ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே இருதலைக் கொள்ளி - பழமொழி நானூறு 10

இன்னிசை வெண்பா

பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
இருதலைக் கொள்ளியென் பார். 10

- பழமொழி நானூறு

பொருளுரை:

தம்மிடத்தில் மிகுதியாக நட்புப் பூண்டவர்க்கும், அவரது பகைவர்க்கும் அவரிடத்திற் சென்று மனவேறுபாடு இன்றி மிகவும் நட்டார்போன்று நின்று,

அவர்களது பகைமையை வளர்க்கும் சொற்களைச் சொல்லி அவர்களுள் ஒருவரோடு மனம் பொருந்த இருந்து உறுதியாயின செய்ய மனமியையாதார் இருகடையாலும் சுடுகின்றகட்டை என்று சொல்லப்படுவார்.

கருத்து:

ஏற்பன கூறி இருவரது பகைமையை வளர்த்தல் அறிவிலாரது இயல்பு.

விளக்கம்:

இரண்டு பக்கமும் சுடுகின்ற கொள்ளியை ஒப்ப, இருதிறத்தாரிடமும் பகைமையைக் கொள்ளுத்துவரேயன்றி, ஒருதிறத்தார் பக்கம் நின்று நன்மை செய்யார் அறிவிலார்.

'இருதலைக் கொள்ளி' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-21, 7:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே