சால்பினைச் சால்பறுக்கு மாறு - பழமொழி நானூறு 12

நேரிசை வெண்பா

விழுமிழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும் - தொழுநையுள்
மாலையும் மாலை மயக்குறுத்தாள் அஃதால்
சால்பினைச் சால்பறுக்கு மாறு. 12

- பழமொழி நானூறு

*மால் + ஐயும்

பொருளுரை:

எல்லோரானும் விரும்பப்படும் பொற்கலன் அணிந்த பெண்களுடைய வெருண்ட மான்போன்ற நோக்கங்கள் ஆடவருடைய செறிந்த நாணினைத் தோன்றாமல் மறைக்க வல்லதாம்! யமுனையின் கண்ணே திருமாலையும் பின்னை யென்பாள் தன்னழகினால் மயங்கச் செய்தாள்; அது மிகுதியினை மிக்க தொன்றனால் அறுக்கு மாற்றை ஒக்கும்.

கருத்து:

அறிவான் மிக்கார் மகளிரைச் சார்ந்தொழுகல் கூடாது.

விளக்கம்:

வீழு மிழை, விழு மிழையென்று முதற்குறைந்து நின்றது.

நாணாவது இழிந்த கருமம் செய்யப் புகுங்கால் தோன்றும் மனக்குலைவு.

'மாலையும்' என்றது, பிறரை மால் செய்தலையே தொழிலாகக்கொண்டு அதனாலேயே பெயர் பெறல். திருமாலையும் எனச் சிறப்பும்மையாய் நின்றது.

திருமாலையே பின்னை மயக்குறுத்தாள்; ஆதலின், நிறையுடையோம் என்று கருதிச் சார்ந்து ஒழுகின், நிறையினின்றும் தவறி எல்லாக் குணங்களையும் இழக்க நேரிடும் என்பது.

'சால்பினைச் சால்பறுக்கு மாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Oct-21, 8:12 pm)
பார்வை : 38

மேலே