தன்னையே உணருதல்

கலிவிருத்தம்

தன்னையே உணருதல் ஒருவகை கலையாம்
அன்பாய் உடலையும் உள்ளத் தையுமே
முன்பாய் நிறுத்தியே நலத்தை கேட்டல்
நன்றாய் வாழவே வழிவகை செய்யுமே.

ஆடவர் பெண்டீர் என்றதன் அளவினை
கூடாது கொண்டே நம்மையே நாமுமே
தேடிடும் பொழுதில் உணரலாம் யாவரும்
கோடியில் நன்மைகள் குவிந்திடும் காண்பாய்.

பொறாமை மிகுந்திடும் உள்ளமும் அமைதியை
பெறாமல் இருந்திடும் நிலையை உணர்ந்து
அறிவால் அதனையே களையவும் முயன்றால்
சிறியதாய் இன்பமும் மனதைப் பற்றுமே.

நாமே இதனைச் செய்தல் நலமென
நாமும் செய்யும் பணிகளின் முடிவுகள்
தாமதம் இன்றியே நம்மையும் சேர்ந்திடும்
பூமழை மனதுள் பொழிவதாய் தெரியுமே.

மரங்களும் மண்ணும் முகிலும் தத்தம்
தரவினை நிறைவாய் செய்திடும் பொழுதினில்
தருதலில் எவ்வகை தன்னுற் பத்தின்றி
வருகின் றமனித இனமுமே பெரிதோ.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (28-Aug-21, 9:45 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 69

மேலே