தீரா காதல் தீயாக மோகம்

இரவோடு திமிரும்
பகலோடு உறவும்
புரியாத பேரின்பம்
மெய்யாக மெய்யானதே

உடைவாளின் கூர்மை
பூக்கள் திறக்கின்ற
தருணம் ஓயாத
சலனங்கள் உரையாடுதே

வேர்ச்சொல்லின் இளமை
தந்திகள் மீட்டும் நேரம்
அகமின்னூட்டம் ஒளிகூட்டுதே

குறுமிளகின் காரம்
குற்றால அருவியின் வேகம்
தும்கூர் புளியின் சுவையென
எல்லாமும் சேர்ந்து அமுதானதே

காதோடு பேசும் மென்தென்றல்
காற்றும் பெருமூச்சாக சுடுகின்றதே

குதிரில் அடங்காது தளும்பும்
பொன்காலை மழையும் போதை
மனமும் முன்னேறிச் செல்லலும்
வழி எங்கும் வானவில் சிதறல்களே

முழங்காலிட்டு புகழ் நெஞ்சின்
முழுபாரம் தாங்கி பாலுண்ணும்
எண்ணங்கள் தவமின்றி வரமானதே

சதுரங்க ஆட்டம் முடியாது தொடர
இங்கு வெற்றி தோல்வி ஏதுமில்லை
என எண்ணங்கள் மாற்றம் கொண்டதே...
மாயமனம் ஊஞ்சல் ஆனதே...ஆடுதே...

எழுதியவர் : மேகலை (27-Aug-21, 9:48 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 480

மேலே