தெய்வமே கண்டாயோ

தெய்வமே கண்டாயோ
========================
செத்தவன் தலைக்கொரு மெத்தையை வைத்திட
சித்தமும் குளிர்ந்தவன் சிறப்பெனக் கொளுவானோ
நித்தமும் வதைத்தெமை நிர்க்கதி யாக்கிடும்
நெஞ்சிலார் வார்த்தையை நிறைவென கொளலாமோ
புத்தரின் போதனைப் போர்த்திந டத்திடும்
போர்தனில் வீழ்ந்துயிர் போய்விட லழகாமோ
சத்தியம் கொன்றவர் சாக்கடை அரியணை
சாய்ந்தெமை ஏய்த்திடும் சரித்திரம் வரலாமோ
**
பொத்திய வாய்க்கொரு பூட்டினைப் போட்டெமை
பொம்மையைப் போலிருப் பாயெனும் போக்கோடே
கத்தியைக் காட்டிடும் கள்வனின் சாயலில்
கழுத்தினை நெரிக்கிற காதகம் புரிவாரே
இத்தனை காலமாய் இனங்களின் ஒற்றுமை
என்பதைச் சிதைத்திவர் ஏற்றிய கொடியாலே
எத்தராய் எம்மிடை என்றுமே பகைமையை
ஏற்றியே ஆசனம் என்பதி லமர்ந்தாரே!
**
தேருதல் நாட்களில் தீமையை வித்திட
தேடியலைந் திங்கிவர் தீட்டிய மதியாலே
மாறுதல் வருமெனும் மாயையை மக்களின்
மனங்களை ஈர்த்திட மயக்கிய கலையாலே
வேருடன் சாய்த்திட வேயொரு வியூகம்
வளர்த்தன ரென்றிரு விழிகளால் கண்டோமே
தேருடன் முடிந்திடும் திருவிழா கண்டவூர்
தெருவென நிக்கிறோம் தெய்வமே கண்டாயோ?
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Oct-21, 2:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 68

மேலே