நட்கப் படாஅ தவர் இம்மூவர் – திரிகடுகம் 15

இன்னிசை வெண்பா

பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் - ஊழினால்
ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவர்
நட்கப் படாஅ தவர். 15 திரிகடுகம்

பொருளுரை:

பொய்ச் சொற்களைப் பேசி அதனால் உயிர் வாழ்கின்ற திருவில்லாதவன்,

முறைமை வேறுபட்டு ஒருவன் தாழ்ந்த இடத்து அவனைத் தனக்கு நேராக நினைக்கின்ற மூங்கில் போலும் புரைபட்ட மனத்தவன்,

ஒருவனைச் சேரவேண்டிய முறையினால் சேர்ந்து அவன் காரியத்திலே தனக்குப் பயன் பார்க்கின்றவன் ஆகிய இம் மூவரும் யாவராலும் நட்புக் கொள்ளத் தகாதவர்.

பொறியறை - அறு.

1. See பொறியிலி; (தொல். சொல், 57, உரை.)
.2. One devoid of luck; திருவிலி. பொய்வழங்கி வாழும் பொறியறையும் (திரிகடு. 15).

பொறியிலி

1. Ignorant, senseless person; அறிவற்றவர்- பறிதலைப் பொறியிலிச் சமணர் (திருப்பு. 259.)
2. Deformed person; உறுப்புக் குறையுடையவர் - கைகான் முடங்கு பொறியிலி (பிரபுலிங்.துதிகதி, 1)
3. Unfortunate person; அதிட்டமற்றவர்

கருத்துரை:

"பொய் சொல்லும் வாய்க்குப் போசனம் கிடையாது" என்றபடி பொய் சொல்பவனிடம் செல்வம் நிலையாது;

தனக்கு மேம்பட்டவன் ஏதாவது காரணத்தால் தாழ்வடைந்த காலத்தும், அவனைத் தனக்கு மேலானவனாகவே கருதவேண்டும்;

நட்புச் செய்யப்பட்டவனிடமிருந்து தனக்கு என்ன பயனுண்டாமென்று எதிர்பார்த்தல் தகாதது.

பொறி - இலக்குமி; இங்குச் செல்வத்தைக் குறித்தது.

அறை - அறுதலையுடையவன், இனிப் பொறி அறை என்பதற்கு அறிவற்றவன் என்றும் பொருள் கூறலாம்.

கை - ஒழுக்கம். தட்டை - மூங்கில்;

மேலோரை வணங்காமையால் தட்டை என அஃறிணைப் பொருளாகக் கூறப்பட்டது;

ஊழ் - முறைமை.,

பொறியறை, தட்டை என்ற இரண்டும் உயர்திணைச் சிறப்புப் பெயராகிய பார்ப்பான் என்பதோடு விரவிச் சிறப்பினால் உயர்திணை முடிபேற்றன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Sep-21, 6:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே