தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல் - பழமொழி நானூறு 18

இன்னிசை வெண்பா

தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார்
மிக்காரால் என்று சிறியாரைத் தாம்தேறார்
கொக்கார் வளவய லூர! தினலாமோ
அக்காரம் சேர்ந்த மணல். 18

– பழமொழி நானூறு

பொருளுரை:

மீன் உண்ணும் கொக்குகள் நிறைந்திருக்கின்ற நீர்வளம் பெற்ற வயல்களை உடைய மருதநிலத் தலைவனே!

சர்க்கரையோடு கலந்திருக்கின்ற மணலை சர்க்கரையென்று கருதி உண்ணலாமோ? ஆகாது.

அதுபோல, ஒருவர் தகுதி உடையாரோடு பொருந்தி உறவினரைப் போல் நெருங்கிப் பழகியதால் குணத்தினால் மிக்கவர் என்று அறிவிற் சிறியாரை பெரியோர்கள் தெரிந்து நட்புக் கொள்ளார்.

கருத்து:

சிறியார் பெரியாரோடு இணங்கியிருப்பினும் அவரோடு இணங்கார் அறிவுடையோர்.

விளக்கம்:

'வளவயல்' நீர்வளம் பொருந்தியதாகலின் அதற்கேற்பக் கொக்கு என்பதற்கு மீனுண்ணும் கொக்கு என்று கொள்ளப்பட்டது.

சர்க்கரையோடு சேர்ந்த மணலைச் சர்க்கரை என்று கருதி உட்கொள்ளாதவாறு போல அறிவுடையோர் பெரியாரோடு இணக்கம் பெற்ற சிறியாரை அவரை ஒப்ப மதித்து நட்புப் பூணார்.

'தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-21, 2:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே