நின்ற புகழுடையார் மூவர் – திரிகடுகம் 30
இன்னிசை வெண்பா
தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும்
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்
என்றும் அழுக்கா றிகந்தானும் இம்மூவர்
நின்ற புகழுடை யார் 30
- திரிகடுகம்
பொருளுரை:
தன்னை விரும்பி அடைந்தவரை இகழாத ஒருவனும், மிகுந்த செல்வம் வந்த காலத்தில் மறதியை நீக்கினவனும், பிறரிடத்துப் பகைமை யுண்டாகிய காலத்திலும் அவரது செல்வங் கண்ட இடத்து மகிழாமையைக் கடந்து நீங்கினவனும் ஆகிய இம் மூவரும் அழியாப் புகழுடையார்.
கருத்துரை:
தன்னை மதித்து வந்தவரை இகழாமல் ஏற்றுக் கொள்வதும், செல்வம் சிறந்த காலத்தும் நண்பர் முதலியவர்களை மறவாமல் போற்றுவதும், பிறன் வாழ்வுக்கு மகிழ்வதும் புகழுக்குக் காரணமானவை ஆகும்.
எள்ளா - எள்ளாத, இகத்தல் - கடத்தல். நின்ற - நிலைபெற்ற.