சுற்றம் தொழுது மகிழத் தொழில்புரிந்து வாழின் பொழுது விளையும் புகழ் - வரம், தருமதீபிகை 883

நேரிசை வெண்பா

கற்ற கலையைக் கடமை யொடுபேணி
உற்றதன் வாழ்வை ஒளிசெய்து - சுற்றம்
தொழுது மகிழத் தொழில்புரிந்து வாழின்
பொழுது விளையும் புகழ். 883

- வரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தான் கற்ற கல்வியறிவை நல்ல கருமங்களைச் செய்வதால் நன்கு பேணித் தனது வாழ்வை விழுமிய நிலையில் ஒளிசெய்து உயர்த்தித் தன்னைச் குழ்ந்த உறவினங்கள் உவந்து மகிழ உதவி புரிந்துவரின் அவன் புகழ் மிகவும் விரிந்து விளங்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இயல்பாகவே மனிதன் அறிவுடையவன்; ஆயினும் கல்வியால் அது தெளிவாய் ஒளிபெற்று வருகிறது. சிறந்த அறிவாளிகளின் கருத்துக்களை நூல்களின் வழியாக நுனித்து அறிந்து கொள்வதையே கல்வி என்று உலகம் சொல்லி வருகின்றது. பலவகை நெறிகளிலும் பரந்து விரிந்துள்ள அந்தக் கல்வியின் நிலைகளே கலைகள் எனத் தொகையாய் நிலவி நிற்கின்றன.

இலக்கியம், சிற்பம், இசை, ஓவியம், கணிதம் முதலியன கலைகள் என வந்துள்ளன. அறிவு நலம் கனிந்த இந்த நிலைகளில் தலைசிறந்து வருபவர் உலகம் நலமுற ஒளிசெய்து வருகின்றார்.

கலை நிறைந்த மதிபோல் கலை நிறைந்த மதிமான்கள் பலவகையிலும் இன்பம் புரிந்து வருதலால் மாந்தர் அவர்பால் அன்பு கூர்ந்து யாண்டும் அவரை உரிமையோடு போற்றுகின்றனர். உள்ளம் ஒளிபெற்ற அளவு அந்த மனிதன் வெளியே தெளிவுற்று நிற்கின்றான். தெளிந்த மேதை திவ்விய சோதியாய்த் திகழ்கிறான்.

இந்தக் கலையறிவு தனியே நின்றால் உலக வாழ்க்கைக்கு உறுதி புரியாது. கருமங்களோடு கலந்தபோதுதான் வாழ்வை வளம்படுத்தி அது மேன்மை புரிந்து விளங்கியருளுகிறது.

உழைப்பின் வழியே பிழைப்பு நடந்து வருதலால் அதனை உணர்ச்சியுடன் செய்பவன் உயர்ச்சி அடைகின்றான். உணராது அயர்ந்து நிற்பவன் உயர் நலங்களை இழந்து விடுகிறான்.

அறிவும் முயற்சியும் இருவிழிகள் போல் வாழ்வதற்கு வழி காட்டுகின்றன; ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்தால் உறுதி குன்றி விடும். அறிவில்லாத முயற்சியும், முயற்சியில்லாத அறிவும் இகழ்ச்சியாய் இழிவுறும். இருவகையும் மருவின் பெருமை ஆம்.

அறிவு பலவகை நிலைகளுக்கும் ஒளி தருகிறது; அது கலையில் கவியும் போது அதன் நிலை உயர் சுவையாய் எவ்வழியும் ஒளி வீசுகின்றது அந்த நிலை எல்லாருக்கும் எளிதில் அமையாது; அருமையான சிலர்க்கே அது உரிமையாயமையும்.

கருமத்தை யாவரும் செய்யலாம்; அவ்வாறு செய்து வருபவரே வாழ்வின் கடமையை வளமாய்ச் செய்தவராகின்றார். தொழில், வினை, கருமங்கள் என்பன வாழ்வின் தருமங்களாய் வந்துள்ளன. வாங்கிய கடனைக் கொடுக்க வேண்டியது போல் வாழ்வின் பாங்காய் அடுத்து வந்துள்ளமையால் கருமம் கடமை என நேர்ந்தது. கடத்தால் செய்வது கடமை எனக் காரணக் குறியும் பெற்றது. கடம் - உடல். முன்னது புறப்பொருளால் போந்தது; பின்னது அகப்பொருளால் நேர்ந்தது.

தன் கடமையைக் கருதிச் செய்பவன் எவ்வழியும் பெருமை பெறுகிறான்; அவ்வாறு செய்யாதவன் சிறுமை யுறுகிறான்.

Of all the ways of life but one –
The path of duty leads to happiness. - Southey

வாழ்வுக்கு உரிய வழிகள் எல்லாவற்றுள்ளும் கடமையைக் கருதிச் செய்வது ஒன்றே நல்ல வழி; அதுவே இன்ப வாழ்வை இனிது அருளுகிறது என சதே என்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

There's life alone in duty done,
And rest alone in striving. - Whittier

கடமையைச் செய்வதில்தான் நல்ல வாழ்வு இருக்கிறது; இல்லையானால் அது அல்லல்தான் என்னும் இது இங்கே அறிய வுரியது. கருமமே தருமமான வாழ்வைத் தருகிறது.

குடி வாழ்க்கைக்கு இனிய ஆதாரமாயுள்ள கருமங்களைக் கருதிச் செய்து தன் குடும்பத்தை நன்கு பேணி வருபவன் நல்ல ஆண் மகனாய் எங்கும் மேன்மை பெறுகின்றான்.

நல்லாண்மை என்ப(து) ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். 1026 குடிசெயல்வகை

சிறந்த ஆண்மையாளனுடைய பான்மையை வள்ளுவர் இவ்வாறு வரைந்து காட்டியிருக்கிறார் இல்லை இனிது ஆளும் தன்மை இல்லாண்மை என நின்றது. பேராண்மை, போராண்மை, ஊராண்மை, வில்லாண்மை, சொல்லாண்மை முதலாக ஆண்மைகள் பல உள்ளன. அவற்றுள் எல்லாம் உயர்ந்த நல்ல ஆண்மை ஈண்டு நல்லாண்மை என விபந்து சொல்ல வந்தது.

தான் பிறந்த குடியைச் செல்வம் முதலிய நலங்களால் சிறந்ததாக ஒருவன் உயர்த்திய போது அந்தக் குடியில் உள்ளவரனைவரும் அவனைத் தலைவனாக வணங்கி எவ்வழியும் அடங்கி அவனுடைய சொல்வழியே நடந்து வருகின்றனர்; எனவே முடியரசன் போல் அக்குடிக்கு அவன் தனி அரசனாகின்றான். தன்னைச் சார்ந்தவரை வளமாய் வாழச்செய்து தன் ஆணை வழியே அவரை அடக்கி ஆண்டு வருதலால் நல்ல ஆண்மையாளன் ஆயினான். ஆளும் தன்மை ஆண்மை என அமைந்துள்ளமையால் அதன் பான்மையும் மேன்மையும் தெளிந்து கொள்ளலாம். குடியை நயமாய் ஆள்பவன் பின்பு படியை வியனாய் ஆளும் பாக்கியவானவான். ஆகவே அவனது.அதிசய மகிமை அறியலாம்.

நல்ல ஆண்மையாளனாய்ச் சிறந்து விளங்கி உயர்ந்த புகழை அடையவேண்டின் நீ பிறந்த குடியை நிறைந்த பெருமையுடையதாய்ச் செய்; கருமவீரன் என்னும் பெருமையும் அருமையான தலைமையும் இருமை இன்பங்களும் அதனால் உனக்கு உளவாகும்.

தாய் தந்தையரைத் தகவாய்ப் பேணி, மனைவி மக்களை இனிது பாதுகாத்து, ஒக்கல் உறவுகளை உரிமையோடு ஓம்பிவரின் அந்த மனிதன் அரிய மகிமைகளை அடைந்து கொள்கிறான். குடியை உரமாக்கி உயர்த்தி வரமான புகழுடன் உயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-21, 1:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே