உலகம் எனப்படுவார் மூவர் - திரிகடுகம் 34

இன்னிசை வெண்பா

மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசுஞ் - சிறைநின்று
அலவலை இல்லாக் குடியுமிம் மூவர்
உலகம் எனப்படு வார். 34

- திரிகடுகம்

பொருளுரை:

மூவருக்குஞ் செய்யுங் கடன்களைச் செய்து முடித்த அந்தணனும்,

தன்கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் (அக்குற்றத்தை) நாடி நீதி நிலையில் வழுவாத அரசனும்;

அரசன் ஆணைக்கு அடங்கி கவலை கொள்ளுதலைக் கொண்டிராத குடிகளும் ஆகிய இம்மூவர் உயர்ந்தோர் என்று சொல்லப்படுவார்!

கருத்துரை:

கடன் முறை தவறாப் பார்ப்பானும், முறைமாறா அரசனும், கவலையற்ற குடியும் உயர்ந்தோர் என்று புகழப் படுவார்.

மூன்று கடன் – தேவர், முனிவர், பிதிரர் இவர்கட்குச் செய்யுங்கடன்; இவற்றில் தேவர் கடன் வேள்வி யாலும், முனிவர் கடன் வேதம் ஓதலாலும், பிதிர்க்கடன் மகப்பெறுதலாலும் தீர்க்கப்படும்;

நாடு முறை - அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. சிறை – ஆணை; குடி தாங் கருதியபடி தீயவழியிற் சென்றால், தண்டித்து அடக்கி நல்வழியிற் செலுத்திச் சிறை போலுதலால், ஆணை சிறை எனப்பட்டது.

மூன்று கடன் கழித்த என்பதற்கு வேதம் ஓதல், வேள்வியாற்றல், மகப்பேறு என்ற மூன்று கடன்களையும் நிறைவேற்றின எனலுமாம்.

சிறை நின்று என்பதற்கு அரசனால் செய்யப்பட்ட சிறைச் சாலைப்பட்டு என்பதுமாம்.

அரசு, குடி என்பன உயர்திணைப் பொருளாயினும், சொல்லால் அஃறிணையாதலால், பார்ப்பான் என்ற உயர்திணை ஆண்பாற் சிறப்புப்பற்றி அவை மூவர் என்ற உயர்திணை முடிபேற்றன

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-21, 4:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே