எல்லார்க்கும் இன்னாதன எவை – திரிகடுகம் 20

நேரிசை வெண்பா
(சை, சி வர்க்க எதுகை, சி, தி வல்லின எதுகை)

ஆசை பிறன்கட் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலும் - கதித்தொருவன்
கல்லானென்(று) எள்ளப் படுதலும் இம்மூன்றும்
எல்லார்க்கும் இன்னா தன. 20 - திரிகடுகம்

பொருளுரை:

பிறன் பொருள்மேல் ஆசைப்படுதலும்,

சுற்றத்தார் பசித்திருக்குமாறு சோம்பிக் கிடத்தலும்,

வெறுத்து ஒருவனால் "கல்லாதவன்' என்று இகழப்படுதலும்

ஆகிய இம்மூன்றும் எல்லோருக்கும் இன்பந் தராது துன்பம் தருபவையாகும்.

கருத்துரை:

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும், மக்கள் முதலிய கிளைஞர் உணவின்றி வருந்த யாதொரு முயற்சியுமின்றிச் சும்மா இருப்பதும், கல்லாதவன் என்றிகழப்படுவதும் இன்பந் தராதவை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-21, 9:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே