மிகுபுனல் பாய்ந்தாலும் உப்பொழிதல் செல்லா ஒலிகடல் - பழமொழி நானூறு 11

நேரிசை வெண்பா
(’க்’ ‘ப்’ வல்லின எதுகை)

மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் மிக்க
இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ். 11 - பழமொழி நானூறு

பொருளுரை:

மிகப் பெருகி நன்மை மிகுதலான நன்னீர் கடலில் வீழ்ந்தாலும் தன்னிடத்துள்ள உவர்ப்பு நீங்காத ஆரவாரிக்கும் கடலைப் போல் கீழான குணமுடையவர்கள் மிகவும் நல்லோரோடு சேர்ந்து வாழும் நன்மையை நன்றாகப் பெற்றிருந்தாலும் எப்பொழுதும் மனத்தின்கண் தூய்மை பெறுதல் இலர்.

கருத்து:

கீழான குணமுடையவர்கள் பெரியார் இணக்கம் பெற்றிருப்பினும் மனச்செம்மை அடையார்.

விளக்கம்:

கடல் தன்னிடத்து வந்த நன்னீரை உவர்ப்பாக்குதல் போல், கீழான குணமுடையவர்கள் தம்முடன் இருக்கும் பெரியோர்களைத் தம்மைப்போல் ஆக்குவர்.

'ஒலிகடல்' என்றமையால் நல்லோரது இணக்கம் பெற்ற நாம் அவர் வழி ஒழுகாது நம் வழியில் அவரை ஒழுகச்செய்தோம் என்ற மகிழ்ச்சியால் ஆரவாரிப்பார் என்பது பெறப்படும்.

'உப்புக்கடல்' என்றதற்கேற்ப 'மிகுபுனல்' நன்மை மிகுதலான நன்னீர் என்று கொள்ளப்பட்டது.

'இனநலம் நன்குடையவாயினும் என்றும் மனநலம் ஆகாவாம் கீழ்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Oct-21, 7:04 pm)
பார்வை : 97

சிறந்த கட்டுரைகள்

மேலே