பிறந்து வளர்ந்து பெருகி யிருந்தார் பயனை நினைந்து பரிந்து புரியார் - இருப்பு, தருமதீபிகை 911

நேரிசை வெண்பா

பிறந்து வளர்ந்து பெருகி யிருந்தார்
இறந்து படவே இசைந்தார் - சிறந்த
பயனை நினைந்து பரிந்து புரியார்
மயலில் இழிந்தார் மருண்டு. 911

- இருப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனிதராய் இங்கே வந்து பிறந்தவர் வளர்ந்து வாழ்ந்து இறுதியில் இறந்து போகின்றார், சாகுமுன் உயிர்க்கு உறுதியை உணர்ந்து புரிந்தவர் உயர்ந்த கதியை அடைந்தார்; அவ்வாறு புரியாதவர் மையலில் அழுந்தி வெய்ய துயரில் விழுந்தார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக வாழ்வில் மனித சமுதாயம் தனி மகிமையுடையதாய் உயர்ந்துள்ளது. அறிவு நலங்களோடு ஆற்றல்களும் பெருகி யிருத்தலால் யாண்டும் அது ஏற்றமாய் வருகிறது. வாழ்க்கை வசதிகளை வளமாக்கி நலமாய் வாழ்ந்து வரவே மானிட வாழ்வு மாண்படைய நேர்ந்தன. அனுபவங்களாய் நேர்ந்த நிலைகள் யாவும் ஓர்ந்து சிந்தித்து உயர்ந்த உறுதி காண வாய்ந்தன.

அரிய பிறவியை அடைந்து வந்துள்ள மனிதன் அதற்கு உரிய பயனை உணர்ந்த அளவுதான் உயர்ந்து திகழ்கிறான். எய்திய பிறப்பு எதிரே இறப்பை நோக்கி நிற்றலால் செய்ய வுரியதை விரைந்து செய்து கொள்ள வேண்டும். உறுவதை உணர்ந்து புரிபவன் உறுதி நலங்களை இனிது அடைந்து கொள்கிறான்; புரியாதவன் பரிதாபமாயிழிந்து போகிறான்.

இனிய உணவுகளை உண்டு அழகிய மங்கையரை மருவிச் சுகமாய் உறங்கி எழுவதே மனித வாழ்வின் இயல்புகளாய் யாண்டும் இயங்கி வருகின்றன. விலங்கினங்களிடமும் இவை துலங்கி நிற்கின்றன. உண்ணல், நண்ணல், உறங்கல் என இந்த அளவிலேயே இருந்து இறந்து போனால் அந்த மனித வாழ்வு மாட்டு வாழ்வே. காட்டு விலங்கினும் கடையானதே.

தட்டைகளைத் தின்று பெட்டைகளோடு கூடிக் குட்டிகள் இட்டு மாடுகளும் வாழுகின்றன; அவ்வகையிலேயே மனிதனும் வாழ்ந்தால் அவன் பிறந்த பிறப்புக்குச் சிறப்பு என்னாம்? சிந்தனையில்லாத வாழ்வு நிந்தனையாயிழிந்து கழிந்தொழிகிறது.

எதையும் பகுத்து நோக்கி அறிகிற மனிதன் தனது பிறப்பின் பயனை ஊன்றியுணர்ந்து உய்தி பெறவில்லையானால் அது கொடிய மடமையான நெடிய கேடாம். அவகேடுகளை அறியாமல் உவகையோடு உழலுவது உலக மையலாய் நிலவி வருகிறது. மருளான மயக்கங்கள் இருளாய் இயங்குகின்றன.

மானுடப் பிறவி மருவுதல் அரிது; இந்த அரிய பேற்றை மருவி வந்தவன் எவ்வழியும் வெவ்விய துயரங்கள் அணுகாமல் ஆன்மாவை மேன்மையான நிலையில் உயர்த்தி வர வேண்டும்; அவ்வாறு வருபவனே பிறவியின் பயனைப் பெற்றவனாகிறான். உயர்ந்த குறிக்கோள் பொருந்தியதே சிறந்த வாழ்வாம்; உள்ளம் தெளிந்து உண்மையை உணர்வதால் நன்மைகள் வருகின்றன. குடலின் பசியை நீக்கி உடலை வளர்க்க மட்டும் மனிதன் பிறக்கவில்லை; துயர் நீங்கி உயிர் உய்யும்படி செய்யவே உயர்ந்த பிறவியை அடைந்து வந்திருக்கிறான். உணர்வு நலம் கனிந்த இந்தத் தேகத்திலிருந்து விவேகமாய் உறுதி நிலையை அடையவில்லையானால் பிறப்பும் இருப்பும் வாழ்வும் பழுதுபட்டுப் பாழாய் ஒழிகின்றன. இழிவாழ்வுகள் பழிபாவங்களாகின்றன.

அல்லல் யாதுமில்லாமல் நல்ல சுகங்களே யாண்டும் வேண்டும் என்று எல்லாரும் விரும்புகின்றனர். தாம் கருதியபடி உறுதியாயடைய வுரியதைச் செய்த போதுதான் அது எய்த வருகிறது. சாதனம் இன்றி எதையும் சாதிக்க இயலாது. எளிதே அடைய முடியாத அரிய பிறவியை உரிமையாய் மருவியிருந்தும் உயிர்க்குறுதி நலனை உணராமல் துயர்க்கே வழி செய்து இழி மயலாய் ஒழிவது அழிதுயரான முழு மூடமாம்.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

இந்த மானுடப் பிறவிதான் இடரெலாம் நீங்கி
அந்தம் இல்லதோர் அதிசய நிலையினை அடைய
வந்த தாமிதை மதியுடன் பயன்படுத் தாரேல்
எந்த நாளுமே இழிதுயர் பழிவழி இழிந்தார்.

மதிநலமுடைய பிறவியில் கதி நலம் காணவில்லையானால் பின்பு அதனை அடைவது எவ்வழியும் அரிதாம். தனதினிய உயிர்க்கு உண்மையாக நன்மையை நாடிக் கொள்ளாதபோது அந்த மனிதப் பிறவி அவலமாய் இழிவுறுகிறது. ஈண்டு அருமையாய் அடைந்த பிறப்பால் உரிமையாய் அடையவுரியது மீண்டும் பிறவாமையே. பிறவாத பெருமை என்றும் இறவாத இன்பம் தருமாதலால் அதனை இழந்து விடுவது இழிந்த மடமையாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

அடையவேண் டியதடைந்து மேல்துயரம் அற்றின்பம்
..அளவி லாதாய்க்
கடையதாம் தருவிலங்கு பறவைகள்போல் வீணாள்கள்
..கழியா தாகித்
தடையிலா மனனத்தால் வாழ்வதே உயர்வாணாள்;
..சனனம் தீர்ந்தோர்
உடையபிறப்(பு) உயர்ந்ததாம்; கிழவேசர் இப்பிறப்பாம்
..ஒழிந்த எல்லாம்.

- ஞானவாசிட்டம்

பிறந்த பிறப்பால் பெறவுரியதை இது வரைந்து காட்டியுள்ளது. பிறவித் துயரம் பின்பு தொடராதபடி புனிதமாய் வாழ்வதே வாழ்வாம்; அல்லாத யாவும் இழிவான தாழ்வுடையனவேயாம். வேசரி - கழுதை, பிறப்பை நீக்க முயலாமல் மடமையாய்க் களித்து வாழ்பவரது இருப்பு கிழக்கழுதைப் பிறப்பாம் என இளித்துக் குறித்தது அரிய பயன் இழந்து நிற்கும் பெரிய பழி தெளிய வந்தது. துயர் ஒழிய வாழ்வதே உயர் நலமாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஈனமார் பிறவி எல்லாம்
..இகந்துயர் மனிதன் ஆகி
மானமார் மாண்பில் வந்தும்
..மதிநலம் மருவி ஓர்ந்தே
ஊனமார் துயரம் நீங்கி
..உயிர்க்கிதம் புரியா னாகில்
கானமார் விலங்கிற் கீழாய்க்
..கழிந்தவன் ஒழிவன் அன்றே.

உயர்ந்த மனிதப் பிறவியை அடைந்தும் அதனால் அடையவுரியதை அடையாமையால் அது மிகவும் கடையாய் இழிந்தது.

மாசு படியா மனமருவி மாதேவன்
தேசு படிக தெளிந்து

என்கிறார் கவிராஜ பண்டிதர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-21, 7:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே