வினைப்பயனை வெல்ல விண்ணுறுவார்க் கில்லை விதி – நல்வழி 37
நேரிசை வெண்பா
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ(து) அல்லால் கவலைப் படேல்நெஞ்சே!
விண்ணுறுவார்க் கில்லை விதி 37
- நல்வழி
பொருளுரை:
இருவினைப் பயனை வெல்வதற்கு உபாயம் வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதனால் தெரிந்து கொள்வதற்கு இல்லை,
எனினும் நெஞ்சே! கவலையுறாதே; வீட்டு நெறியில் நிற்பவர்க்கு அவர் நினைப்பதுபோலத் தோன்றுவது அல்லாமல் ஊழ் இல்லையாம்
முத்தி நெறியாகிய தியான சமாதிகளினாலன்றி நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க வொண்ணாது
விண் - பரவெளியும் ஆம்; இப்பாட்டிற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவாரும் உளர்.
விளக்கம்:
பாவம் புண்ணியம் ஆகிய இரு வினைப் பயன்களைப் போக்குவதற்கான உபாயம் வேதம் முதல், அனைத்து நூல்களிலும் இல்லை. அதை கற்பதால் உங்கள் விதி மாறாது. உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே.