யாருளரோ தங்கன்று சாக்கறப் பார் - பழமொழி நானூறு 16

முதல் இரண்டடிகளில் மெல்லின எதுகை 'ண்' 'ந்' அமைந்தும், இரண்டாமடியில் 'ய்' ஆசிடையிட்ட எதுகை அமைந்தும், மூன்று, நான்காம் அடியில் மெல்லின எதுகை 'ண்' 'ங்' அமைந்தும் இவ்வெண்பா
நேரிசை வெண்பா ஆகிறது.

ந'ண்'பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக்
க'ண்'கண்ட குற்றம் உளவெனினும் - கா'ய்'ந்'தீயார்
ப'ண்'கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய்? யாருளரோ
த'ங்'கன்று சாக்கறப் பார். 16 - பழமொழி நானூறு

பொருளுரை:

பண்ணினது இயல்பைக் கொண்ட இனிமையான சொற்களையும் மூங்கில்போன்ற தோள்களையும் உடைய பெண்ணே!

தம்முடைய கன்றிற்குப் பால் விடாமல் அஃது இறக்கும்படி பசுவினைக் கறப்பவர் யாருமிலர்.

அதுபோல, நட்பு செய்து தம்மால் நிலை நிறுத்தப்பட்டவர்களை தாம் கண்கூடாகக் கண்ட குற்றம் அவரிடம் இருக்கின்றன என்றறிந்தாலும் அறிவுடையோர் கோபிக்கமாட்டார்கள்.

கருத்து:

அறிவுடையோர் தம்மிடம் நட்புடையார் குற்றம் செய்யினும் அதுகருதிச் சினத்தல் இலர்.

விளக்கம்:

அறிவுடையார் தம் கன்று சாவுமாறு பால் கறவார், அதுபோலவே, தம் நட்டாரது குற்றங் காரணமாக அவரைச் சினவார் அறிவுடையோர்.

நட்புச் செய்த பின்னர் தாம், அவர் என்னும் வேறுபாடின்மையால், அவரைக் கோபித்தல் தம்மைக் கோபித்தலை யொக்கும் என்பது கருதிச் சினவார் என்பதாம்.

'யாருளரோ தங்கன்று சாக் கறப்பார்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-21, 6:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே