மூண்ட வினையின் முடிவு - பிறப்பு, தருமதீபிகை 901

மூண்ட வினையின் முடிவு - பிறப்பு, தருமதீபிகை 901
நேரிசை வெண்பா

ஊன உடலில் உயிர்கள் மருவியிம்
மான உலகில் மறுகுவதும் - வானமுதல்
யாண்டும் பரவி அலமந்(து) அலைவதும்
மூண்ட வினையின் முடிவு 901

- பிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

புலை படிந்த உடல்களை மருவிக் கடல் சூழ்ந்த பெரிய இவ்வுலகில் உயிர்கள் குடல் சூழ்ந்த பசியோடு குலைந்து திரிவதும், பின்பு வானம் முதலிய நிலைகளை அடைந்து நிலையின்றி அலைந்து வருவதும் வினையினால் நேர்ந்த விளைவுகளாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறவியின் வரவும் மரபும் அதிசய மருமங்களுடையன. விதியின் விளைவுகளை வெளிசெய்து வருவன; மதி தெளிய முடியாதன. எவ்வழியும் மையல் மயக்கங்கள் மருவியுள்ளன.

உயிரும் உடலும் சேர்ந்து தோன்றும் தோற்றமே பிறப்பு என நேர்ந்தது. மாறு பாடான வேறுபாடுகள் இச்சேர்க்கையில் கூடியிருக்கின்றன; மாயக்கூட்டுறவுகள் மயங்கியுள்ளன; ஆகவே பிறப்பின் குறிப்புகள் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வந்தன.

உயிர் - அருவமானது; உணர்வுடையது; தூயது; அழிவில்லாதது.
உடல் - உருவமானது; உணர்வில்லது; இழிவுடையது; அழிவுறுவது.

இவ்வாறு மாறுபாடுகள் மண்டியுள்ள இரண்டும் ஒன்றாய்க் கூடியிருப்பது வெய்ய வினையின் விளைவாய் நேர்ந்தது; முன் செய்த வினைகளின் பலன்களைத் துய்த்துக் கழிக்கவே பிறவிகள் இப்படிப் பெருகி வந்துள்ளன. பிறப்பு நிலை இறப்பின் வழியது.

உயர்ந்த புண்ணியங்களைச் செய்தவர் தேவர்களாய்ச் சிறந்து வாழ்கின்றனர்; இழிந்த பாவங்களைச் செய்தவர் எங்கும் ஈனப் பிறவியை அடைந்து வருந்துகின்றனர்; புண்ணியம், பாவம் என்னும் இருவகைகளும் கலந்து நின்றவர் மனித மரபுகளில் மருவி வந்துள்ளனர். வினை விளைவுகளின் நிலைமைகளுக்குத் தகுக்கவாறு அனுபவங்கள் அமைந்த நிற்கின்றன. துன்ப இன்பங்களின் நுகர்வுகள் தொடர்ந்து படர்ந்து யாண்டும் அடர்ந்திருக்கின்றன.

பிறவி எவ்வழியும் துயரம் உடையது. கருவில் மருவிய நாள் முதல் முறையே உருவடைந்து பத்து மாதமும் தாய் வயிற்றுள் சுருண்டு கிடந்து பருவம் அடைந்தவுடன் மருண்டு புரண்டு மறுகி மயங்கி உருண்டு வந்து உயிர் பூமியில் விழுகின்றது; அப்பொழுது அத்தாய் படுகிற பிரசவ வேதனையும், சேய் அடைகிற துயரமும் வாய்மொழியால் வரைந்து கூற முடியாதன. அவ்வாறு பிறந்த குழந்தை உடனே வீறிட்டு அழுகிறது; ஏன்? அந்தோ துன்பவுலகில் புகுந்தேன், ஓயாத துயரங்களை அனுபவிக்க நேர்ந்தேனே! என்ற சோகம் இயல்பாய் ஏற வேகமாய் அழச் செய்தது. பிறந்தவுடனே குழந்தை அழவில்லையானால் அது விரைந்து இறந்து போய் விடும். இருந்து வளர்ந்து மூத்து நொந்து சாக வேண்டிய அவசியமில்லையாதலால் அழாத வாயோடு அக்குழவி மறைந்து போகிறது. இந்த மருமங்களை இங்கே சிந்தித்துக் கருமங்களைத் தெளிந்து கொள்ள வேண்டும்.

பிறந்த பொழுதே எழுந்த அழுகை வாழ்வின் அல்லல் நிலைகளை விளக்கி இறந்து போகும் வரையும் தொடர்ந்து நின்று முடிவில் எல்லாரும் கூவிப் புலம்பிக் கூடி அழும்படி புரிந்து உடலைக் கிடத்தி விட்டு ஆவி அயலே ஒழிந்து போகிறது. அல்லலும் அவலமும் நிறைந்துள்ளமையால் பிறவி பொல்லாப் புலை என நேர்ந்தது. அழுது பிறந்து, அழுது வளர்ந்து, அழுது வாழ்ந்து, அழுது மாய்ந்து, முழுதும் மாயமாய் முடிந்து போகின்றது.

When we are born, we cry that we have come
To this great stage of fools. - King Lear. 4.6

பெரிய பீடையான இந்த மூட உலகத்திற்கு வந்திருக்கிறோமே! என்று வருந்தி நாம் பிறந்த பொழுதே அழுகிறோம் என இது குறித்திருக்கிறது. மனிதப் பிறப்பின் நிலையைக் குறித்து ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பீயர் இங்ஙனம் பாங்கோடு பகர்ந்திருக்கிறார். பிறவியும் அழுகையும் உறவாயுள்ளன.

We are born with travail and strong crying,
And from the birth-day to the dying
The likeness of our life is thus. - Swinburne

வலிய பிரசவ வேதனையும் அழுகையும் கலந்து நாம் பிறந்திருக்கிறோம்; பிறந்த நாளிலிருந்து முடிவாய் இறந்து போகும் வரையும் நம் வாழ்வில் அந்தத் துன்பச் சாயல் தோய்ந்துள்ளது என்னும் இது இங்கே ஆய்ந்து ஓர்ந்து சிந்திக்கத்தக்கது.

As soon as I was born I wept, and every day shows why. [G. H.]

நான் பிறந்த உடனே அழுதேன்; வாழ்வில் ஒவ்வொரு நாளும் அதன் காரணத்தைக் காட்டுகிறது என இது காட்டியுளது. அல்லலான பிறவி அழுகையோடு தொடர்ந்து வந்துளது.

We are born crying, live complaining, and die disappointed. (gn)

அழுது கொண்டே பிறந்திருக்கிறோம்; அல்லலோடு வாழ்ந்து அவலமாய் ஏங்கிக் கவலையுடன் சாகிறோமென இது கூறியுளது.

பிறவியைக் குறித்து மேல்நாட்டார் கருதியுள்ள நிலைமைகள் இன்னவாறு காண வந்தன. அவலத் துயர்கள் அறிய நின்றன.

பிறப்பு துன்பங்கள் நிறைந்துள்ளமையால் பிறவாமை பேரின்பமாய் நின்றது. இங்கே பிறப்பவன் மனிதன், அங்கே பிறப்பவன் தேவன்; எங்கும் யாண்டும் பிறவாதவன் கடவுள்.

பிறவா யாக்கைப் பெரியோன். (சிலப்பதிகாரம், 5)

இறைவனை இவ்வாறு இளங்கோவடிகள் குறித்திருக்கிறார். பிறவாத கடவுளை நினைந்து ’பிறவிப் பெருங்கடல் நீந்துக’ என வள்ளுவர் சீவர்களுக்கு ஆவலோடு இனிது போதித்திருக்கிறார்.

கன்னபுரம் என்னும் ஊருக்குக் காளமேகப் புலഖர் ஒரு முறை போயிருந்தார்; அங்கே பெருமாள் கோவிலைக் கண்டார்; திருமாலை நோக்கிக் கருமாலை காட்டி ஒரு பாட்டுப் பாடினார்.

நேரிசை வெண்பா

கன்னபுர மாலே! கடவுளிலும் நீஅதிகம்;
உன்னிலுமே யானதிகம் ஓதக்கேள்; - முன்னமே
உன்பிறப்போ பத்தாம்; உயர்சிவனுக்(கு) ஒன்றுமில்லை;
என்பிறப்போ எண்ணரிய எண். – காளமேகம்

கவியினுடைய சுவையைக் கருதிக் காணுக. ஒன்றும் இல்லாதவனை விடப் பத்து உடையவன் பெரியவன்; அவனை விடப் பல கோடியுள்ளவன் எவ்வளவு உயர்ந்தவன்! எனக் கவிஞர் இவ்வளவு விநயமாய்ப் பாடிப் பிறப்பின்மையின் பெருமையை விளக்கியிருக்கிறார். பிறவி நீங்கியவன் இறைவன் ஆகின்றான்.

பிறந்து இறந்து உழலுவதே சீவர்களின் இயல்பாய்த் தொடர்ந்து வருகிறது. மூண்ட பிறவிக்கு முடிவான பயன் மீண்டும் பிறவாமல் வேண்டியதைச் செய்து கொள்வதேயாம்.

ஆண்டவா! எனது பிறவியை நீக்கியருள் என்று நீண்ட காலம் உன்னிடம் நான் வேண்டி வருகின்றேன்; நீ யாதும் நீக்காமல் கடத்தி வருகிறாய்; பிறவித் துயரம் உனக்குத் தெரியாதாதலால் என்பால் பரிந்து இரங்காமல் பராமுகமாயுள்ளாய் எனக் குமரகுருபரர் சிவபெருமானை நோக்கி வருந்தி யிருக்கிறார். பிறவியை நீக்க விழைந்து பிறவாப் பெரியோனிடம் அவர் முறையிட்டுள்ள முறைமையை அயலே காண வருகிறோம்.

நேரிசை ஆசிரியப்பா

மூவ ரகண்ட மூர்த்தியென் றேத்தும்
தேவ ரகண்ட தெய்வ நாயக
நின்னடித் தொழும்பி னிலைமையின் றேனுநின்
றன்னடித் தொழும்பர் சார்புபெற் றுய்தலிற்
15 சிறியவென் விழுமந் தீர்ப்பது கடனென

அறியா யல்லை யறிந்துவைத் திருந்தும்
தீரா வஞ்சத் தீப்பிறப் பலைப்பச்
சோரா நின்றவென் றுயமொழித் தருள்கிலை
புறக்கணித் திருந்ததை யன்றே குறித்திடிற்
20 கோள்வாய் முனிவர் சாபநீர்ப் பிறந்த

தீவாய் வல்வினைத் தீப்பயன் கொண்மார்
உடல்சுமந் துழலுமக் கடவுளர்க் கல்லதை
பிறவியின் றுயர்நினக் கறிவரி தாகலின்
அருளா தொழிந்தனை போலும்
25 கருணையிற் பொலிந்த கண்ணுத லோயே. 17

- திருவாரூர் நான்மணிமாலை, குமரகுருபர சுவாமிகள்

பரமனேடு உறவுரிமையாய்க் கவி இவ்வாறு உரையாடியிருக்கிறார். உரைகளில் பொருள் அழகும் சுவையுணர்வும் விநய விநோதங்களும் விரவி மிளிர்கின்றன. கருதியுணரும் அளவு கலையின் சுவைகள் தலைமையாய்க் கனிந்து வருகின்றன.

உயர்வான உணர்வுடைய பிறவிக்கு உறுதியான பயன் அயலே ஒரு பிறவியை மருவாமல் அந்தமில்லாத அதிசய நிலையை அடைந்து கொள்வதேயாகும் என்பது ஈண்டு உணர்ந்து கொள்ள வந்தது. மீண்டும் பிறவாதபடி வேண்டி உயர்க.

பிரியாத பேரொளி பிறக்கின்ற வருள்அருட்
பெற்றோர்கள் பெற்றபெருமை
பிறவாமை யென்றைக்கும் இறவாமை யாய்வந்து
பேசாமை யாகும். - தாயுமானவர்

தெளிந்த ஞானத்தால் தெய்வத் திருவருளை அடைந்தவர்கள் உரிமையாய் அடையவுரியது பிறவாமையே எனத் தாயுமானவர் இவ்வாறு கூறியிருக்கிறார். பிறவி ஒழிவதே பேரின்ப வழியாம்.

வினையின் விளைவாய் விரிந்து வந்த பிறப்பு வினையின் நீங்கியானை நினைந்துருகிப் புனிதம் அடைந்தவரின் புறமே ஒழிந்து போகிறது. விதி உன்னை வெளியே விடாமல் பிறவியில் ஆழ்த்தி வதைத்து வருகிறது; தெளிவோடு சிந்தித்து அதனை வேரறுத்து ஒளியோடு உயர்ந்து கொள்ளுக; அதுவே இனிய கதி நிலையாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-21, 6:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே