தந்தையும் தாயும் வழிபட்டு வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தல் - திரிகடுகம் 56

நேரிசை வெண்பா

முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு - வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும்
விழுப்ப நெறிதூரா வாறு 56

- திரிகடுகம்

பொருளுரை:

முன்னதாகிய இளமைப் பருவத்தில் கல்வியறிவு உண்டாதலும், அதன்பின்பு கல்விப் பொருள் உணர்ந்து தந்தையையும் தாயையும் போற்றிவந்த ஒழுக்கமும், பெரியோரது வழியைச் சேர்தலும் ஆகிய இம்மூன்றும் உயர்வாகிய நெறியைத் தூர்க்காத வழியாம்.

கருத்துரை:

இளமையில் கல்வி கற்றுப், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றிச், சான்றோர் செல்லும் நெறியிற் செல்லுதல் ஒருவனுக்கு உயர்வாம்.

முந்தை: இஃது இளமையின் மேல் நின்றது; விழுப்ப நெறி - விழுப்பத்தையுடைய நெறி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-21, 10:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே