அடடா தாங்கமுடியவில்லை, சொல்லுங்க, இந்த கடவுள் யார் என்று

பெருவாரியான மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை பற்றி நான் இங்கே பேசவில்லை. கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களின் பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள் அவர்களின் அணுகுமுறை இவற்றை எல்லாம் பொதுவான முறையில் நான் கவனித்து வருகிறேன். பல பேரை கேட்டால் கடவுள் என்றால் யார், என்ன என்பதை பற்றி ஒன்றுமே சொல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஏன், எதற்காக கடவுள் தோற்றுவிக்கப்பட்டார்? இது சுலபமான கேள்விதான். ஆனால் பதில் அளிப்பது தான் மிகவும் சிரமம். இந்த விஷயத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பாடு மிகவும் சுலபமானது. கடவுள் என்று ஒன்று இருக்கிறதா அல்லது இருக்கிறாரா என்பதை நம்மையே கண்டு பிடித்து சொல்ல சொல்லி அவர்கள் தப்பித்து கொள்வார்கள். இதில் எந்த ஒரு கருத்து வேற்றுமையும் இல்லை. நல்லது! கோயிலில் சிலையாக இருக்கும் விக்கிரகங்கள் தான் கடவுள் என்பது பலரின் எண்ணம். அப்படி என்றால் பல கோவில்களில் விக்கிரகங்கள் திருட்டு போனது எப்படி? எவ்வளவோ கோயில்களில் ஊழல் நடந்திருக்கிறது, நடந்து கொண்டும் இருக்கிறது. கடவுள் கோவிலில் இருப்பின் இவை எல்லாம் எப்படி சாத்தியம் ஆகும்? கோவில் பூசாரிகள் எல்லாம் உத்தமரான தூய்மையான முனிவர்களா? கோயிலுக்கு வந்து கும்பிடுபவர்கள் எல்லாம் உத்தமர்களா? கடவுளை பற்றி பேசும் , வ்யாக்யானம் செய்யும் பேச்சளர்கள் எல்லாம் உண்மை, தருமம், நேர்மையுடன் , ஒழுக்கமான வாழ்வு வாழும் யோக்கியர்களா?
மிக சுருக்கமாக சொல்ல போனால், கடவுளுக்கு மனித மற்றும் இதர உருவங்கள் கொடுத்து, விதம் விதமாக கடவுளை சித்தரிக்க வைப்பது நாம், மனிதர்களாகிய நாமே. கடவுள் மனிதனாக நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் அப்படி இருந்தால் அவருக்கும் நம்மை போல் ஆசை, கோபம், காதல் இவை எல்லாம் கட்டாயமாக இருக்கும். அப்படி இருப்பின் கடவுள் எப்படி மற்றவர்களிடம் தூய்மையான அன்புடன் இருக்க முடியும்.அவரால் எப்படி இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையம் , உலகையம் காப்பாற்ற முடியும்? ராமன் ஆகட்டும் கிருஷ்ணன் ஆகட்டும் ஜீசஸ் ஆகட்டும் வேறு எந்த கடவுளாகவும் ஆகட்டும், இவர்கள் அனைவருமே மனிதர்களே. ஆனால் அவர்கள், புராணங்களின் கதைப்படி, சாதாரண மனிதர்களை விட பல விஷயங்களில் உயர்ந்தவர்கள். இது சாத்தியமே. இந்நாளில் எவ்வளவு பேர்கள் பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், முகேஷ் அம்பானி போல பணக்காரர்களாக இருக்கிறார்கள். இவர்களிடம் உள்ள திறமை அல்லது அதிருஷ்டம் அல்லது இரண்டும் கலந்து இவர்கள் இவ்வாறு உலகின் சக்தி வாய்ந்த பணக்காரர்களாக இருக்கிறன்றனர். இதை போலவே எந்த ஒரு துறையை எடுத்து கொண்டாலும் அதில் மிகவும் திறமை சாலிகளாகவும் வெற்றிபெற்றவர்களாகவும் உள்ளவர்கள் மிகவும் குறைவே.
சாமியார்கள் துறவிகள் என்ற பேரில் ஆயிரக்கணக்கான மக்கள் உலகில் நடமாடிய வண்ணம் இருக்கிறார்கள். இவர்களில் பணத்தின் மீது பற்று இல்லாமல் மிகவும் எளிமையாக இருப்பவர்கள் மிக மிக குறைவு. அப்படி சிலர் முன்பு வாழ்ந்து சென்றார்கள், வள்ளலார், ரமணா மகரிஷி, ராமகிருஷ்ணா பரமஹம்சர் இது போன்ற சில மகான்கள். இப்போதும் எனக்கும் உங்களுக்கும் தெரியாமல் எங்கேயாவது இப்படி பட்ட முனிகள், மகான்கள் இருக்கக்கூடும்.
கடவுள் ஒருவருக்கு கொடுக்கிறார் என்று சொன்னால் அவர் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.கடவுளுக்கு தெய்வீக சக்தி இருப்பின் எந்த ஒரு உயிரும் பட்டினியால் சாகாமல் இருக்க வேண்டும். அப்படி உள்ளதா உலகத்தில்? எவ்வளவு அநியாயங்கள் அதர்மங்கள் குற்றங்கள் கொலைகள் தினமும் ஆயிரக்கணக்கில் உலகில் நடந்த வண்ணம் இருக்கிறது. கடவுள் இதையெல்லாம் பார்த்து கொண்டு சும்மா இருப்பாரா? ராமர் ஒரு வில் ஒரு சொல் ஒரு மனைவி என்று வாழ்ந்தார். நெஞ்சை தொட்டு சொல்லட்டும், இந்நாளில் எவ்வளவு பேர்கள் இது போல வாழ்கிறார்கள். இரண்டு கல்யாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாற்றான் மனைவியை பார்த்து ரசித்தாலும் வேறு பெண்களை கண்டு மனதில் ருசித்தாலும் அது ராமனின் அறத்திலிருந்து வழி மாறியவை தானே? கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசித்தார். எவ்வளவு பேர்கள் இதை படித்துள்ளார்கள்? எவ்வளவு பேர்கள் இதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்? எவ்வளவு பேர்கள் இதன் படி நடக்கிறார்கள்?
அந்த காலத்திலிருந்தே உலகின் பல்வேறு இடங்களில் வாழ்ந்த சமுதாயங்கள் பலவித சமூக சிக்கல்களுக்கு ஆளாகி, பல இன்னல்களை சந்தித்த பின், அவர்களால் வகுக்க பட்டதே, சமுதாய கோட்பாடுகள். இப்போதும் எங்கு சென்றாலும் ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனி தனி வரிசைகள் உள்ளது. கோவில்களிலும் தான். அப்படி இல்லை என்றால் நம்மால் வகுக்கப்பட்ட கோட்ப்பாடுகள், ஒழுக்க நெறிகள் இவை எல்லாம் உடைத்து தள்ள படும். பல சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்படும்.
இதே கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் கடவுள் என்கிற கோட்பாடு. மக்களை ஒழுக்கரீதியாக பயமுறுத்தினால் தான் சமுதாயம் உருவாக்கிய வழிமுறை மற்றும் ஒழுக்க கட்டுப்பாடுகளை ஓரளவுக்கு பின்பற்றுவார்கள் என்ற காரணத்துக்காகத்தான். கடவுள் என்ற பேரில் மக்களை ஏய்ப்பவர்கள் அப்போதல்ல இப்போதும் எப்போதும் உண்டு.
தப்பு செய்தால் கடவுள் தண்டிப்பார் நல்லது செய்தால் அருள் புரிவர் என்ற உலக ரீதியான நம்பிக்கை உண்மையில் வெறும் நமிபிக்கையே தவிர, நிருபிக்கப்பட்டது அல்ல. எந்த ஒரு மனிதனும் 100 % நேர்மையாகவும், ஒழுக்கமுடனும் வாழ முடியாது. இதற்கு மனிதனாக பிறந்து கடவுளாக போற்றப்படும் பிறப்புகளும் விதிவிலக்கல்ல.
சொர்கம் நரகம் என்பதும் மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனை இடங்களே தவிர உண்மையானவை அல்ல. எவராவது சொர்கத்தை கண்டு வந்து அங்கே வாழக்கை குதூகலமாக இருக்கிறது என்று சொன்னவர் உண்டா அல்லது நரகத்தில் கொடுமை படுத்தப்பட்டு இங்கு வந்து அதைப்பற்றி புலம்புவரை கொண்டிருக்கிறோமா?
ஒருவன் அவனுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி வாழ்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம். ஒருவனையும் நல்லது என்பது இன்னொருவன் கணிப்பில் கெட்டது என்று படுகிறது. இதை போலவே கெட்டது என்பது இன்னொருவனுக்கு நல்லதே என்று தோன்றுகிறது. நல்லது கெட்டது என்பது எல்லா விஷயங்களிலும் உண்டு. இதைத்தான் எதிர்மறை கொண்ட வாழ்க்கை என்கிறோம். இன்பம் துன்பம், கவலை மகிழ்ச்சி, துணிவு பயம், இனிப்பு கசப்பு, இனிமை கொடுமை, அழகு அசிங்கம், நாணயம் ஊழல் இது போல சொல்லிக்கொண்டே போகலாம். இந்த எதிர்மறையான குணங்கள் மற்றும் உருவங்களை கொண்டுள்ளவன் மனிதன் என்பவன். ஒவ்வொரு மனிதனும் இதில் ஏதாவது சில அல்லது பல குணாதிசயங்களை கொண்டவன் இருக்கிறன். கவலை மற்றும் பயம் இல்லாமல் ஒரு மனிதனும் இருக்க முடியாது. அதனால்தான் மகிழ்ச்சியும் துன்பமும் வாழ்வில் மாறிமாறி வருபவை என்று பல ஆன்றோரும் சான்றோரும் மட்டும் இல்லது நாம் எல்லோருமே ஒப்புக்கொள்கிறோம்.இன்று இப்போது நீங்கள் எந்த மன நிலையில் இருக்கிறீர்கள் நாளை இந்த நேரத்தில் இதே மன நிலையில் இருப்பீர்களா? உங்களுக்கே தெரியாது.
இத்தகைய ஒரு சூழலில், இவ்வுலகையும் இந்த பிரபஞ்சத்தையும் ஏதோ ஒரு சக்தி இயக்கிக்கொண்டிருக்கிறது . அது நிச்சயமாக ஒரு மனித உருவம் கொண்ட சக்தியாக இருக்க முடியாது. ஆனால் அந்த சக்தி உலகுக்கும் ஏனைய கோளங்களுக்கும் மற்றும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அண்டசராசரங்களையும் தாங்கி நிற்கிறது. இயக்கிய வண்ணம் கூட இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இல்லையெனில் காலையில் தவறாமல் கதிரவன் உதிப்பது, இரவில் சந்திரன் வருவது, உலகம் சூரியனை ஒரே பாதையில் சுற்றி வருவது இவையெல்லாம் எப்படி சாத்தியப்படும்?
இந்த யூகிக்கமுடியாத மாபெரும் சக்தியை நாம் கடவுள் என்று சொன்னால் அது எல்லோராலும் ஒப்புக்கொள்ளவேண்டியதாகிய கட்டாயமே. இந்த அறிய கண்ணுக்கு புலப்படாத சக்தியை தான் பரமாத்மா என்று நான் கூறுவேன், வேறு பலரும் கூட கூறுவார்கள். கண்ணுக்கு தெரியாமல் காற்றானது எப்படி நம்மை தழுவி செல்கிறதோ அதைப்போல இந்த மாபெரும் கற்பனை செய்ய முடியாத சக்தியானது
இந்த அகில அண்ட சரசாரங்களை நடத்திக்கொண்டு இருக்கிறது. நம் உள்ளில் இருக்கும் உயிரே நம் கண்ணில் தென்படாதபோது இத்தகைய பிரம்மாண்டமான அறிய கருப்பொருளை நாம் கற்பனைகூட செய்ய இயலுமா? இந்த அருவமான சக்தியை நாம் இல்லை என்று சொல்ல முடியுமா? இன்னொரு கோணத்தில் பார்த்தால் எங்கும் காண்கின்ற எல்லா கட்சிகளும் இந்த சக்தியின் வெளிப்பாடு என்று சொன்னாலும் அதுவும் சரியாகவே படுகிறது. இந்த நீதியின் படி நாம் காண்கின்ற எல்லா மனிதர்களும் , எல்லா உயிர்களும் அணைத்து பொருட்களும் இந்த அறிய சக்தியின் வெளிப்பாடு என்பதையும் புரிந்து கொள்ளலாம். இதே கோட்பாட்டினை வைத்து கவனிக்கையில் மனிதன் மட்டும் அல்ல நாம் காணும் அனைத்திலும் அந்த அறிய கண்ணுக்கு தெரியாத மாபெரும் சக்தி உறைந்துள்ளது. நாம் கடவுள் என்று சொல்வது இந்த மாபெரும் சக்தியாகத்தான் இருக்க முடியும். அத்தகைய சக்திக்கு நாம் நம் கற்பனைக்கும் நம்பிக்கைக்கும் உரிய விதத்தில் நூறு அல்ல ஆயிரக்கணக்கில் உரு கொடுத்துள்ளோம். அதன் விளைவே கோவில்கள் அங்கே உள்ள விக்கிரகங்கள். இப்போது சொல்லுங்கள், நம்மிலும் கடவுளின் சுவடு இல்லையா? நிச்சயம் இருக்கிறது, இருந்தாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் " நானே கடவுள்" என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் உலகம் முழுதும் 700 கோடி மக்களுக்கு மேல் கடவுள்கள் இருப்பார்கள். இது சரி படாது என்பதால், மனிதனுக்கு பதில் அவனது கற்பனையில் வடிக்கப்பட்ட சிலைகளை கோவிலில் குடியிருக்கும் கடவுள், அதாவது கட(உள்) என்று ஆக்கி விட்டோம். எனவே தான் கடவுள் கோவில் உள்ளேயே இருக்கிறார், வெளியே வருவதே இல்லை. ஆகவே தான் ஒவ்வொரு கோவிலிலும் உற்சவ மூர்த்தி என்று இன்னுமொரு சிலையை அந்த கோவிலின் பிரதான கடவுளை கருதி, வருடத்தில் ஓரிரு முறை வெளியில் ஊர்வலமாக கொண்டு செல்கிறார்கள். என்ன என் நினைப்பு சரிதானா நண்பரே????????????

நிறைவில் பழைய திரைப்பட பாடல் வரிகளை நினைவு கூர்ந்து இந்த கட்டுரையை ( கட்டு கதையை???) நிறைவு செய்கிறேன்.
" கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே"

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (12-Oct-21, 4:18 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 85

மேலே