இம்மூன்றும் வித்தற வீடும் பிறப்பு – திரிகடுகம் 22

’ய்’ ஆசிடையிட்ட எதுகையமைந்த நேரிசை வெண்பா

பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்
பற்றறா தோடும் அவாத்தேருந் - தெற்றெனப்
பொ’ய்’த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும்
வித்தற வீடும் பிறப்பு. 22

- திரிகடுகம்

பொருளுரை:

பற்று என்று சொல்லப்படுகின்ற கயிற்று விலங்கும்,

பல பொருள்களிலும் பிடிப்பு நீங்காமல் ஓடுகின்ற விருப்பமாகிய தேரும்,

தெளிவாக பிறர்க்குப் பொய்ம்மை உரைப்பதாகிய சொல் என்று சொல்லப்படும் அறிவுக்குப் பகையாகிய இருளும்

ஆகிய இம்மூன்றும் தனக்குக் காரணமாகிய அவிச்சை கெட பிறப்பு அழியும்.

கருத்துரை:

பற்றையும், அவாவையும், பொய்யையும் நீக்கினால் வீடடையலாம்.

ஒன்றின்மேற் பற்றிருந்தால் அவை ஒழித்து அங்கங்குச் செல்வது கூடாமையால் பாசத்தளை யென்றும், ஒன்றின்மேல் ஆசை மேலே மேலே ஓடிக்கொண்டிருத்தலால் அவாத்தேர் என்றுங் கூறினார்.

"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு"

என்ற குறளுக்கு இணங்கப் பொய்யாமை விளக்கம் எனப்படுதலால், பொய்யுரை இருள் எனப்பட்டது.

பற்று - அகப்பற்று புறப்பற்று என்று இருவகை;

நான் என்னும் உணர்ச்சி யுடனிருப்பது அகப்பற்று.

எனது என்னும் உணர்ச்சியுடனிருப்பது புறப்பற்று.

பற்று - பற்றுதல்: வித்து - விதை, முளை,

வீடும் - அழியும்; வீடுதல் - அழிதல்: தன்வினை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Sep-21, 8:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே