16 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 16
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

மனம் உள்ளவன் மனிதன். மனிதனுக்கு மனம் என்று ஒன்று உள்ளது. அந்த மனம் என்பதை மூன்று வகைகளாக ஞானிகள் பிரித்துள்ளனர். அவை உள் மனம், வெளி மனம் மற்றும் ஆழ் மனம் என்பதாகும். அதில் உள் மனம் அசாதாரணமான சக்திகளைக் கொண்டது. இத்தகைய உள்மனதில் ஆற்றல்களை அறிந்து ஆன்மீக வழியில் பயன்படுத்தி அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டால், மனிதன் தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள முடியும். அதனால் நாம் மனஅமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் பலவிதமான நன்மைகளை அடையலாம். இதற்கென்று பிரத்தியேகமான ஆற்றல்கள் எதுவும் தேவையில்லை. ஏனென்றால் மனிதர்களிடம் மட்டும் அதற்கு தேவையான ஆற்றல்கள் இருக்கிறது. மனித உள் மனதில் ஏராளமான ஆற்றல்கள் திறமைகள் ஆக்கபூர்வமான சக்திகள் அனைத்தும் உதவி செய்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. உள் மனம் கூறுவதைக் கேட்டு மனிதன் சிந்தித்து அதன்படி செயல்படும்போது அவன் விரும்பும் தேடும் அமைதி தானே அவனிடம் வந்து சேரும்.

பிரபஞ்ச ஆற்றல்கள் அனைத்தும் மனிதனுடைய உள் மனதில் இருக்கிறது. அதை நன்கு கவனித்து உணர்ந்து, அதை ஏற்றுக் கொள்ளும்போது, அது உங்களை உலகில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்து விடும். அதன் மேல் நம்பிக்கை வைத்து விட்டீர்களானால் அது உலகில் உள்ள நன்மை தீமைகளை உங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுவதோடு ஆன்மீக வழியில் அன்பையும் மனஅமைதியையும் கொடுக்கும். மனிதனின் உள்மனம் எப்போதும் நல்லவைகளையே எண்ணி நம்மை நல்வழிக்கு நடத்திச் செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள். நம் உள்மனம கூறுவதை கவனித்து செயல்படுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நமது உள்மனம் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலுடன் சேர்ந்து, அறியாமல் புரியாமல் இருந்த நல்ல விஷயங்களை நமக்கு நன்கு புரிய வைத்து, நமது குழம்பிய மனதை தெளிந்த நீரோடைபோல் ஆக்கிவிடும். அது பல்வேறு புதிய உத்திகளை நமது உணர்வுகள் மூலம் உருவாக்கிக் கொடுக்கும்.

நமது கவனக்குறைவால் அறிந்தும் அறியாமையினால் பிரம்மத்தினை இழந்து வாழ்க்கையில் நித்தியானந்தத்தினை இழந்து கொண்டு இருக்கிறோம். அறியாமை என்னும் மாயை நம்மை விட்டு நீங்கும்போது ஞானத்தின் மூலம் நாம் பிரம்மத்தை உணர முடியும். அவ்வாறு உணரும்போது நாம் விரும்பும் நிரந்தரமான மனஅமைதி கிடைக்கும். அந்த பிரம்மத்தை அடைவதற்கு அதாவது அந்த நித்யானந்தத்தை அடைவதற்கு ஆன்மீக வழியில் சரியான வழிமுறையில் நாம் செயல்பட வேண்டும். அதற்கு ஆன்மிகம் நமக்கு வழி காட்டுகிறது. நாம் ஆன்மிகம் காட்டும் வழியில் தகுந்த குருவின் மூலம் யோகா, தவம், தியானம், வாசியோகம் போன்ற பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்ளும்போது நித்யானந்தம் என்னும் பிரம்மத்தை அடையலாம். அவ்வாறு பிரம்மத்தை உள்மனம் உணரும்போது நாம் தேடும் விரும்பும் மனஅமைதியை பெறுவதற்கு முடியும்.

உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்மிடம் செயல்படும் நிலைகளைப் பற்றி நாம் சிந்தித்து பார்த்தால் அவைகள் மூன்று நிலைகளில் செயல்படுவதை உணரலாம். முதலில் நாம் ஒரு செயலைச் செய்யும்போது நமது செயலில் சுயமுயற்சி இருக்க வேண்டும். நமது அந்த சுயமுயற்சியானது சரியான வழிமுறையில் இருக்க வேண்டும். நாம் மதுரைக்கு செல்ல வேண்டுமென்றால் ரயில், பேருந்து, கார் போன்ற எந்தவிதமான வாகனமாகக்கூட இருக்கலாம். ஆனால் மதுரைக்கு செல்லக்கூடிய வாகனத்தில்தான் நாம் ஏறி பயணம் செய்ய வேண்டும். இதுதான் சரியான அறிவுபூர்வமான முயற்சியாகும்.

இரண்டாவது காலம் நேரம் முக்கியமானது. அதாவது ஒரு செயலை செய்யும்போது உரிய காலத்தினை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். நாம் செய்வதற்கு நினைத்த ஒரு பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் (funsuvality) தவறாமல் நாம் செயல்படுத்த வேண்டும். ஒருவன் மதுரை செல்லக்கூடிய ரயிலை குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்றால்தான் அவன் அந்த குறிப்பிட்ட ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். அவன் தாமதமாகச் சென்றால் அந்த குறிப்பிட்ட ரயிலில் பயணம் செய்வதற்கு அவனால் முடியாது. அவனுடைய காலதாமதம்தான் ரயிலை தவற விட்டதற்கு முக்கிய காரணம் ஆகும். ஆனால் அவன் மற்றவர்களிடம் கூறும்போது அவனையும் அறியாமல் ‘நான் ஸ்டேஷனுக்கு வருவதற்குள் அந்த ரயில் சென்று விட்டது’ என்று கூறுவான்.

அவன் தான் தாமதமாக வந்ததைப் பற்றி தன்னுடைய குறையைக் கூறாமல், உணராமல் ரயிலின் மீது பழியினை போட்டு விடுவான். மேலும் அவன் அந்த ரயிலை தவற விட்டதால் ஒருவிதமான மன அழுத்தத்தில் துன்பத்தை அவனையும் அறியாமல் அவன் மனம் அனுபவவிப்பதற்கு நேரிடுகிறது. அதனால் அவன் சிறிது மனஅமைதியைக்கூட அப்போது இழந்து விடுகிறான். அவன் ரயிலைத் தவறவிட்டது பற்றி கவலைப்படாமல் ‘இதுவும் ஒரு நன்மைக்கே’ என்று அவன் மனதில் இயல்பாக எடுத்துக்கொண்டு தனது அடுத்த பணியைத் தொடர வேண்டும். இதனை ஆன்மிகம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. மேலும் அது நமது மனஅழுத்தத்தை குறைப்பதோடு நம்முடைய மனதை அப்போது ஆறுதல்படுத்தி ஆன்மீக வழியில் மனஅமைதியை அளிக்கிறது.

மூன்றாவது தெய்வ அனுக்கிரகம் இருக்க வேண்டும். தெய்வம் என்றால் நம் கண்ணுக்குத் தெரியாத ஒருவிதமான பிரபஞ்ச சக்தி ஆகும். விக்கினத்தைப் போக்கும் கடவுளை விக்னேஸ்வரன் என்று அழைக்கிறோம். எனவே நாம் ஒரு செயலை தொடங்கும்போது அச்செயல் தடையில்லாமல் நிறைவேற வேண்டும் என்று பெரும்பாலும் விக்கினேஸ்வரனை வணங்கி வேண்டிக் கொள்கிறோம். சிலர் தங்களது இஷ்ட தெய்வத்தை, சிலர் குலதெய்வத்தை வேண்டிக் கொள்வார்கள். ஏன் என்றால் நாம் ஒரு செயலை தொடங்கும்போது சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

நாம் ஒருசெயலை மேற்கொள்ளும்போது மூன்று நிலைகளில் நமக்குத் தடைகள் வரக்கூடும். எடுத்துக்காட்டாக நாம் புதிய வீடு ஒன்று கட்டுவதற்கு தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பலத்த காற்று மழை வந்து விட்டால் வீடுகட்டும் செயல், அப்போது தடைபட்டு விடுகிறது. இது இயற்கையினால் வரக்கூடிய தடையாகும். அதாவது மழை, வெள்ளம், புயல்காற்று போன்ற இயற்கையினால் வரக்கூடிய தடைகள் ஆகும். மனிதன் வாழும் அல்லது இருக்கும் சூழ்நிலையினால் தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது ஒரு காரணகாரியத்துடன் பேருந்தில் ஏறி ஓரிடத்திற்கு பயணம் செல்கிறோம். அப்போது திடீரென நாம் பயணம் மேற்கொள்ளும் பேருந்தின் டயர் பஞ்சராகி விடுகிறது அல்லது அந்த பேருந்து ஓட்டுனருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு பயணத்தில் தடை ஏற்பட்டு விடுகிறது. இவைகள் எல்லாம் சூழ்நிலையினால் ஏற்படக்கூடிய தடைகள் ஆகும். இதேபோன்று வீட்டிலும் வெளியிலும் ஒரு செயலை செய்யும்போது சூழ்நிலைகள் சரியில்லாமல் இருப்பது போன்ற பலவிதமான தடைகள் ஏற்படக்கூடும்.

மூன்றாவது தடை நமது மனம் ஆகும். நாம் பணியில் ஈடுபடும்போது அதில் முழுமனதுடன் ஈடுபடாமல் இருப்பது ஆகும். அதாவது வேண்டாவெறுப்பாக நாம் அந்தப்பணியை செய்து கொண்டிருப்பது. அதனால் நாம் செய்யும் அந்தப்பணியில் நாம் நினைத்தபடி வெற்றி அடைவதற்கு முடிவதில்லை. எடுத்துக்காட்டாக வகுப்பில் ஒரு மாணவன், படிப்பதற்கு விரும்பாமல் ஆசிரியர் அருகில் இருந்துகொண்டு தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற பயத்தில் புத்தகத்தினை விரித்து வைத்துக்கொண்டு படிப்பதுபோல் நடித்துக்கொண்டு இருப்பது. அவன் படிப்பில் கவனமில்லாமல் மன ஈடுபாடில்லாமல் இருப்பது ஆகும். இந்த மூன்றாவது தடையை நாம் தவிர்க்க முடியும். நாம் செய்யும் பணியில் மனம் முழு ஈடுபாட்டுடன் இருந்தால்தான் எதிலும் வெற்றி காண முடியும். எனவே ஆன்மிக கருத்துகளில் முழுநம்பிக்கையும், மனஉறுதியும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போதுதான் நாம் தேடும் விரும்பும் மன அமைதி கிடைக்கும்.

அறம், பொருள், இன்பம் வீடு போன்ற புருஷார்த்தங்களை அடைவதால் கிடைக்கும் மகிழ்ச்சியை, பிரம்மத்தை, நித்தியானந்தத்தினை மனஅமைதியை அடைவதற்கு விரும்புகிறவர்கள், வானில் பறந்து செல்லும் பறவை போன்று இருக்க வேண்டும். பறவையின் ஒரு இறக்கைபோன்று நாம் ஆன்மீகத்தில் நமது விடாமுயற்சியாக இருக்க வேண்டும். பறவையின் மற்றொரு இறக்கைபோன்று தெய்வீக அனுக்கிரகத்தை பெறுவதற்கு நாம் முயற்சியில் ஈடுபடவேண்டும். பறவையின் இரு இறக்கைகள்போன்று செயல்பட்டு ஆன்மீகம் என்னும் வானத்தை அடைவதற்கு முயற்சி செய்வதற்கு வேண்டும். நமக்கு அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் ஞானத்தை தெளிவுபடுத்துவது, உணர்த்துவது வேதங்கள் உபநிடதங்கள் இதிகாசங்கள் ஆகும்.

மனம் உடையவன் மனிதன் என்று அழைக்கப்படுகிறான். மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு மனம் என்பது இல்லை. இந்த மனதை வைத்துதான் மனிதன் உயர்ந்தவனாக கருதப்படுகிறான். மனிதனுடைய மனதை வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என மூன்று வகையாக ஞானிகள் பிரித்துள்ளனர். நம்மில் பெரும்பாலானவர்கள் நம்முடைய வெளிமனம் எண்ணுவதை அது கூறுவதைத்தான் கேட்டு செயல்படுகிறார்கள். இந்த வெளிமனம் ஒரு செயலை செய்யும்போது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் எண்ணிச் செயல்படும் தன்மையுடையது. இந்த வெளிமனம் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவதில்லை. எனவே இந்த வெளிமனம் கூறுவதுபோல் அல்லது எண்ணுவதுபோல் செயல்படும்போது நாம் அந்தச்செயலில் வெற்றி நிச்சயம் பெறுவோம் என்று கூறுவதற்கு முடியாது. இந்த வெளிமனம் ஒரு பொருளை எண்ணும்போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலையில்தான் செயல்படும்.

எடுத்துக்காட்டாக கடையில் ஒரு பொருளைப் பார்த்தவுடன் வெளிமனம் வாங்கும்படி நமது ஆசையைத் தூண்டுகிறது. நாம் வாங்கும் அந்தப் பொருளினால் வரக்கூடியது நன்மையா தீமையா? இன்பமா துன்பமா? என்பது பற்றி வெளிமனம் சிந்திப்பதில்லை. கிராமங்களில் சண்டை சச்சரவுகள் நிகழும்போது பெரியவர்கள் சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு பேச்சு வழக்கில் ‘எதையும் மேம்போக்காக பார்க்காதே’ என்று சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருப்பவர்களைப் பார்த்து இப்படிக் கூறுவதைக் கேட்டிருப்போம். உலகில் ஏற்படும் பிரச்சனைகளை மேம்போக்காக பார்த்தால் பிரச்சினைக்குத் தீர்வு கிடையாது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.

உலகில் எதையும் மேம்போக்காக பார்ப்பது, கேட்பது, செயல்படத் தூண்டுவது நமது வெளிமனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த வெளிமனம் மூலம் நாம் மனஅமைதி அடைவதற்கு வாய்ப்பில்லை. நாட்டிலும் வீட்டிலும் பிரச்சனைகள் உருவாவதற்கு, நாம் இந்த வெளிமனம் கூறுவதை கேட்டு செயல்படுவதுதான் முக்கிய காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் வெளிமனம் கூறுவதை ஓரளவுக்கு கேட்கலாம் ஆனால் அதன்படி செயல்படுவதை முற்றிலும் தவிர்த்து விடவேண்டும்.
உள்மனதின் தன்மை செயல்பாடுகள் வெளிமனதிற்கு முற்றிலும் வேறுபட்டது. கடையில் ஒரு பொருளைப் பார்த்தவுடன் வெளிமனம் வாங்கும்படி ஆசையைத் தூண்டி விடுகிறது. ஆனால் நாம் நமது உள்மனதிடம் அப்பொருளைப் பற்றி கேட்டால் அது சிந்தித்து அப்பொருளை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை சிந்தித்து செயல்படும் தன்மையுடையது. எடுத்துக்காட்டாக ஒரு கடையில் நுழைந்து ஏதாவது ஒரு பொருளை வாங்கலாம் என்று நினைக்கிறோம். அப்போது கடையில் நாம் ஒரு அழகான வண்ணக்குடையைப் பார்க்கிறோம். உடனே நம் வெளிமனம் நம்மை அந்த அழகிய வண்ணக்குடையை வாங்கும்படி ஆசையைத் தூண்டுகிறது.
நாம் சற்று சிந்தித்து வெளிமனம் கூறுவதை தவிர்த்து, உள்மனதிடம் இந்த அழகான குடையை வாங்கலாமா என்று கேட்டுப்பாருங்கள். உள்மனம் நம்மிடம் ‘இது குளிர்காலமாக இருப்பதால் இப்போது இந்தக் குடையை வாங்குவதால் உனக்குப் பயன்படுவதில்லை. அதன் அருகில் இருக்கும் ‘குளிர்காலத்திற்கு அணியக்கூடிய கம்பளிநூலினால் பின்னப்பட்ட சட்டை( sweater) இருக்கிறது. அதனை வாங்கினால் குளிர்காலத்திற்கு உனக்கு பயனுள்ளதாக இருக்கும் அதனை வாங்கு’ என்று நம்மை வாங்கும்படி அறிவுறுத்தும்.
நமது வெளிமனம் உணர்வுபூர்வமாகவும் சிந்திக்காமலும் எதிர்மறையாக எண்ணிகொண்டு அவசரமாக செயல்படும் தன்மையுடையது. அதாவது நம் வெளிமனம் சிந்திப்பதிலும் செயல்படுவதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதைப் போன்றது. ஆனால் நமது உள்மனம் அனுபவபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்தித்து நேர்மறையாக எண்ணி செயல்படும் தன்மையுடையது. கல்வி பயிலும் .மாணவர்கள் கருத்தூன்றி பாடங்களைப் படிக்கும்போது அதிலுள்ள கருத்துக்கள் மாணவர்கள் மனதில் நன்கு பதியும் என்று ஆசிரியர்கள் அடிக்கடி மாணவர்களுக்கு அறிவுறுத்துவார்கள். மாணவமாணவிகள் கருத்தூன்றி படிக்கும்போது படிப்பதை உள்மனம் நன்கு கேட்டு மனதில் நன்கு பதிவு செய்து வைத்துக் கொள்கிறது.

உலகில் காணும் பரபரப்பான சூழ்நிலையில் வெளிமனம் செயல்படக்கூடியது. ஆனால் உள்மனம் அமைதியான சூழ்நிலையில்தான் செயல்படும். உங்கள் உள்மனதில் உள்ள திறமைகளையும் அதன் செயல்படும் திறமையையும் தெரிந்துகொண்டு சரியானபடி அதை பயன்படுத்தும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் நீங்கள் துன்பப்பட வேண்டியதில்லை. நாம் தேடும் விரும்பும் அமைதி கிடைக்கும். மூன்றாவது மனம் ஆழ்மனம் ஆகும். ஆழ்மனம் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது அதனை அறிந்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (20-Sep-21, 10:23 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 22

மேலே