உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோற் கூறீர் சிறுபஞ்ச மூலஞ் சிறந்து – சிறுபஞ்ச மூலம் 1

நேரிசை வெண்பா

ஒத்த வொழுக்கங் கொலைபொய் புலால்களவோ(டு)
ஒத்த விவையல வோர்நாலிட்(டு) - ஒத்த
உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோற் கூறீர்
சிறுபஞ்ச மூலஞ் சிறந்து 1

– சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

பொருந்திய நன்னடக்கை, கொல்லுதல், இல்லது கூறல், புலால் உண்ணுதல், திருட்டு ஆகிய இவற்றுடனே பொருந்திய இவற்றுக்கு எதிரிடையாகிய கொல்லாமை, பொய் கூறாமை, புலாலுண்ணாமை, கள்ளாமை என்னும் நான்கையுஞ் சேர்த்து ஒரு நூலில் கட்டி உலகிற் பொருந்திய மிகுதியாகிய சிறுவிலைக் காலத்தின் காரணத்தை அகற்றுகின்ற மழையைப் போல (நோய்களை யகற்றும்) சிறு பஞ்சமூலங்களைப் போன்று இந்நூலை சிறப்புற்று (கல்வியறிவாளரே!) நீங்கள் மக்கள் தீய குணங்களை நீக்கி நற்குணங்களைப் பெருக்குமாறு) சொல்லக்கடவீர்;

பொழிப்புரை: பொருந்திய வொழுக்கங் கொலை பொய் புலால் களவோ டொத்த விவையன்றி யிவற்றுக்கு மறுதலையாகிய நான்கு மென்று சொல்லப்பட்ட இவ்வைந்து மகப்பட்ட மிக்க பஞ்சத்தின் மூலத்தைத் தீர்க்கு மாரிபோலச் சிறு பஞ்சமூலமென்று மருந்தாக கூறீர் மிக்கு.

கருத்துரை: பஞ்சத்தைத் தீர்க்கும் மழையைப் போல மக்கள் வினைகளைத் தீர்க்கும் இச் சிறுபஞ்ச மூலமும் என்க.

இந்நூலில் ஒழுக்கம் கொலையின்மை முதலிய ஐந்தைப் பற்றிய பொருள்களே வருவதால்,

இவ்வைந்தையுஞ் சேர்த்துச் சிறுபஞ்சமூலங் கூறீர் என்றார்.

கொல்லாமை, பொய்யாமை, புலாணுண்ணாமை, கள்ளாமை முதலியனவும் ஒழுக்கத்தில் அடங்கு மெனினும், சிறந்த அறங்களாக நிற்பதால் அவை நான்கையும் தனித்தனி அறமாகக்கொண்டு மற்ற அறங்களை யெல்லாம் ஒன்றாக்கி இவ்வைந்தையுஞ் சேர்த்துச் சிறுபஞ்சமூலமெனக் கூறினார்.

சிறு பஞ்சமூலங்களாவன சிறிய ஐந்து வேர்கள்:

அவை கண்டங்கத்திரி வேர், சிறு வழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சில் வேர்.

இந்நூலிலுள்ள ஒவ்வொரு வெண்பாவும் உயிர்க்குறுதி பயக்கும் அவ்வைந்து பொருள்களை யுடைமையால், இந்நூலும் சிறு பஞ்சமூலம் எனப்படலாயிற்று, ஒழுக்கமும், ஓர் நாலும் எனக்கூட்டுக உரிச்சொல். கூறீர் என்பதற்கு நீங்கள் என்பது வினை முதலாக வருவிக்கப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Sep-21, 4:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே