கல்யாணமே வைபோகமே

கல்யாணமே... வைபோகமே....
(பெரியப்பா திரு.ஆலடி அருணா & பெரியம்மா திருமதி.கமலா அவர்களின் திருமணம் )

“ஹலோ! அமுதா ! நான் பெரியம்மா பேசுறே... எப்டி இருக்க?”
பெரியம்மா திருமதி.கமலா ஆலடி அருணா அவர்களின் பாசமிகு உரிமையானக் குரல்....
அன்பின் இன்ப அதிர்வில் நலம்கூறி நலம் விழைந்தேன்....
"நான் நல்லா இருக்கே மா... பையன் மெடிசன் முடிச்சிருப்பான்ல..... மேல என்ன படிக்க ஆசப்படுறான்?
வானதி ஊர்லருந்து வந்தாளா...?" வழக்கமான பெரியம்மாவின் குசலம் விசாரிப்புகள்....
அம்மா அப்பா மறைவிற்குப் பின்பு இப்படி என்னை நலம் விசாரிக்கும் நெருங்கிய உறவுகளில் பெரியம்மாவும் ஒருவர்... அதனால் அது என் பெற்றோரின் குரலாகவே என் இதயத்தை வருடும் ....
" நீ எழுதுறதெல்லா பெரியம்மா வாசிக்றேமா... ரொம்ப அருமையா எழுதுற... உங்க பெரியப்பாவோட எழுத்துத் தெறம உனக்கும் இருக்கு... நம்ப குடும்பத்துல நீ இப்டி எழுதுறது, எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமா... நீ இன்னும் இன்னும் நெறைய எழுதணும் , நெறைய விருதுலா வாங்கணும்" நெஞ்சார என்னை வாழ்த்தினார்... உண்மையில் நெகிழ்ந்துபோனேன்...
அப்படியே பெரியம்மாவிடம் என் அடுத்த புத்தகம் "வேர்களை வருடும் விழுது" பற்றி சுருக்கமாக விளக்கினேன்....
"பெரியம்மா! அப்டியே ஒங்க திருமண நிகழ்வை பத்தி சொல்லுங்க பெரியம்மா, அதையு அந்த புத்தகத்துல சேரத்துக்கிறேன், அருமையா இருக்கும்" மெல்ல என் ஆசையை எடுத்துரைத்தேன்...
"எங்க கல்யாணமா, அவ்ளோ ஞாபகம் இல்லமா, ஞாபகத்துல இருக்குறவரைக்கும் சொல்றே எழுதிக்கோ..." மிகுந்த மகிழ்வுடன் தன் நினைவுகளை அறுபத்தோரு ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்துச் சென்று, அவர்கள் வாழ்வின் அந்த பொன்னான தருணத்தின் நிகழ்வுகளை, அழகிய மலர்ச் சரமாக கோர்த்து என் கண் முன்னே படைத்தார்..... அதை இங்கே உங்கள் பார்வைக்கு படைக்கின்றேன்.....

பெரியம்மா திருமதி.கமலா ஆலடி அருணா அவர்கள் தாய்வழியே திரு. V.A.கிருஷ்ணசாமி நாடார் மற்றும் தந்தை வழியே திரு. சந்தனக்குமாரப் பாண்டியர் அவர்களின் பேத்தி ஆவார் ... திருமதி.k.சந்திரா மற்றும் S.சம்பத் அவர்களின் ஏகபுதல்வியாகப் பிறந்தவர்... கருவில் இருக்கும்போதே தன் தந்தையை இழந்தவர்....
தாய் மற்றும் அவர் தாய்வழி சொந்தங்களின் அரவணைப்பில் வளர்ந்தவர்... அன்பு, அமைதி, அடக்கம், பக்தி என்ற அனைத்தும் பெற்று வளர்ந்த சீதாபிராட்டின் மறுவுரு அவர்....
"மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதாலாள்" என்ற இளங்கோவடிகளின் வரிகளுக்கு உயிரோட்டம் தந்தவர்..... அவருடைய நற்குணம் கண்டு அவரை தன் பூசாரிக் குடும்பத்திற்கு மருமகளாக்க வேண்டும் என்று எண்ணிய எனது சின்னத் தாத்தாவும் , பெரியம்மாவுக்கு அத்தையின் கணவருமானா திரு.வேலாயுதம் அவர்கள் , தனது அண்ணன் திரு.வை.வைதிலிங்கம்(எனது தாத்தா) அவர்களை நாடினார் ....

தன் தம்பியின்மீது மிகுந்த பாசம் வைத்திருந்த என் தாத்தா, அவர் முன்னெடுக்கும் விசயம் நலமாகவே இருக்கும் என்று எண்ணியதால், தனது மூத்த மகன் திரு.அருணாசலத்திற்கு ஏற்ற வரன் இவர்தான் என்று முடிவு செய்து ,திருமணப் பேச்சை நல்லமுறையில் உடனே தொடங்கியுள்ளார்..... ஆனால் பெரியம்மாவின் தாத்தா திரு.சந்தனக்குமாரப் பாண்டியர், முதலில் பெண்ணை வந்து பாருங்கள் , அதற்குப்பின் மற்றதை பேசலாம் என்று திட்டவட்டமாக கூறிவிட ... பெண்பார்க்கும் படலம் இனிதே தொடங்கி உள்ளது.... பாட்டி திருமதி.பத்ரகாளி அவர்கள் மட்டுமே பெண் பார்க்கச் சென்றுள்ளார்...
சரியான உயரம்
மெலிதான தேகம்
சிவந்த நிறம்
மருண்ட விழிகள்
மலைத்தப் பார்வை
அளவான இதழ்கள்
அடக்கமான பேச்சு
வெண் பிறை நெற்றி
அதில் முழுமதி திலகம்
வழித்து வாரிய நீண்ட அடர்ந்த கூந்தல்
அதில் அடக்கமாய் சூடிய மல்லிகை
அம்சமான சேலைக்கட்டு
பதினேழு வயதே நிரம்பிய பெரியம்மா ஆதிசக்தியாக அடக்கமாக முன் வந்து நிற்க... யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்... பார்த்த மாத்திரத்தில் பாட்டி , அவர்தான் தனது மருமகள் என்று முடிவுசெய்துவிட்டார்.... பெண் வீட்டாரிடம், அதுவேண்டும் இதுவேண்டும் என்ற நிபந்தனையும் பாட்டி வைக்கவில்லை.... ஆனால் 35சவரன் நகை பெரியம்மாவுக்கு போடுவதாக பெண்வீட்டார் தங்கள் விருப்பத்தை சொல்லியுள்ளனர்.... (அப்போது ஒருசவரன் விலை ரூ65.....)
பெற்றோரின் விருப்பம் எதுவோ அதையே முழுமனதோடு ஏற்றுக் கொள்ளும் இராமனின் குணநலன்களின் பிம்பம் பெரியப்பா..... அவரும் தன் முழு சம்மதத்தை தெரிவிக்க, திருமண ஏற்பாடு தடபுடலாக தொடங்கியது...
பெரியப்பா அப்போது B.L படித்துக் கொண்டிருந்தார்...
27 அகவை எட்டியப் பெரியப்பா ...நடுத்தர உயரம், நல்ல சிவந்த நிறம்., சுருண்ட கரிய கேசம், இணைந்த புருவம்,மதிகூர் கண்கள் , மிடுக்கானப் பார்வை,
கணீர் குரல், மொத்தத்தில் ஒரு கம்பீர சிம்மம்....
(திராவிடக் கொள்கைகளை பெரியப்பா தீவிரமாக மேடை எங்கும் முழங்கிக் கொண்டிருந்தக் காலம்)

பெற்றோர்களும் பெரியவர்களும் கூடி 2.9.1960 வெள்ளிக் கிழமை காலை சுப முகூர்த்தத்தில் சென்னையில் உள்ள மணப்பெண் வீட்டில் திருமணம் நடைபெற முடிவு செய்யப்பட்டது.... தனது ஆண்வழி ஒரே வாரிசான தன் பேத்தியின் திருமணம் என்பதால் திரு.சந்தனக்குமாரப் பாண்டியர் பழைய வண்ணாரப்பேட்டையில் பள்ளம் என்று சொல்லப்படும் வேலாயுதபாண்டி நாடார் தெரு தொடங்கி இரண்டு தெருக்கள் அடைக்க அலங்கார பந்தல் போட்டு, அப்போது தனலட்சுமி பள்ளியில் பயின்ற இரண்டாயிரம் மாணவர்களுக்கும் விருந்தளிக்க ஏற்பாடு செய்தார் ...
திருமணத்திற்கு எனது பாட்டி , தாத்தா, என் அப்பா, சித்தப்பா, சின்ன அத்தை, அருகில் உள்ள தாய்மாமன் குடும்பத்தார் அனைவரும் நெல்லையில் இருந்து இரயிலில் பயணம் செய்து வந்துள்ளனர்...,
(மணப்பெண்ணின் திருமணச் சேலையை பெரியப்பாவே காஞ்சிபுரம் சென்று வாங்கி வந்துள்ளார்... அப்போது அதன் விலை ரூ250)
மாந்தளிர் நிறத்தில் சிவப்பு நிற பெரிய சரிகை பார்டர் பட்டுச்சேலை அணிந்து பூமிக்கு நோகாமல் மணப்பெண் நடந்து வர, நம் தமிழ் பாரம்பரியப்படி பட்டுவேட்டி பட்டுச் சட்டை அணிந்து மணமகன் அருகில் அமர,
தமிழர் பண்பாட்டுடன் திருமணம் நடைபெற்றது ...

மங்கல வாத்தியங்கள் முழங்க, நாதஸ்வர இசை உச்சஸ்தாயில் ஒலிக்க.... பெற்றோர்கள் பெரியோர்கள் மலர்தூவி ஆசிர்வதிக்க, பெரியப்பா பெரியம்மாவின் கழுத்தில் மங்கலநாண் அணிவித்து....
இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாக முதல் முடிச்சும்
முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சும்
பெற்றோர்கள், திருமணத்திற்கு வருகை தந்த பெரியோர்கள் சாட்சியாக மூன்றாம் முடிச்சும் போட்ட பெரியப்பா...
சற்று ஆர்வக் கோளாறா அல்லது உணர்ச்சிப் பெறுக்கில் எண்ணிக்கை மறந்தாரா என்று தெரியவில்லை.... நான்காவது ஒரு முடிச்சும் சேர்த்து போட்டுள்ளார்... அருகில் இருப்பவர்கள் எடுத்துச் சொல்ல, அதற்கு பெரியப்பா, இருக்கட்டும் இன்னும் உறுதியாக இருக்கும் என்று சொல்லி சிரித்தாராம்... (அவர் தீர்க்க தரிசி... உண்மையில் பெரியப்பா பெரியம்மாவுடனான பந்தம் மிகவும் பலமானது என்று அவர்கள் இணைந்து வாழ்ந்த காலம் சொல்லிற்று) எங்கள் குல வழக்கப்படி, மணப்பெண் பெரியம்மா அவர்களின் கரங்களை அவரது தாத்தா திரு.V.A.கிருஷ்ணசாமி நாடார்கள் அவர்கள் மணமகன் திரு.அருணாசலம் என்கின்ற திரு.ஆலடி அருணா அவர்கள் கையில் ஒப்புவிக்க, திருமணம் இனிதே நடந்தேறியுள்ளது....

திருமணத்திற்கு பெரிய அத்தை திருமதி. பகவதி அவர்கள் வரவில்லை... காரணம் அப்போது அவர்கள் தனது இரண்டாவது பிரசவத்திற்கு தன் தாய்வீடு வந்திருந்தார் ... நிறைமாத கர்ப்பிணி என்பதால் பயணத்தை தவிர்த்துவிட்டார்கள் .... பெரியப்பா திருமணம் முடிந்து நான்காம் நாள் அத்தைக்கு ஆண் குழந்தை பிறந்தது....

திருமண வரவேற்பு எங்களது சொந்த மண்ணான ஆலடிப்பட்டியில் 9.9.1960 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது... ஆலங்குளத்தில் தொடங்கி ஆலடிப்பட்டிவரை மணமக்கள் ஊர்வலம் .... வழிநெடுக பெரியப்பாவின் அபிமானிகள் தொண்டர் படையினர் பட்டாசுகள் வெடித்தும், வானவேடிக்கைகள் காட்டியும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்...
சிறு மனத்தாங்கலால் பெரிய அத்தையிடம் பேசாமல் இருந்த பெரியப்பா, அன்றுதான் அத்தையின் முகம் பார்த்து பேசியுள்ளார்... பிறந்து மூன்று நாட்களே ஆன தன் மகனை( இளைய அருணா) கையில் ஏந்தியவண்ணம் புதுமணத் தம்பதிகளை அத்தை ஆசிர்வதிக்க, இருவரும் சுற்றி இருக்கும் அனைவரையும் மறந்து தேம்பி தேம்பி அழுதுள்ளனர்.... ஊரே திரண்டு மணமக்களை நேரில் வந்து ஆசிர்வதித்துள்ளனர்.... மக்கள் ஆரவாரத்தில் திரண்டிருக்க, எதிர்பாராத விதமாக மின்தடை ஏற்பட, அவசர அவசரமாக மாமா டேவிட் அவர்கள் பாட்டியின் சகோதரர் திரு.ஆறுமுகநாடார் அவர்கள் வீட்டிலிருந்து தாற்காலிகமாக மின் இணைப்பு செய்ய, மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டாராம்... ஆனால் சிறிய காயத்துடன் எழுந்துவிட்டார்....( ஆனால் பெண் வந்த ராசி வீட்டில் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டது என்று மாப்பிள்ளைவீட்டர் சொல்லிவிடுவார்களோ என்று பெண்வீட்டார் நினைத்தார்களாம்... இது பெரியம்மாவின் இடையே வந்த நினைவாடல்)

தங்களது 44ஆண்டுகால திருமண வாழ்வில் , எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் , எத்தனையோ இன்ப துன்பங்கள் , எத்தனையோ வெற்றி தோல்விகள் .... அத்தனையிலும் இருவரும் இறுகப் பற்றிய கரங்களோடு மனம் ஒத்து பயணித்தனர்... இல்லற விருட்சக் கனிகளாக A.மதிவாணன்
A.பூங்கோதை
A.தமிழ்வாணன்
A.அமுதவாணன்
A.அன்புவாணன்
A.எழில்வாணன் என்ற மகவுகளை ஈன்றனர்....

உலகமறியா பெண்ணாக தன் பதினேழு வயதில் மணவாழ்வில் பெரியப்பா ஆலடி அருணாவுடன் பயணத்தைத் தொடங்கிய பெரியம்மா திருமதி.கமலா ஆலடி அருணா அவர்கள்
“தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் “ என்ற வள்ளுவனின் வரிகளின் விளக்கமாகவே இன்றுவரை வாழ்ந்துவருகின்றார்.....

எழுதியவர் : வை.அமுதா (7-Sep-21, 7:04 pm)
பார்வை : 35

மேலே