தீமை உடையார் வருந்தினார் என்றே வயப்படுவ துண்டோ - பழமொழி நானூறு 9

இன்னிசை வெண்பா

திருந்தாய்நீ ஆர்வத்தைத் தீமை உடையார்
வருந்தினார் என்றே வயப்படுவ துண்டோ
அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும்
பொருந்தாமண் ஆகா சுவர். 9

- பழமொழி நானூறு

பொருளுரை:

அரிதாளை அரிந்து செப்பம் செய்து பொருந்துமாறு தலைக் கூட்டிய விடத்தும் அவர் எடுக்கும் பொழுதே பொருந்தாத மண் பின்னர்ப் பொருந்திச் சுவராக ஆதல் இல்லை;

ஆதலால், தீய செயல்களை உடையார் நம் பொருட்டு இவர் வருத்தமுற்றார் என்பதற்காக வசமாகப் பொருந்துதல் உண்டோ! இல்லை,

நெஞ்சே அவர்மேல் பூண்ட அன்பினை விட்டுத் திருந்துவாயாக என்கிறார் இப்பாடலாசிரியர்.

கருத்து:

கீழ்மக்களுக்கு நன்மை செய்யினும் அதை உட்கொண்டு செய்தார் விருப்பம் போல் நடவார்.

விளக்கம்:

சுவரோடு சேராத மண் பின்னர்ப் பொருந்துதல் இல்லாதவாறு போல் கீழ்மக்கள் உதவி செய்தார் விருப்பத்தின்படி பொருந்துதல் இலர். கீழ்மக்களுக்கு என்ன உதவி செய்யினும், அவர் விருப்பின்படியே நடப்பாராதலின் அவர்மேல் பூண்ட அன்பினை விட்டொழித்தல் வேண்டும்.

'அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும் பொருந்தா மண் ஆகா சுவர்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-21, 7:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே