ஆதிவேரின் தேடல்

ஆதி வேரின் தேடல் ...

ஆதாம் ஏவாள் காலம் முதற்கொண்டே , அரசர்களாக இருந்தாலும் சரி ஆண்டிகளாக இருந்தாலும் சரி, ஆண்பிள்ளைகள் மட்டுமே அவரவர் குடும்பங்களில் வாரிசுகளாக கணக்கில் வைக்கப்பட்டனர். மரபணுக்கள் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அடுத்தத் தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்ற அறிவியல் உண்மை அறிந்தப் பின்பும் ஆண்பிள்ளைகள் தான் வாரிசுகள் என்ற பழைய பஞ்சாங்கத்தையே கட்டி அழுகிறது இந்த சமூகம் இன்றும்..... ஈசன் குடும்பம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் உள்ள குடும்ப கட்டமைப்பு வரை, பெண்கள் புகுந்த வீட்டிற்கே உரிமையானவர்கள் என்பது எழுதப்படாத சட்டமாக புழக்கத்தில் உள்ளது. ஆனால் ஆண்டாண்டு காலமாக பிறந்தவீட்டு பாசத்தையும் வாசத்தையும் வம்ச வரலாற்றையும் நெஞ்சில் சுமந்து வாழ்பவர்கள் பெண்கள்தான் . அதில் என் அம்மா S.L.சந்திராவும் விதிவிலக்கு அல்ல. அப்பாவிடம் அடிக்கடி ஏற்படும் வாக்குவாதத்தில் தன் தந்தைவழி 'சிவகளை' குடும்பத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைத்து பெருமிதம் கொள்வார்... வாஞ்சையுடன் வம்ச வரலாறை வினவுவேன், அம்மா விவரித்ததை மேலோட்டமாகவே மனதில் பதிய வைத்திருந்தேன்.

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின்போது அம்மாவின் பிறந்த மண்ணான தேரிமேட்டிற்கு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போதெல்லாம் தவறாமல் இருதினமாவது சிவத்தையாபுரம் செல்வோம் . அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு, ஒன்று அங்கு பால்ராஜ் மாமாவின் பாசாமான அழைப்பும் விருந்தோம்பலும், மற்றொன்று அவர் வீட்டின் வளாகத்திற்குள்ளே அமைந்துள்ள பூவையா சாமி கோயில் தரிசனமும் .

சிவத்தியாபுரம் செல்வதில் எங்களுக்கு அப்படியொரு பேரானந்தம். அப்போதெல்லாம் தேரிமேட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள சிவத்தையாபுரம் செல்ல பேருந்து வசதிகள் கிடையாது. பாட்டி வீட்டிலிருந்து புரப்பட்டு முத்துமாலை அம்மன் கோவிலைக் கடந்து குறுக்குப் பாதை வழியே நடந்தே செல்ல வேண்டும்.கோவிலின் அருகே சிறு நீரோடை, தொலைவில் சிறு குளம் , அதன் அருகே இருபுறம் செழிப்பான வாழைமரத் தோட்டங்கள்... வழிநெடுக பசுமையை காண்பதால் கால்கள் சோர்வதே இல்லை ... உற்சாகம் கரைபுரண்டோடி , பால்ராஜ் மாமா வீட்டை அடைந்தவுடன் உச்சத்தை தொட்டுவிடும்.... பேரன்பில் வரவேற்கும் பால்ராஜ் மாமா , அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரர் . நடுத்தர உயரம், கருப்பு என்றாலும் களையான முகம், பாசத்தைப் பொழியும் கண்கள் , பூமிக்கு வலிக்காத நடை, மெலிந்தக் குரல் வளம், கனிவான நிதானமான பேச்சு, மொத்தத்தில் பால்ராஜ் மாமா வெண்ணிற வேட்டி சட்டையில் உலவும் ஒரு ஆண் தேவதை.... சாயர்புரத்தில் உள்ள 'போப் நினைவு மேல்நிலைப்பள்ளி 'யில் ஆசிரியராக பணியாற்றுபவர். தன் அன்பாலும் பண்பாலும் ஊர்மக்கள் அனைவரின் நன்மதிப்பையும் சம்பாதித்தவர். மாமா அன்பின் சிகரம் என்றால் அவர் பிள்ளைகள் பால் முரளிதரன் அத்தான், சாந்தி அண்ணி, ஜெயந்தி அண்ணி, ஜவகர் மற்றும் அத்தை பத்மாவதி அவர்களும் பாசத்தைக் கொட்டுவதில் சளைத்தவர்கள் அல்ல....

மாமாவின் வீடு ஒரு குட்டி நோவா தாத்தா பேழை போன்றது... அங்கு இல்லாத ஜீவராசிகளே இல்லை... ஆடு, மாடு, நாய், பூனை,கோழி, புறா, வாத்து, கிளி, லவ் பேர்ட்ஸ்,முயல், அணில் , வெள்ளை எலி என்ற ஜீவன்கள் சுதந்திரமாய் வீட்டைச் சுற்றி தங்குத் தடையின்றி திரிந்து வளர்ந்தன... எப்போதும் பிள்ளைகளின் குறையாத குதூகலக் குரலுடன் , இந்த சகல ஜீவன்களின் ஓசைகளும் ஒன்றரக் கலந்து ஒலித்து, சொர்கத்தின் நடுவே கற்பகத் தருவில் ஊஞ்சல் கட்டி ஆடும் பேரானந்தத்தை எங்களுக்குக் கொடுக்கும் ... மாலை அம்மா மாமாவுடன் சேர்ந்து பூவையா சாமி கோவிலை தூய்மை படுத்துவார். பின்னர் பொங்கல் படைத்து எங்களை அங்கு விளக்கேற்ற வைப்பார்... அப்போதுதான் அறிந்தேன் சிவத்தையாபுரம்தான் அம்மாவின் தந்தைவழி பூர்வீகம், அங்கு சமாதியான பூவையா சாமி எங்களுக்கு முப்பாட்டனார் என்ற உண்மையை... ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் அந்த ஆதி ஆணிவேரை தேடி என் மனம் ஓடியது.... சிவகளை குடும்ப வரலாறு மற்றும் பூவையா சாமிகள் பற்றிய தகவல்களை திரட்டினேன்... இதோ என் அம்மாவின் ஆன்மாவை குளிர்விக்க இங்கே அவற்றை சமர்ப்பிக்கின்றேன்....

(தொடரும் )

எழுதியவர் : வை.அமுதா (22-Aug-21, 10:42 pm)
பார்வை : 14

மேலே