கேளாக வாழத்தக்க மூவர் – திரிகடுகம் 12

இன்னிசை வெண்பா

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது. 12 - திரிகடுகம்

பொருளுரை:

முயற்சியை ஆளுதலுடையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் கடன் படாமல் வாழ்தலுடையவன்,

உதவியாளன் என்று சொல்லப்படுபவன் வந்த விருந்தினர் பசித்து இருக்கையில் தனித்து உண்ணாதவன்;

பிறர் அறிந்த காரியங்களை மனத்திற் கொள்ளுதல் உடையவன் என்று சொல்லப்படுபவன் கேட்டவற்றை மறவாதவன்;

இம்மூவரும் தனக்கு நட்பினராயிருக்க ஒருவன் வாழ்வது அவனுக்கு நன்மை தருவதாகும்;

கருத்துரை:

கடன்படாது வாழ்வதே நல்ல முயற்சி யென்பதும் வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணுதலே சிறந்த உதவி என்பதும், தான் ஒருவர் சொல்லியவற்றை மறவாது மனத்திற் கொண்டிருத்தலே நற்சிந்தை என்பதும் ஆகும்.

தாள் - முயற்சி, வேள் - உதவி, என்பான் - என்று சொல்லப் படுபவன்:

பகுதி, "எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்" என்ற கம்பர் தனிக் கவியடியும் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்ற உண்மையை விளக்கும்.

விருந்து, கேள் - விருந்தினரையும் கேளிரையும் உணர்த்தும்.

கோளாளன் என்பதற்கு ஆசிரியர் கூறிய நூற்பொருளை அமையக் கொள்ளும் மாணாக்கன் என்று சொல்லப்படுவோன் கேட்டவற்றை மறத்தல் இல்லாதவன் எனலும் ஆம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Sep-21, 4:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே