இல்லை கனாமுந் துறாத வினை - பழமொழி நானூறு 2

நேரிசை வெண்பா

கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் – நல்லாய்!
வினாமுந் துறாத உரையில்லை இல்லை
கனாமுந் துறாத வினை! 2

- பழமொழி நானூறு

பொருளுரை:

நற்குணம் உடைய பெண்ணே! நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள், நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும் பொழுது அப்பொருள் வலியிழத்தலால், வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை; கனாவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை. (கல்வியின்றி விளங்கும் நுண்பொருளும் இல்லை). கல்வியினால் மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும் எனப்படுகிறது.

கருத்து:

கல்லாதான் கண்ட நுண்பொருள் விளங்குதல் இல்லை.

விளக்கம்:

நூலறிவு இன்மையின் ஆராய்ந்தறிந்த பொருள் இல்லையென்பார், 'கண்ட கழி நுட்பம்' என்றார்.

கழி நுட்பம் என்பதற்குக் கல்லாதான் மிகுந்த நுண்பொருளாகத் தான் நினைந்திருக்கின்ற கழிநுட்பம் என்று உரைகூறினும் அமையும்.

குறித்த பொருளை மறைத்து வேறு பொருள்களைக் கிளத்தலின் இறுதி இரண்டடிகளும் ஒட்டு அணியின்பாற் பட்டதாகும்.

வினா முந்துறாத விடையில்லை, கனா முந்துறாத வினையில்லை - இவ்விரண்டும் இச் செய்யுளிற் கண்ட பழமொழிகள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-21, 8:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே