அளந்தன போகம் அவரவர் ஆற்றான் – நாலடியார் 103

இன்னிசை வெண்பா

வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவ ராற்றான்;
விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல். 103

- பழவினை ,நாலடியார்

பொருளுரை:

வாழ்க்கையில் வளம் பெற விரும்பாதவர் உலகில் யாருமில்லை.

ஆனால் வாழ்க்கை எதுபோல என்றால், விளங்காயை உருண்டை வடிவில் அமைத்தவரும் இல்லை, களம்பழத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லை என்பது போல ஆகும்.

இன்பநுகர்வு என்பது அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளன.

கருத்து:

அவ்வவற்றின் முறைப்படியே அவையவை அமைதலின், வளம் பெற விரும்புவோர் அதற்கேற்ப நல்வினை செய்தல் வேண்டும்.

விளக்கம்:

ஆற்றால் - வினைவழியே.

களாப்பழம்:

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.

நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது.

இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு.

உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும்.

உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது.

உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-21, 9:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே