கிளிக் 3 கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கிளிக் 3 கவிதைகள்!


நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




வெளியீடு : மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 144, விலை : ரூ.100


******

நூலாசிரியர் கவிஞர் மதுரை முரளி தொடரித் துறையில் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டே இலக்கியத் துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர். இந்நூலை பெற்றோருக்கு காணிக்கை ஆக்கியது சிறப்பு. புதுக்கவிதையின் தாத்தா மு. மேத்தா அவர்களும் எழுத்துவேந்தர் இந்திரா சௌந்திரராஜன், லேனா தமிழ்வாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உள்ளனர். தமிழ்ச்செம்மல் சு. இலக்குமணசுவாமி, சிறைத்துறை துணைத்தலைவர் த.பழனி உள்ளிட்ட பலர் அணிந்துரை நல்கி உள்ளனர். 32 பக்கங்கள் வரை வாழ்த்துரை, அணிந்துரை உள்ளன.

உருட்ட முடியாத

மண் உருண்டையை
உருட்டும்

எறும்புக் கூட்டம்

தன்னம்பிக்கை ஊற்று

தன்னை விட பன்மடங்கு உருவமும் எடையும் கொண்ட பொருளை, எறும்பு கடுமையாக முயன்று இழுத்துச் செல்லும். உற்றுநோக்கி இக்காட்சியை ரசித்ததன் விளைவாக வடித்த புதுக்கவிதை நன்று. மனிதர்களுக்கு பாடமாக எறும்புகள் உள்ளன.

தந்தையின் தியாகம் / தாமதமாய் புரிகிறது
தாயின் அன்புக்கு / மத்தியில் தரணியில்
தான் உயர, உயர / உரசலுக்கு இடையே
பார்வைக் கோளாறு / பலருக்கும்!

சந்தனமாகத் தேய்ந்து மெழுகாக உருகி பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கின்றனர். ஆனால் வளர்ந்து உயர்பதவி, புகழ் அடைந்துவிட்ட பின்னர் வளர்த்திட்ட பெற்றோர்களை மறந்து விடுகின்றனர். இன்றைய இளையோரின் பார்வைக் கோளாறை புதுக்கவிதையின் மூலம் உணர்த்தியது சிறப்பு.

786 கடை எண் / தொடங்கியது துளசிமாலை
சிலுவை ஸ்டாண்டில் / இந்தியா இங்கே
இதோ!

ஒரு மதம், ஒரு நாடு, ஒரு மொழி என்பதெல்லாம் நடைமுறைக்கு உதவாத ஒன்று. பன்மொழி, பன்மதம், பல்இனம் கலந்தது தான் இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியா. வணிக நிறுவனத்தில் மும்மதங்களின் பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் எம்மதமும் சம்மதமே. மதவேற்றுமை இந்தியர்களுக்கு இல்லை ; இல்லவே இல்லை என்பதை குறியீடாக உணர்த்தியது சிறப்பு.

முகநூல் / முகன் தன்முகம் / மறைக்கும்
மறக்கும் / மூழ்கினால் / முடங்கினால்
முடிவு?

முகநூலில் சிலர் தன்முகம் காட்டாமல் பிறர்முகம் காட்டி முகநூல் வைத்துள்ளனர். சமூக ஊடகமான முகநூலையும் அளவோடு பயன்படுத்த வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றனர். சிலர் முகநூலிலே மூழ்கி விடுவதும் முடங்கி விடுவதும் தவறு என்று உணர்த்தும் விதமாக வடித்திட்ட புதுக்கவிதை நன்று. இன்றைய தேவை விழிப்புணர்வு.

வாஞ்சை நடிகனை / காண / வரிசையாய்
நின்றவன் / வாடிப் போனான் / காருக்குள்
கடந்து / போனவனைக் காணாது / இருந்தும்
மாலை / வீசினான் ... கார் மீது / வழுக்கி விழுந்தது
சக்கரத்துக்கு / அடியில் / அவன் ஆசையைப் போல
பேராசை பொருள் நஷ்டம்!

இன்றைய இளைஞர்கள் பிடித்த நடிகரின் மீது பற்றுக்கொண்டு அவர் வரும் செய்தி அறிந்து பெற்றோரின் பணத்தில் மாலை வாங்கிக் கொண்டு சென்ற ரசிகனை பிரபல நடிகரோ கண்டுகொள்ளாமல் காரில் ஏறிச்சென்று விடுகிறார். வாங்கிய மாலையை காரில் வீசியும் வழுக்கி விழுந்து விடுகிறது. இந்த நிகழ்வைச் சொல்லி இவை எல்லாம் தேவையா? வெட்டிவேலை எதற்கு? கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகரின் பின்னால் அலைவதால் எந்த பயனும் இல்லை. ரசிகர் மன்றம் எதற்கு மாலை, மரியாதை எதற்கு? என்று விழிப்புணர்வு விதைக்கும்வண்ணம் புதுக்கவிதை வடித்துள்ளார்.

இதனைப் படிக்கும் இளைஞர்கள் திருந்திட வேண்டும். நடிகர் பின்னால் அலைவதை நிறுத்திட வேண்டும்.

காலை / பிரித்த மூட்டையை / இரவு
மனமில்லாமல் மூடினான் / லாப நஷ்டக்
கணக்கு / பாரமாய் ... மனதில் / நடைபாதை
வியாபாரி!

‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்ற வள்ளலார் வாசகம் போல நடைபாதை வியாபாரிகள் காலையில் விரித்த கடையை இரவு வியாபாரம் ஆகாமலே திரும்பவும் விற்கவந்த பொருட்களை மூட்டைக் கட்டிக் கொண்டு செல்லும் நிலை. கொரோனா என்ற கொடியவன் ஒன்று, இரண்டு என்று அலைஅலையாக வந்து மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டது. பலருக்கு வேலை பறிபோனது, சம்பளம் நின்று போனது. வருமானம் இன்றி, வாங்கும் திறன் இன்றி மக்கள் தவிக்கின்றனர். சாலையோர வியாபாரிகளும் வியாபாரம் இன்றி வாடுவதை உணர்த்தியது சிறப்பு.

மாத்திரை போட்டும் / உறங்காது உருண்டவன்
சன்னல் பார்வையில் / பேப்பர் தலைவிரிப்பில்
உற்சாகமாய் உறங்கியவன் / எதில் கோளாறு?

கவிப்பேரரசு வைரமுத்து எழுதுவார். மெத்தையை வாங்கலாம், தூக்கத்தை வாங்க முடியுமா? என்று. மாடமாளிகையில் பணக்காரன் கட்டிலில் பஞ்சுமெத்தையில் தூக்க மாத்திரை சாப்பிட்டும் தூக்கம் வராமல் தவிக்கிறான். ஆனால் உழைக்கும் ஏழை, பேப்பர் தலைவிரிப்பில் கூட நிம்மதியாக உறங்குகின்றான். காரணம் உழைப்பாளி உழைப்பின் களைப்பில் உறங்கி விடுகிறான். பணக்காரனோ உடல் உழைப்பின்றி மட்டுமல்ல, மனக்கவலை காரணமாக உறக்கமின்றி தவிக்கிறான். புதுக்கவிதை நன்று.

52 குறுங்கவிதைகள் புதுக்கவிதைகளாக வடித்துள்ளார். சமுதாயத்தை உற்றுநோக்கி கண்ணில் கண்ட காட்சியை மனதில் பட்ட விசயங்களை உடனே புதுக்கவிதைகளாக வடித்து உள்ளார். ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சிந்தனை மின்னலை வெட்டும்வண்ணம் வடித்துள்ளார். தமிழ் படிக்காத பொறியாளர் தமிழுக்குச் செய்யும் தொண்டு சிறப்பு. தொடர்ந்து இயங்கி வருகின்றார். தொடர்ந்து நூல்கள் வெளியிட்டு வருகிறார். கவிதை, கதை, நாடகம் என பல்துறை வித்தகராக வலம் வருகின்றார். கவிஞர் மதுரை முரளி மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார், வாழ்த்துக்கள், பாராட்டுகள். திரைப்படங்கள் போல கிளிக் 1, கிளிக் 2, கிளிக் 3 என்று வெளியிட்டுள்ளார். போதும், கிளிக் 4 வேண்டாம். ஆங்கிலச்சொல் தவிர்த்து நல்ல தமிழ்ப்பெயர் சூட்டுங்கள்.



--

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (4-Sep-21, 5:18 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 40

மேலே