ஆதிவேரின் வரலாறு

ஆதி வேரின் வரலாறு...

"சிவகளை " குடும்பத்தின் ஏழாம் தலைமுறை பெண்வழி வாரிசான நான், 250 ஆண்டுகள் காலக்கோட்டில் பின்னோக்கி ஓடி (அதாவது 18'ம் நூற்றாண்டில் ) என் பூர்வீக மண்ணில் கால் பதிக்கிறேன்.....

1810'ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் 'திருநெல்வேலி ' மாவட்டம் உருவாவதற்கு சற்று முந்தைய காலம்... தமிழகத்தின் தென்பகுதிகள் (இப்போதைய திருநெல்வேலி , கன்னியா குமரி மாவட்டங்கள்) திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டு இருந்த காலம்.... நாடார் மற்றும் 18 சாதிப் பெண்கள் மேலாடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு, அதை எதிர்த்து மக்கள் பெருவாரியாக திரண்டு சமஸ்தானத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த காலக்கட்டம்....

அதோ எம் குடும்பத்தின் ஆதிவேரும் முதல் தலைமுறையுமான திரு.முத்துராம நாடார், ஶ்ரீவைகுண்டத்திற்கு சற்றுத் தொலைவில் கிழக்கே பெருங்குளம் என்ற வைணவத் திருத்தலத்திற்கு மேற்கே அமைந்த நீர்வளம் மிக்க சிவகளை என்ற சிற்றூரில் சீரும் சிற்புமாய் தன் சுற்றங்கள் சூழ செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார் ... சிவகளை நாடார் குலமக்களின் குலதெய்வமான முப்புராதி அம்மன் கோயிலின் பரம்பரை தர்மகர்த்தாவாகவும் சிறப்பாக திருத்தொண்டு புரிந்து வருகிறார். கண்படும் திசை எங்கும் கழனிகளும் களஞ்சியங்களும் , ஆவினப் பண்ணைகளும் பெற்று நிறைந்த செல்வந்தராக வாழ்ந்த எம் ஆதி தந்தைக்கு, காலம் செய்த சோதனையாய், வானம் பொய்த்தது, வானம் பார்த்த அவர் பூமியும் வறண்டது... விளைச்சலை நம்பி வாழ்ந்த அவ்வூர் மக்கள் , வாழ வழியின்றி குடும்பம் குடும்பமாக பிழைப்புத் தேடிப் பல ஊர்களுக்கு குடி பெயர்ந்தனர்... எம் ஆதி தந்தையும் தம் குடும்பம் , தன் பண்ணை ஆட்கள் மற்றும் அவரை நம்பி வாழ்ந்த குடும்பங்களையும் உடன் அழைத்துக் கொண்டு கையிருப்பான ஆவினங்களுடன் கீழ்த்திசை நோக்கிப் பயணித்தார்... வளமான பூமியை நாடிச் செல்லும் வழியில், அவருடன் வந்த பசுக்களில் ஒன்று ஒரு கன்றை ஈன்றது... உடன் வந்த உறவுகள் , கன்று ஈன்றது நல்ல சகுனத்திற்கு அறிகுறி ... இந்த இடத்தையே இனி இருப்பிடமாகக் கொள்ளலாம் என்று எடுத்துரைக்க, எம் ஆதி தந்தையும் அதை ஏற்றுக் கொள்கிறார் .....
(அதுவே இன்று சிவத்தையாபுரம்)...., அவ்விடம் மணல் நிறைந்த தேரியாகவும், முட்புதர்களும் கற்றாழைகளும் கள்ளிச் செடிகளும் முள் மரங்களும் அடர்ந்து வளர்ந்து நிறைந்ததாகவும் காட்சி அளித்தது..... உறவுகள் மற்றும் பண்ணையாட்கள் உறுதுணையுடன் காடுகளை திருத்தினார்.... வீதிகள் அமைத்து வீடுகளையும் நிர்மாணித்தார்... தென் திசையில் பண்ணை ஆட்களும், வடதிசை நோக்கி வாசல்கள் அமைத்த வீடுகளில் எம் ஆதி தந்தையின் குடும்பத்தாரும் வாழத் தொடங்கினர்... தன் கடுமையான உழைப்பால் கழனிகளை உருவாக்குகிறார் ..... படிப்படியாய் செல்வம் செழிக்கிறது... அவர் குலமும் தழைத்தோங்குகிறது...

தன் தாய்மாமன் மகளை மணவாழ்வில் கரம்பற்றி இன்புற்று வாழ்ந்த அவருக்கு மூன்று ஆண்மக்கள் பிறக்கின்றனர்.... அவர்களே எம் குடும்பத்து இரண்டாம் தலைமுறையினர்... அவர்களில் ஒருவர்தான் என் பாட்டனாரின் முப்பாட்டனார் திரு.மு.ராம நாடார்.....
பின்னர் சிவத்தையாபுரத்தையே பூர்வீகமாக வாழ்ந்து வாழையடி வாழையாக , எம் மூன்றாம் தலைமுறையான திரு.ரா.வெள்ளைக்கண் நாடார், நான்காம் தலைமுறையாக அவர் புதல்வர்கள் திரு.வெ.ராமசாமி நாடார் ,வீரசூர பெருமாள் நாடார்( இன்றுவரை எங்கள் குடும்பத்தாரால் பூவையா சாமி என்று வணங்கப்படுபவர்) மற்றும் மூன்று சகோதரர்கள்....
ஐந்தாம் தலைமுறையான திரு.வெ.ராமசாமி நாட்டாரின் புதல்வர் எனது தாத்தா திரு.சின்னத்தங்கம் (எ) லட்சுமணன் என வம்சம் வளர்ந்தது.....

எனது தாத்தா திரு.சின்னத்தங்கம் அவர்களின் மனைவி தலைப்பிரசவத்தில் காலமானதால், குடும்பத்தாரின் கடும் எதிர்ப்பைக் கடந்து பாதாளம் அடையான் குடும்பத்தைச் சேர்ந்த எனது பாட்டி ஐயங்கண்ணுவை மணம் முடித்து, தனக்குச் சீராகக் கொடுக்கப்பட்ட தேரிமேட்டில் உள்ள இடத்தில் இல்லறம் அமைத்து வாழத் தொடங்கினார்...

எனது ஆதித்தந்தை திரு.முத்துராம நாடார் கணிதம், இசை, சோதிடம், வான சாஸ்திரம், சித்த மருத்துவம் ஆகியவற்றில் தலைசிறந்தவராக இருந்தது மட்டும் அல்லாமல் கவிபாடுவதிலும் திறம்பெற்றவராக திகழ்ந்துள்ளார்... அவர் மரபணுவைப் பெற்ற என் தாத்தா திரு.சின்னத்தங்கம் அவர்களும் சோதிட சாஸ்திரத்திலும், சித்த மருத்துவத்திலும் சிறந்து விளங்கினார் ... ஊர் முழுவதும் காலரா தொற்று பரவி மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தபோது , தேரிமேட்டில் மட்டும் அல்லாமல் அவரை நாடிவந்த பல ஊர் மக்களையும் தன் சித்த வைத்திய முறையால் உயிர்ப்பிழைக்க வைத்துள்ளார்... எலும்பு முறிவு , விஷக்கடி அத்தனைக்கும் அவரின் வைத்தியத் திறமையை கேள்வியுற்று பல ஊர்களில் இருந்து சிகிச்சைபெற மக்கள் தேடிவருவார்களாம்... அதற்காக அவர்களிடம் எதையும் கைம்மாறாக பெற்றதில்லை ... ஊரில் சிறுசிறு வழக்குகளை தீர்த்து வைப்பவரும் அவரே...

சிவகளை குடும்பத்தின் வாரிசு என்பதாலேயே தாத்தாவுக்கு ஊருக்குள் கூடுதல் மதிப்பு... அவரது பிள்ளைகளான
திருமதி.பூங்கனி
திருமதி.பூவம்மாள்
திருமதி.பொன்னுத்தாய்
திருமதி.சந்திரா(எனது தாயார்)
திருமதி.அழகு சுந்தரி
திரு.பற்குணப் பாண்டியன்( தாய் மாமா)
திருமதி.காந்திமதி
திருமதி.விஜயாள்
திருமதி.பத்மாவதி ஆகியோர் இந்த சிவகளை குடும்பத்தின் ஆறாம் தலைமுறையினர்....

இவர்கள் வழிப் பிறந்த பிள்ளைகள் (நானும் என் சகோதரர்கள் கலைவாணன் மற்றும் இசை வாணனும் இதில் அடக்கம்) சிவகளை குடும்பத்தின் ஏழாம் தலைமுறையினர்....

இக்குடும்பம் மேலும் மேலும் தழைத்து இன்று ஒன்பதாம் தலைமுறையையும் கண்டுள்ளது...

இத்தனை தலைமுறைகள் கடந்தும், எங்கள் ஆதிவேரின் பண்பு நலன்கள் யாவையும் அத்தனை வாரிகளிலும் மரபணுவாய் உயிர்பெற்று பரிமளித்தக் கொண்டே இருக்கிறது... இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே எம் வமசத்தார் சிவகளையிலிருந்து வெளியேறி சிவத்தையாபரத்தில் குடியேறியப் பின்பும் இன்றுவரை தங்கள் பூர்வீகத்தை மறக்கவில்லை.... தங்கள் ஆதி தந்தை திரு.முத்துராம நாடார் , முப்புராதி அம்மன் கோவில் குருபூசையை தவறாது திங்கட் கிழமைதோறும் சிவகளை சென்று எவ்வாறு நடத்திவந்தாரோ, அவ்வாறே இன்றுவரை அவர் தலைமுறையினர் நடத்தி வருகின்றனர். இன்றளவும் திருக்கோவிலின் முதல் பூசை உரிமை திரு.முத்துராம நாடாரின் வாரிசுகளுக்கே உள்ளது.

நான்காம் தலைமுறையினர் வாழ்ந்த காலக்கட்டதில், 19நூற்றாண்டின் முடிவில் ஆங்கிலேயர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்களும் சிவத்தையாபுரம் அருகில் உள்ள சாயர்புரம் பகுதியில் குடியேறி பல கல்விக் கூடங்களை அங்கு நிறுவியுள்ளனர்... கிறிஸ்தவ மதபோதனைகளால் ஈர்க்கப்பட்டதாலும், கல்வியின் மேல் இருந்த நாட்டத்தாலும், அன்றை நாடார் குலத்தவர்மீது புகுத்தப்பட்டிருந்த சாதிய ரீதியான கொடுமைகளாலும் , இந்த நான்காம் தலைமுறையை சார்ந்த ஒரு சாரார் கிறித்துவ மதத்தை தழுவினர் .....

(முதல் தலைமுறை முதல் ஐந்தாம் தலைமுறை வரை , சிவகளை குடும்பத்தில் பிறந்த பெண் வாரிசுகள் பற்றி தகவல்கள் சரியாக கிடைக்கப்பெற இயலவில்லை என்பதை மிகுவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்..)

எழுதியவர் : வை.அமுதா (22-Aug-21, 10:44 pm)
பார்வை : 39

மேலே