யாண்டும் பெறற்கரியார் மூவர் – திரிகடுகம் 13

இன்னிசை வெண்பா

சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
குடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றி
மாண்ட குணத்தான் தவசியென் றிம்மூவர்
யாண்டும் பெறற்கரி யார். 13 - திரிகடுகம்

பொருளுரை:

பிறர் குணத்தை அறிந்து நடக்கிறவன் இளமை தொட்டு வந்த சுற்றத்தானாவான்;

மிகவும் குடிகளை பேணுதலில் வல்லவன் அரசனாவான்;

குற்றம் இல்லாமல் மாட்சிமைப்பட்ட குணத்தையுடையவன் தவசியாவான் என்று சொல்லப்பட்ட இம் மூவரும் எவ்விடத்தும் பெறுதற்கு அரியராவார்;

கருத்துரை:

பிறர் குணம் அறிந்து நடக்கவல்ல சுற்றத்தானும், குடிகளைக் காக்கவல்ல அரசனும், குற்றமில்லாது துறவோடிருக்கவல்ல தவசியும் எல்லாராலும் தேடிப் பெற வேண்டுபவராவர்.

இளங்கிளை - புத்திரன் என்பதுமுண்டு. கிளை – சுற்றத்தார், சால - மிகுதி.

குடியோம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணல். அஃதாவது ஆறிலொன்றாகிய இறைப் பொருளையும் வறுமை நீங்கிய வழிக் கொள்ளல் வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும் ஆம்.

தவமாவது - மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்கல் முதலாயின.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Sep-21, 9:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே