எனையாளும் ஈசன் செயல் – நல்வழி 27

நேரிசை வெண்பா

ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27

- நல்வழி

பொருளுரை:

ஒரு பொருளைப் பெற நினைத்தால் அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும்; அப்படி யல்லாமல் அப்பொருளே வந்த கிடைத்தாலும் கிடைக்கும்;

(இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும்.

கருத்து:

இருவினைகளுக்கு ஈடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே யன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது.

விளக்கம்:

ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும்,

நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Sep-21, 8:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 175

சிறந்த கட்டுரைகள்

மேலே