வள்ளல் உயர்வீரர் மாய்ந்தாலும் மாநிலத்தோர் உள்ளமெலாம் உளராவர் - உரம், தருமதீபிகை 879

நேரிசை வெண்பா

வள்ளல் உயர்வீரர் மாய்ந்தாலும் மாநிலத்தோர்
உள்ளமெலாம் என்றும் உளராவர் - எள்ளலுறு
பற்றுள்ளம் கொண்ட படுபிசுனர் பேடியரீண்(டு)
உற்றிருந்தும் செத்தார் உணர்! 879

- உரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கொடையாளிகள். வீரர்கள் இறந்து மறைந்தாலும் உலகத்தாருடைய உள்ளங்களில் எல்லாம் என்றும் நிரந்தரமாய் நிலைத்து நிலவுகின்றார், உலோபிகள், பேடிகள் உயிரோடு இருந்தாலும் செத்தவராய் இழிந்து சீரழிந்து கழிகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இந்த உலகில் உயிரினங்கள் பிறந்து வருதலும் இறந்து போதலும் நிரந்தரமாய் நிகழ்ந்து வருகின்றன. எல்லையில்லாதபடி எண்ணிறந்த சீவகோடிகள் யாண்டும் தோன்றி மறைதலால் இவ்வுலக வாழ்வு மாயத் தோற்றம் என் நேர்ந்தது.

வானவில், மேகமீன், நீர்மேல் குமிழி என மனித வாழ்வின் நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள இவ்வாறு உவமானங்கள் வந்துள்ளன. விரைந்து அழிந்து போகும் நிலையில் பிறந்துள்ள மனிதன் என்றும் அழியாத புகழை அடைந்து கொள்ளின் அவன் விழுமிய பாக்கியவானாய் விளங்கி நிற்கின்றான். அரிய புகழை அடைவதில் கொடையும் வீரமும் உரியவுறவுகளாய் மருவியுள்ளன. இசையின் ஒளிகள் இவற்றுள் வீசுகின்றன.

உண்மையான வண்மையும் வீரமும் ஒருங்கே அமைந்திருந்தமையினாலேதான் கன்னன் உன்னதமான கீர்த்தியில் ஒளி பெற்று மிளிர்கின்றான். இவனுடைய ஈகையும் தீரமும் விவேகமும் வீரப்போரும் யாரும் வியந்து போற்றும் அதிசய நிலையின. கொடைக்குக் கன்னன் என்னும் முதுமொழி இவன் கொடுத்து வந்துள்ள அருமை பெருமைகளைக் குறித்து வந்துள்ளது.

கன்னனுக்குப்பின் கொடையும் இல்லை;
கார்த்திகைக்குப்பின் மழையும் இல்லை.

என்னும் பழமொழி இவனது கொடையின் உயர்கிலையை நயமாக விளக்கியுள்ளது. வையத்துக்கு மாரி போல் இவன் வாரி வழங்கி வந்துள்ளமை உணர்ந்து கொள்ள வந்தது. துரியோதனன் முதலிய கெட்ட தொடர்புகள் ஒட்டியிருந்தும் இவன் உத்தம நீர்மையில் உயர்ந்து உய்தி பெற்றுள்ளமை உய்த்துணரத் தக்கது. அருந்திறலும் பெருந்தகைமையும் பொருந்தியுள்ளன.

பாரதப் போரில் பதினேழாம் நாள் விசயனோடு இவன் கடும்போர் புரிந்தான்; முடிவில் அவ்வீரன் சீறித் தொடுத்த கூரிய பாணங்களால் உடல் முழுதும் புழைகளாய் உதிரம் ஒழுக இவன் உயங்கி விழுந்தான். அவ்வாறு மயங்கி விழும்பொழுதும் எதிரியைக் குறி தவறாமல் எய்து கொண்டே சாய்ந்தான். அந்த வித்தக வீரம் எங்கும் வியப்புகளை விளைத்தது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

எத்தலங் களினு மீகையா லோகை
..வாகையா லெதிரிலா வீரன்,
மெ’ய்’த்தல முழுதுந் திறந்துகு குருதி
..வெயிலவன் கரங்கள்போ லுகுப்பக்,
கொத்தல ரலங்கன் மகுடமுங் கவச
..குண்டலங் களுமுருக் குலைந்துங்
கைத்தல மறந்த தில்லைவிற் குனிப்புங்
..கடுங்கணை தொடுத்திடுங் கணக்கும் 236

- பதினேழாம் போர்ச் சருக்கம், பாரதம்

கன்னனுடைய வில்லாடலையும் வீரத் திறலையும் இங்கே வியந்து நோக்கி உள்ளம் இாங்கி நாம் உருகி நிற்கிறோம். இவ்வீரன் உடல் சோர்ந்து கீழே சாய்ந்ததைக் கண்டதும் நேரே போராடி நின்ற கண்ணனும் விசயனும் கண்ணீர் விட நேர்ந்தனர். அவ்வீரனைத் தனியே தேரில் நிறுத்திவிட்டுக் கண்ணன் விரைந்து கன்னனிடம் வந்தான்; அருகே அணுகி நின்று, ’வீர வள்ளலே!” என்று விளித்தான். வில்லோடு தேரில் சாய்ந்து கிடந்தவன் விழித்துப் பார்த்தவனிடம் கண்ணன் விசித்திரமாய் வார்த்தைகள் ஆடினான். அந்த உரையாடல்களை அயலே காண்க.

கண்ணன்: இங்கே சமூகத்தைத் தேடியே வந்தேன்.
கன்னன்: தாங்கள் யார்? எந்த ஊர்?

கண்ணன்: நான் இமயமலையில் தவம் புரிந்து இருந்தேன்; தவம் முடிந்தது: கொடிய வறுமைத் துயரால் நெடிது வாடுகின்றேன்; அதனால் ஈண்டு வந்தேன். வேண்டியதை வேண்டியபடியே யாருக்கும் அள்ளித் தரும் வள்ளல் என்று கேள்விப்பட்டேன்; ஆதலால் நேரே இங்கு ஆவலோடு வர நேர்ந்தேன்.
:
கன்னன்: நீங்கள் வந்தது.மிகுந்த மகிழ்ச்சி. எதிரியினுடைய பாணங்களால் அடிபட்டுப் போர்க்களத்தில் இச்சமயம் நான் சாக நேர்ந்துள்ளேன். நாள்தோறும் பொருளை எல்லாருக்கும் நான் அள்ளிக் கொடுக்கும் பொழுது நீங்கள் வரவில்லையே! என்று வருந்துகிறேன். சென்றதை நினைந்து இரங்கி என்ன பயன்? இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டும்? வேண்டியதை விரைந்து சொல்லுங்கள்.

கண்ணன்: இதுவரை நீங்கள் செய்துள்ள புண்ணியம் முழுவதையும் எனக்குக் கொடுங்கள்; அதனையே நான் எண்ணி வந்தேன். அதுவே எனக்குப் போதும்.

கன்னன்: என்னிடம் புண்ணியம் இருப்பதாகத் தாங்கள் எண்ணிக் கேட்டதே எனக்குப் பேரின்பம் தந்தது; என்னுடைய புண்ணியம் யாவும் உங்களுக்கு உள்ளன்போடு உரிமை கூர்ந்து உறுதியாய்த் தந்தேன்.

கண்ணன்: இது அரிய பெரிய கொடை; ஆதலால் தண்ணீர் கொண்டு என் கையில் தாரை வார்த்துத் தர வேண்டும். அவ்வாறு தருவதே செவ்வையாய்த் தந்ததாம்;

கன்னன்: அருகே தண்ணீரைக் காணோம்; என் மார்பில் புண்ணீர் உள்ளது. எதிரியின் பாணத்தால் பாய்ந்து வருகிற இந்த உதிர நீரால் தாரை வார்த்துத் தரலாமா?

கண்ணன்: குருதிப்புனல் மிகவும் உறுதியானது; தரலாம்.

கன்னன்: இதோ என் மார்பிலிருந்து பெருகி வருகிற செந்நீர் மேல் ஆணையாய் எனது புண்ணியம் எல்லாம் கண்ணியமான உங்களுக்கு உவந்து தந்தேன்.

கண்ணன்: அதிசய வள்ளலே! உங்களுடைய கொடையும் குணமும் எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்துள; மேருமலையிலிருந்து நான் அருந்தவம் செய்தவன்; ஈசன் அருளை நேரே பெற்றவன்; உங்களுக்கு ஏதாவது சிறந்த ஒரு வரம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்; எதை வேண்டுமானலும் கேளுங்கள்; இப்பொழுதே அதைத் தருகின்றேன்.

கன்னன்: நான் கொடுத்துப் பழகினவன்; வாங்கும் வழக்கம் எனக்கு இல்லை. யாதொன்.றும் வேண்டாம்.

கண்ணன்: எப்படியாவது என்னிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எதையும் கேட்கலாம். தயவு செய்து கேளுங்கள்.

கன்னன்: நான் மீண்டும் ஈண்டு இந்த மனித உலகத்தில் பிறந்தால் யாருக்கும் இல்லை என்னாமல் எதையும் கொடுக்க வல்ல நல்ல உள்ளத்தை எனக்கு ஈந்தருளுக, ஈகையே எவ்வழியும் ஒகை தந்து வந்துள்ளது; புனிதமான அந்த இனிய இதயமே போதுமானது.

கண்ணன்: ஆ! உத்தம வள்ளலே! உயர்ந்த கொடைக் குரிசிலே! உனது. ஈகை நிலை அதிசயமுடையது; நீ வேண்டியபடியே வளளல் நீர்மை தோய்ந்த அந்த உள்ளம் உனக்கு உண்டாம்; ஆனால் நீ பிறவி நீங்கிப் பேரின்பம் அடைய நேர்ந்துள்ளாய்! இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்னாத நல்ல இதயம் எந்த வள்ளலிடம் தோன்றினாலும் அது உன்னுடைய பான்மையாய் ஒளி புரிந்திருக்கும். உன் பிறப்பே பிறப்பு; நீ பெற்றதே பேறு; உன்னைக் கண்டதே கண்; அந்தக் கண்ணை யுடையவனே உண்மையான கண்ணன்.

இன்னவாறு கூறிக் கண்ணீர் மல்கிக் கன்னனைத் தழுவிக் கண்ணன் உள்ளம் கரைந்து உருகி நின்றான். உருக்கமான இந்த நிகழ்ச்சிகளை வில்லியாழ்வார் சுருக்கமாகவும் சுவையாகவும் பாடியிருக்கிறார். அயலே வருவன காண்க.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

அத்தவெற் பிரண்டு விற்கிடை யெனப்போய்
..ஆதபன் சாய்தல்கண் டருளி
முத்தருக் கெல்லா மூலமாய் வேத
..முதற்கொழுந் தாகிய முதல்வன்
சித்திரச் சிலைக்கை விசயனைச் செருநீ
..யொழிகெனத் தேர்மிசை நிறுத்தி
மெ'ய்'த்தவப் படிவ வேதிய னாகி
..வெயிலவன் புதல்வனை யடைந்தான் 237

தாண்டிய தரங்கக் கருங்கட லுடுத்த
..தரணியிற் றளர்ந்தவர் தமக்கு,
வேண்டிய தருதி நீயெனக் கேட்டேன்
..மேருவி னிடைத்தவம் பூண்டேன்,
ஈண்டிய வறுமைப் பெருந்துய ருழந்தே
..னியைந்ததொன் றிக்கணத் தளிப்பாய்,
தூண்டிய கவனத் துரகதத் தடந்தேர்ச்
..சுடர்தரத் தோன்றிய தோன்றால் 238

என்றுகொண் டந்த வந்தண னுரைப்ப
..இருசெவிக் கமுதெனக் கேட்டு,
வென்றிகொள் விசயன் விசயவெங் கணையான்
..மெய்தளர்ந் திரதமேல் விழுவோன்,
நன்றென நகைத்துத் தரத்தகு பொருணீ
..நவில்கென நான்மறை யவனும்
ஒன்றிய படிநின் புண்ணிய மனைத்தும்
..உதவுகென் றலுமுள மகிழ்ந்தான் 239

ஆவியோ நிலையிற் கலங்கிய தியாக்கை
..யகத்ததோ புறத்துதோ வறியேன்,
பாவியேன் வேண்டும் பொருளெலா யக்கும்
..பக்குவந் தன்னில்வந் திலையால்.
ஓவிலா (தி)யான்செய் புண்ணிய மனைத்து.ம்
.உதவினேன் கொள்க,நீ யுனக்குப்.
பூவில்வா ழயனு நிகரல னென்றாற்
..புண்ணிய மிதனினும் பெரிதோ 240

என்னமுன் மொழிந்து கரங்குவித் திறைஞ்ச
..விறைஞ்சலர்க் கெழலியே றனையான்,
கன்னனை யுவகைக் கருத்தினா னோக்கிக்
..கைப்புன லுடன்றரு கென்ன,
வன்னவ னிதயத் தம்பின்வா யம்பா
..லளித்தலு மங்கையா லேற்றான்,
முன்னமோ ரவுணன் செங்கைநீ ரேற்று
..மூவுல கமுமுடன் கவர்ந்தோன் 241

மல்லலந் தொடைய னிருபனை முனிவன்
..மகிழ்ந்துநீ வேண்டிய வரங்கள்,
சொல்லுக வுனக்குத் தருதுமென் றுரைப்பச்
..சூரன்மா மதலையுஞ் சொல்வான்,
அல்லல்வெவ் வினையா லின்னமுற் பவமுண்
..டாயினு மேழெழு பிறப்பும்
இல்லையென் றிரப்போர்க் கில்லையென் றுரையா
..இதயநீ யளித்தரு ளென்றான் 242

மைத்துன னுரைத்த வாய்மைகேட் டையன்
..மனமல ருகந்துதந் தவனைக்
கைத்தல மலரான் மார்புறத் தழுவிக்
..கண்மலர்க் கருணைநீ ராட்டி
எத்தனை பிறவி யெடுக்கினு மவற்று
..ஈகையுஞ் செல்வமு மெய்தி
முத்தியும் பெறுமு டிவிலென்று ரைத்தான்
..மூவரு மொருவனா மூர்த்தி 243
- பதினேழாம் போர்ச் சருக்கம், பாரதம்

இந்தப் பாசுரங்களைக் கூர்ந்து நோக்குவோர் நேர்ந்துள்ள நிலைகளை நேரே ஓர்ந்து கொள்ளுவர். கொடையிலும் வீரத்திலும் கன்னன் உயர்த்துள்ள உண்மைகள் ஈண்டு நுண்மையாய் உணர வந்தன. போர் முகத்தில் ஆவி அலமந்துள்ள பொழுதும் யார்க்கும் இல்லையென்னாமல் ஈயும் நல்ல இதயம் வேண்டும் என்று இவ்வள்ளல் வேண்டியிருப்பது உலக உள்ளங்களை உருக்கியுள்ளது.

இவனுடைய தீரச் செயலும் வீரச் சாவும் விழுமிய கொடையும் அதிசயமுடையன. யாரும் துதி செய்து வருவன. இவன் மாண்டு போய் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகின்றன; ஆயினும் இவனது பேரும் புகழும் பாரில் யாண்டும் ஓங்கி நிற்கின்றன. கொடை வீரங்களுக்குத் தலைமையாளனாய் உலகம் புகழ எவ்வழியும் திவ்விய நிலையில் இவன் ஒளிபெற்றுள்ளான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கொடையுளும் ஒருவன் கொல்லும்
..கூற்றினும் கொடிய வாள்போர்ப்
படையுளும் ஒருவன் என்று
..பயம்கெழு பனுவல் நுண்நூல்
நடையுளார் சொல்லிற்(று) எல்லாம்
..நம்பிசீ வகன்கண் கண்டாம்
தொடையலம் கோதை என்று
..சொல்லுபு தொழுது நிற்பார் 464 சீவக சிந்தாமணி

கொடையிலும் போர்ப்படையிலும் கன்னனைப் போல் சீவக மன்னன் சிறந்திருந்தான் என இது வரைந்து காட்டியுளது. விழுமிய மேன்மைகளுக்கு இவன் விளக்கமாய் விளங்கினான்.

உயர்ந்த ஆண்மகனாய்ப் பிறந்தவன் நடந்து வாழ வேண்டிய நயங்களை இங்கே வியந்து காண்கிறோம். உள்ளம் தீரமாய் உவந்து உதவுக, அதனால் புகழும் இன்பமும் பொருந்தி அகிலமும் வியந்து பேணி நயந்து வர நீ உயர்கதி யு.றுவாய்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Sep-21, 8:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே