஓகே சார், நல்லா இருக்கீங்க, ஆரோக்கியாமாவே இருக்கீங்க, மனசை கவலைப்படறதை விட்டுட்டு, சந்தோசமா வைக்க முயற்சி பண்ணுங்க.
முயற்சி பண்னறேன் டாக்டர். இன்னும் எத்தனை நாள் என்னால இந்த பூமியில இருக்க முடியுமோ அதுவரைக்கும் சந்தோசமா இருக்க முயற்சி பண்ணறேன்.
இப்படி மனசை விட்டு பேசாதீங்க, இன்னும் நிறைய வருசம் இருப்பீங்க, உங்களை நம்பி எத்தனை பேர் இருக்காங்க. இன்னைக்கு இந்த நகர்லயே முதல் பணக்காரர் நீங்கதானே. நீங்களே இப்படி விட்டேத்தியா பேசலாமா?
சாரி டாக்டர், சில நேரம் மனசு இப்படி பேச சொல்லிடுது. நல்லபடியா நினைக்க முயற்சி பண்ணறேன்.
மாலை ஆறு மணி இருக்கலாம், மேடம் நான் சொல்றது என்னண்ணா, மிஸ்டர் பங்காரு ரொம்ப அப்செட்டா இருக்காரு. அவருக்கு தான் இறந்துடுவோம் அப்படீங்கற மன நிலைக்கு வந்ததுனால நாங்க எவ்வளவுதான் மருந்து மாத்திரை கொடுத்து கவனிச்சுகிட்டாலும் பலன் இருக்காது.
அதுக்கு என்ன பண்ணணும் டாக்டர்.
அவரை எங்காவது வெளியே கூட்டிட்டு போய் கொஞ்ச நாள் தங்க வச்சு பாருங்களேன்.
எங்களுக்கு ஊட்டியிலயும், கொடைக்கானல்லயும் பங்களா இருக்குது டாக்டர், அங்க கூட்டிட்டு போறோம் டாக்டர்.
நல்லது, கொஞ்ச நாள் அவர் எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருக்கறது நல்லது.
சரிங்க டாக்டர், நான் என் பசங்க, பொண்ணுகளோட பேசி அப்புறம் இவரை கூட்டிட்டு போறதுக்கு ஏற்பாடு பண்ணறேன் டாக்டர்.
சரிம்மா நீ அவர் கூட போய் இரண்டு மூணு நாளு இரு, ஊட்டிக்கோ, கொடைக்கனலோ, போய் இருந்துட்டு வாங்க. நாங்கதான் சொல்லிகிட்டே இருக்கோம், எல்லா பிசினசையும் எங்க கிட்டே விட்டுட்டு அக்கடான்னு இருக்க சொல்லி. கேட்டாத்தானே, இப்ப அதையேதான் டாக்டர் சொல்றாரு, அவ்வளவுதான்.
நான் அவர் கூட இருந்தாலும், எத்தனை நாள் அங்கிருக்க முடியும், மனைவி மகன்களிடம் கேட்டாள்:. இரண்டு ஸ்கூல் பார்த்துகிட்டு இருக்கேன், வுமண்ஸ் கிளப் செகரட்டரி, மூணு புரோகிராம் இந்த ஊர்ல நடத்தறதுக்கு பிளான் பண்ணி வச்சிருக்கேன், எல்லா ஏற்பாடும் செஞ்சு முடிச்சாச்சு, சி.எம் வந்தாலும் கூட வரலாம்.
அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும், சொல்லு.
பெண் அம்மாவிடம் சொன்னாள், அம்மா அப்பாவை ஊட்டிக்கு கூட்டிட்டு போய் அவர் கூட இரண்டு நாள் இரு, அதுக்கப்புறம் மெல்ல அவரை கவனிக்கறதுக்கு இரண்டு பேரை ஏற்பாடு பண்ணிட்டு நீ இங்க வந்திடேன். என்ன சொல்றே?
மனசில்லாமல் தலையாட்டினாள் பங்காருவின் மனைவி.
மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு பங்காரு வந்து ஒரு நாள் முழுவதுமாக ஓடியிருந்தது. நாளை காலையில் அவரை கூப்பிட்டு கொண்டு ஊட்டிக்கு கிளம்ப தயாராய் இருந்தாள் பங்காருவின் மனைவி. அதற்காக தட புடலாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
அதற்குள் அவரது வாரிசுகள் ஊட்டியில் இருந்த இவர்களது எஸ்டேட் ஆட்களை வைத்து பங்களாவை தயார்படுத்திவிட்டார்கள்.
மறு நாள் காலை...!
பங்காரு காணாமல் போய் விட்டார். பதறி போய்விட்டார்கள். உற்றம், சுற்றம் எல்லாம் அவருக்கு சொந்தமான எல்லா இடங்களிலும் தேடி பார்த்து அவர் கிடைக்கவே இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது, அவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்று கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறி போனார்கள்.அவரின் செல் நம்பர் கூட உபயோகத்திலேயே இல்லை என்றே வந்தது.
யாருப்பா? புதுசா இருக்கறே
புதுசு இல்லீங்க, கந்தசாமி பையனுங்க
எந்த கந்தசாமி?
மாராத்தா பையனுங்க, அதான் மருந்தை குடிச்சு செத்து போன கந்தசாமி..
அடேடே ஆமா அது ஆச்சே கொள்ளை வருஷம், அவனுக்கு பையன் கூட ஒருத்தன் இருந்தான், அப்பன் செத்து இரண்டு நாள்லயே காணாம போயிட்டானே.
அந்த பையன் நாந்தானுங்க, பேர் ராமசாமி ..
யேயப்பா..நீ தானா அது? என்ற வயசு உனக்கு இருக்கும், இல்லையா? எனக்கு ஏழு வயசு இருக்கும்னு நினைக்கறேன், அப்பத்தான உங்க அப்பனும், ஆத்தாளும் கடங்ககாரனுங்களுக்கு பயந்து.. யப்பா. ஐம்பது வருஷமாவது இருக்கும்ப்பா.
ஆமாங்க, எனக்கே வயசு அறுபது ஆயிடுச்சு, அது நடந்து அம்பது வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு.
இதா பாரு உங்கப்பனும் ஆத்தாளும் இருந்த வூடு இது. பாரு, எப்படி இருக்குன்னு. உன்னைய காணாம போனப்ப்பறம், உங்க பங்காளிக, கொஞ்ச நாள் இருந்தாங்க, அப்புறம் அவங்களும் காலி பண்ணிட்டு போயிட்டாங்க.
வெறித்து பார்த்தவரின் நினைவுகளில் அம்மா, அப்பா முகம் தெளிவாக வரவில்லை. ஆனால் இதே இடத்தில் சுற்றி சுற்றி விளையாண்டதும், இதோ இந்த வேப்ப மரத்தில் ஊஞ்சல் கட்டி தொங்கியதும் ஞாபகம் வந்தது.
ஊர் ஏன் இப்படி கிடக்கு?
எங்கப்பா, விவசாயம் சுத்தமா படுத்துடுச்சு. மழையும் ஏச்சு போடுச்சு, அப்ப அப்ப நல்லாத்தான் பெய்யுது, சமயத்துக்கு பெய்யணுமே..!
கிணத்துல தண்ணி கிடைக்குதா?
நம்ம பூமிய பத்தி உனக்கு தெரியாதா? குடிதண்ணிக்கே எத்தனை தூரம் நடக்க வேண்டியிருக்கு. பம்பு வச்சுக்கற கொஞ்ச நஞ்ச தோட்டக்காரனுங்க மனசு வச்சா தண்ணி தருவானுங்க.
சரி எங்க தங்கியிருக்கே, பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் என்ன பண்ணுது?
ம்..ம்.. அவங்க எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க, நானு இனிமே இங்கதான் இருக்கலாமுன்னு வந்துட்டேன்.
என்னப்பா, இந்த காட்டுலயா? அதுவும் இதா காடு அடைஞ்சு கிடக்கற உன்ற வூட்டுலயா? பேசாம ஒண்ணு பண்ணு, நம்ம வூட்டுக்கு வந்துடு. நானும் என் பொஞ்சாதியும்தான். பசங்க விவசாயத்தை விட்டுட்டு எல்லாம் வெளியூர்ல போய் வேலைய தேடி அங்கனயே குடும்பம் குட்டியாகி இருந்துட்டானுங்க. ஏதோ ஞாபகம் வந்தா எங்களை வந்து பார்த்துட்டு போவானுங்க.
பார்க்கலாம், இப்ப நம்ம பக்கத்து டவுனுல தங்கியிருக்கேன். இப்ப இந்த வீட்டை சுத்தி பூமி எங்களோடது எவ்வளவு இருக்கும்?
அது தெரியலைப்பா, விவசாயம் நடந்தா தானே சொல்ல முடியும்.
அப்ப நாளையில இருந்து நான் இந்த வூட்டை சரி பண்ணி விவசாயம் பாக்கலாமுன்னு இருக்கேன்.
ஏய் என்னப்பா சொல்றே? இந்த வயசுக்கு மேல இங்க வந்து விவசாயம் பார்த்து, அதுவும் தண்ணியில்லா காட்டுக்குள்ள வந்து என்னப்பா..
அதை பத்தி இப்ப கவலை இல்லை, எனககு நம்ம ஊர் ஆளுங்க நல்லா வேலை செய்யற ஆம்பளை ஆளு, பொம்பளை ஆளுங்க வேணும். விவசாயம் தெரிஞ்சவங்களா இருக்கணும்.
விவசாயம் தெரியாம என்ன? ஆனா உடம்பு வளைஞ்சு வேலை செய்வானுங்க ளான்னுதான் சந்தேகம்?
ஏன் இப்படி சொல்றே?
பின் என்னப்பா, ஐம்பது கிலோ மீட்டர் தள்ளி இருக்கற டவுனுக்கு போய் வேலை பாக்கறானுங்க, எட்டு மணி நேர வேலை, அது முடிஞ்ச உடனே வீட்டுக்கு வந்துடறானுங்க. மாசமானா டாண்ணு கொஞ்சமொ, நஞ்சமோ சம்பளம் வந்துடுது. கடையில வாங்கி பொங்கி திங்கறது, இப்படித்தான் போயிட்டிருக்கு.
ஆளுங்களை கூப்பிடறப்பவே சொல்லிடு. நிரந்தர வேலை, கம்பெனியில எப்படி இருப்பாங்களோ அப்படி இங்கயும் வேலை செய்யலாம், சம்பளமும் அவங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி வாங்கிக்கலாமுன்னு சொல்லிடு.
என்னப்பா அவங்களை மாதிரி விவசாயத்துல செய்ய முடியுமா?
நீ ஆளுங்களை கூப்பிட்டுட்டு வா, அப்புறம் பாக்கலாம்.
வந்தவர்களிடம் தெளிவாக சொல்லி விட்டார். பாருங்க, நீங்க செய்யப்போறது விவசாயம்தான். இந்த இடத்தை பூரா சுத்தம் பண்ணி நாம விளைச்சலுக்கு கொண்டு வரணும்.
உங்களுக்கு கம்பெனியில எப்படி சம்பளம் கொடுப்பாங்களோ அப்படி இங்கயும் தருவாங்க. முதல்ல கட்டிட வேலை தெரிஞ்சவங்க இந்த கட்டிடத்தை சுத்தம் பண்ணி நமக்கெல்லாம் ஆபிசாக்கிடலாம். நாம் எல்லாம் இங்க கூடித்தான் இந்த பூமிய மாத்தணும். வெயில்லதான் வேலை. விருப்பமிருக்கறவங்க பேரை கொடுத்துடுங்க. பதிவு பண்ணுனவுங்களுக்கு நீங்க வேலை செஞ்ச கம்பெனி கொடுக்கற லீவு, சலூகையும் கிடைக்கும்.
கிட்டத்தட்ட இருபது ஆண்களும், பத்து பெண்களும் நம்பிக்கை இல்லாமல் பேர் கொடுத்தனர்.
நகரத்திலிருந்து ஆட்கள் வந்து நிலங்களை அளந்து சுற்றி வர பாதுகாப்பு வேலி போட சொன்னார்கள், அடுத்தபடியாக எங்கெங்கு தண்ணீர் கிடைக்கும் என்று தேடி அங்கங்குஆழ் துளை கிணற்றுக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்கள்.
மள மளவென வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. நகரத்திலிருந்து வந்து கொண்டிருந்தவர் ஒரு மாதத்திற்குள் இங்கே குடி வந்து விட்டார்.
நண்பணை அழைத்தார். உன் உதவியினால எல்லா வேலைகளும் நல்லபடியா நடக்குது. உன்னுடைய நிலமும் விவசாயம் செய்யாம இருக்கறதா சொல்றே. நீ விருப்பபட்டா இந்த நிலங்களோட சேர்த்து கூட்டு பண்ணையில சேர்ந்துக்கோ, இப்படி சும்மா போட்டு வச்சிருக்கற விவசாய பூமி வச்சிருக்கறவங்க விருப்பபட்டா கூட்டு பண்ணையா சேரலாம்.
சேர்றவங்க எல்லாரோட பூமியும் முதலீடா வச்சுக்கலாம். அந்தந்த பூமியில என்ன நல்லா விளையும்ங்கறதை விவசாய பண்ணையில ஆராய்ச்சி பண்ணி அதுமாதிரி விவசாயத்தை செய்யலாம்.
இதுக்கு எல்லாமே இப்ப நம்ம கம்பெனியா நடத்தற ஆளுங்களை வச்சே எல்லா வேலைகளையும் செய்யலாம்.
இதை எல்லாம் சொல்லி நம்மளை மாதிரி பூமிய, பசங்க, பொண்ணுங்க விட்டுட்டு வெளியூருக்கு போனவங்களோட பெரியவங்க, அதாவது உன்னைய மாதிரி இருக்கறவங்க ஒண்ணு சேர்ந்து இதை பண்ணலாமே.
அப்புறம் முக்கியமான ஒண்ணு, அவங்க பசங்களோ, பொண்ணுங்களோ, இல்லை இவங்களே விருப்பபட்டா எப்ப வேணா இந்த கூட்டு பண்னையில இருந்து விலக்கிக்கலாம். இதை கண்டிப்பா சொல்லிடு.
நாட்கள் நகரவில்லை, ஓடின, அதுவும் வேகமாக ஓடின. இரண்டு வருடங்களில் அந்த ஊர் முழுக்க பசுமை விரிந்திருந்தது.
இவருடன் சேர்ந்திருந்த பத்து பேரின் விளை நிலங்களும் நல்ல பசுமை கண்டிருந்தன. இவர் தங்கியிருந்த வீடு ஒரு அலுவலகமாக இயங்க கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கு மேல் பணியாட்கள் இருந்தனர். அது போக இவருடன் நிலங்களை கூட்டு பண்ணைக்கு ஒப்படைத்த பத்து உறுப்பினர்களும், தங்கள் நிலங்களை வளமாக்கி வருமானத்தையும் காண ஆரம்பித்தனர்.
இப்பொழுது இளைய தலைமுறைகள் கூட இவரிடம் கூட்டு பண்ணை முறைக்கு வர ஆர்வம் தெரிவித்தனர். அடுத்து இவர் கூட்டு பண்ணையில் ஆடு கோழி வளர்ப்பை ஏற்படுத்த ஆலோசனையில் உள்ளார்.
அந்த பசுமையாய், வேப்ப மர நிழல் குவிந்திருந்த அலுவலகத்தின் வாசலில் காத்திருக்கிறார்கள் வயதான மாதும், அவர்களுடன் வாரிசுகள், ஆண் பெண் சகிதமாய் தங்களின் குடும்பத்தாருடன், இவரை சந்திக்க அனுமதி கேட்டு.
ஐயா வந்துடுவாரு, இப்படி மர நிழல்ல போட்டிருக்கற பெஞ்சுல உட்காருங்க, சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் அங்கிருந்த பெண்.
நான்கைந்து ஆண், பெண்களுடன் வயலுக்கு உரம் போடுவதை பற்றி விவாதித்தபடி அலுவலகத்திறுகுள் நுழையப்போனவரை நோக்கி வேகமாக எழுந்து வந்த அந்த மாது, ஏங்க, ஏங்க..
சட்டென எழுந்த அவரது வாரிசுகளும் அப்பா..அப்பா..
திரும்பி பார்த்த பங்காரு, வாங்க, வாங்க எப்ப வந்தீங்க, உற்சாகமாய் வரவேற்றவர், இளநீர் சாப்பிடறீங்களா? அன்பாய் விசாரித்தார்.
திரும்பி போய்க்கொண்டிருந்த காரில் மகன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான், அப்பா இனி அங்க வரமாட்டாருன்னு நினைக்கறேம்மா. பாருங்க, அவரை சுத்தி எத்தனை பேரு, எல்லாம் வெள்ளந்தியா உட்கார்ந்து பேசிகிட்டு.
அவரை இப்படியே உட்டுடலாம், நமக்கு விருப்பபட்டா வந்து பாத்துக்கலாம். எவ்வளவு நிம்மதியா இருக்காருன்னு பாருங்க.
நாம் அவரை தேடும்போது அவரோட சொந்த ஊருல தேடி பார்க்கணும்னு தோணாம போயிடுச்சு, பரவாயில்லை, அவரால இப்ப ஊரே பசேல்னு மாறி போயிருக்கு. அதை விட அங்கிருந்தவங்க சொன்னதை கேட்டீங்களா? அம்பது வயசுக்கு மேல இருக்கறவங்களுக்கு இவரு பெரிய ஊக்க சக்தியாவே இருக்காராம். என் வயசு ஆளுங்க கூட அப்பாவை அப்படி கொண்டாடுறாங்க.
அவருக்கு இனிமேல் நகரத்துல வாழறதுக்கு மனசு கண்டிப்பா வராது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Aug-21, 4:53 pm)
Tanglish : manam thedum aasai
பார்வை : 165

மேலே