உறற்பால யார்க்கும் உறும் - பழமொழி நானூறு 15

நேரிசை வெண்பா

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் - பொங்கி
அறைப்பாய் அருவி அணிமலை நாட!
உறற்பால யார்க்கும் உறும். 15

- பழமொழி நானூறு

பொருளுரை:

மிகுந்து கற்பாறையின் மீது பாய்கின்ற அருவிகளையுடைய மலை நாடனே!

அழகிய இடமகன்ற ஆகாயத்தினின்று மிகுந்த வெண்மையான கிரணங்களை வீசுகின்ற மதியும் கோளால் தீமையடைதலைக் காண்கின்றோம்.

ஆதலால், தமக்கு வரக்கடவ துன்பங்கள் தம்மை மாற்றும் இயல்புடையாரே யெனினும் விடாது அவரைச் சென்று பற்றி நிற்கும்.


கருத்து:

வருவது வந்தே தீரும். அதை மாற்றுதலும் ஆகாது. அதன் பொருட்டு வருந்துதலும் ஆகாது.

விளக்கம்:

'திங்களும்' என்றது தூய்மையை உடைய சந்திரனும் தீங்குற்றது எனச் சிறப்பும்மையாக நின்றது.

எனவே இப்பொழுது மிகத் தயாராக இருந்தும் துன்பத்தை யடைதல் முற்பிறப்பில் செய்த தீவினையாலேயாம்.

'உறற்பால' என்றது மேல்வரும் பிறப்புகளுக்கு உறுதுணையாமாறு தாமே செய்து கொண்ட தீமைகளை.

'யார்க்கும்' என்றது முயற்சி செய்து ஆற்றலால் மாற்றும் இயல்புடையாரே யெனினும் என்பது.

'உறும்' என்றது குழக்கன்றைப் பல்லாவுள் உய்த்துவிடினும் அது தன் தாயை நாடிக் கோடல்போல முன் செய்த வினை, செய்தானைத் தானே தேடி அடையும் ஆற்றலும் பெற்றது என்பதாம்.

இதுவன்றி ஊழும் உறுவித்தலான் வரக்கடவ வந்தே தீரும் என்பதாம்.

'உறற்பால யார்க்கும் உறும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-21, 6:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே