தனிமை என்பது

தனிமை என்பது..
*******************
நினைவு கோப்பையில்
மிதமான சூட்டில்
இதமான நுரை ததும்பும்
அன்பேயான உன் தேநீரை
மிடறு மிடறாய் அருந்த
பிரிவு வழங்கிய வரம்
*
என் நெடுந்தூரப் பயணத்திற்காய்
நீ உலர்த்தி மடித்துக் கொடுத்த
என் ஆடைகளில் படிந்திருக்கும்
உன் அன்பின் ஈரம்
*
உன் ஞாபக நிலா
பூ பூக்க
என் மனவானக் கொடியில்
நீளும் ஒற்றைக் காம்பு .
*
சிலவேளைகளில்
உன் நினைவுகளும் நானும்
யுத்தம் செய்யும் போர்க்களம் அது.
**
ஞாபகச் சுவரில்
இதயக் குழந்தை
காதலை வரையக்
காலம் வழங்கும் தூரிகை.
*
என்னைப் படித்துக்கொள்ள
எனக்காய் கிடைக்கும் புத்தகம்
**
தீயே இல்லாமல்
எரிந்துருகும்
மெழுகுவர்த்தியின் தீபம்
**
புத்தக மேனியில்
அறிவை உறிஞ்சியெடுக்கும்
ஆபத்தற்ற அட்டை
**
சுவர் மேடையில்
கடிகாரம் நிகழ்த்தும்
சொற்பொழிவுகளுக்கு
செவிசாய்த்து
மெய்மறக்கக் கிடைக்கும் பாக்கியம்
**
என்னைப் புல்வெளியாக்கிப்
படரும் பனித்துளி.
*
கால்முளைக்கும்
கற்பனைக் குழந்தை
எழுதுகோல் கைப்பிடித்து
காகித சாலையில்
கவிதை நடைபழகும் பேரழகு.
**
வாழ்வை மேய்ந்தோய்ந்து
ஒதுங்கும் வயோதிப பசு
துணையிழந்த நாட்களில்
இடும் அசை.
**
*மெய்யன் நடராஜ

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Oct-21, 1:28 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : thanimai enbathu
பார்வை : 178

மேலே