ஞாலம் எனப்படுவார் மூவர் – திரிகடுகம் 26

நேரிசை வெண்பா

ஒல்வ தறியும் விருந்தினனு மாருயிரைக்
கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற்
சீல மினிதுடைய ஆசானும் இம்மூவர்
ஞால மெனப்படு வார். 26

- திரிகடுகம்

பொருளுரை:

தனக்குச் செய்யக் கூடியதை அறியவல்ல விருந்தினனும்,

அருமையாகிய உயிரை ஒருவன் கொல்லுந் தொழிலை கொல்வோனுக்கும் கொல்லப்படுவதற்கும் நடுவே (சென்று) விலக்கி வாழ்கின்றவனும்;

(மனத்தின்) உறுதியினால் (உயிர்க்கு) நன்மையைத் தருவதாகிய ஒழுக்கத்தை உடைய ஆசிரியனும் ஆகிய இம்மூவரும் உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்;

கருத்துரை:

பெற்றது கொண்டு மகிழும் அதிதியும், கொலையை நீக்கி வாழ்பவனும், உயிரினும் இனிய ஒழுக்கத்திற் சிறந்த ஆசிரியனும் உயர்ந்தோர் என்று சொல்லப்படுவார்.

விருந்து - புதுமை. இப் பண்பு ஆகுபெயராய் விருந்தினனை யுணர்த்தும்.

விருந்து - அறிவிருந்து அறியாவிருந்து என்றிரு வகைப்படும்.

முன் அறிந்திருந்தமையால் குறித்து வரும் விருந்து அறிவிருந்து;

அறிந்திராமையால் குறியாமல் வரும் விருந்து அறியாவிருந்து.

ஆசான் - ஆசாரியன். ஞாலம் - உலகு: இங்கு ஆகுபெயராய் உலகத்து உயர்ந்தோரை உணர்த்தியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-21, 8:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 84

சிறந்த கட்டுரைகள்

மேலே