நற்புடைய மேகமே சேர்கொடி வேந்தமிர்து - சிறுபஞ்ச மூலம் 3

நேரிசை வெண்பா

கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னானமிர்து
நற்புடைய நாடமிர்தந் நாட்டுக்கு - நற்புடைய
மேகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனும்
ஆகவே செய்யின் அமிர்து. 3

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

கற்புள்ள பெண் தன் கணவனுக்கு அமிர்தம் போன்றவள் ஆகும்.

அறிவு நூல்களைக் கற்று அவற்றின் வழியல் அடங்கி நடப்பவன் உலகத்தார்க்கு அமிர்தம் போன்றவனாகும்.

நல்ல வளங்களையுடைய நாடு அந்நாட்டரசனுக்கு அமிர்தம் போன்றதாகும்.

அந்த நாட்டுக்கு மழைபோல நன்மையைச் செய்கின்ற மேகத்தை யளாவுகின்ற கொடியையுடைய அரசன் அமிர்தம் போல் நன்மைகள் செய்வான்.

அவ்வேந்தனது சேவகனும் அவ்வேந்தனுக்கு நன்மையானவற்றையே செய்வானாயின், அவன் அவ்வேந்தனுக்கு அமிர்தம் போன்றவனாவான்.

கற்பு - கணவன் முதலானோரிடத்து நடக்கவேண்டிய முறைமைகள்

அடங்குதல் - உளம், உரை, செயல்கள் அடங்கப் பெறுதல்

அமிர்து - மரணத்தினின்று தவிர்ப்பது ஆகும். இது சாவா மருந்து, மூவா மருந்து எனப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-21, 5:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே