பழவினையும் பல்லாவுள் விடினும் குழக்கன்று தாய்நாடிக் கோடல் – நாலடியார் 101

நேரிசை வெண்பா

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு. 101

- பழவினை, நாலடியார்

பொருளுரை:

பல ஆக்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் இளைய ஆன்கன்று தன் தாய் ஆவினைத் தேடித் தெரிந்தடைதலை வல்லதாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும் தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில் அத்தகைய தன்மையுடையதேயாகும்.

கருத்து:

பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்.

விளக்கம்: "மழவுங் குழவும் இளமைப் பொருள"1 வாதலின் குழக்கன்றென்றது, இளங்கன்றை.

‘பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்' 2 என்ற விடத்து, "எல்லாப் பெயரும்" என்றதனால் இம்முறைப் பெயரும் பெறப்பட்டது.

‘தொல்லை' யென்றார், தொடர்ந்து வருதல் தோன்ற.

கிழவன் - உரிமையுடையோன். விடாது பற்றும் என்றற்கு, இவ்வுரிமைப் பொருள் உணர்த்துஞ் சொல் வந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Oct-21, 10:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

மேலே