நல்லார்கள் கேட்பின் நகை - சிறுபஞ்ச மூலம் 4

நேரிசை வெண்பா

கல்லாதான் றான்காணு நுட்பமுங் காதிரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தஞ் செய்தலும் - இல்லாதான்
ஒல்லாப் பொருளில்லார்க்(கு) ஈத்தளியான் என்றலும்
நல்லார்கள் கேட்பின் நகை 4

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

ஆசிரியனிடம் கற்கவேண்டிய முறைப்படி கல்லாதவனாகிய ஒருவன் தானாகக் காண்கின்ற நுண்பொருளும்,

இரண்டு காதுகளும் இல்லாதவளாகிய ஒருத்தி தான் மிக்க அழகுடையவளென்று இறுமாப்படைதலும்,

கையில் பொருளில்லாதவன் தன்னைப்போல் பொருளற்ற வறியவர்கட்கு அவர்களின் விருப்பந் தணிவதற்குப் பொருந்தாத பொருளைக் கொடுத்தலும்,

தான் வறியவரிடத்து மிகவும் அருளுடையவன் என்று தற்பெருமை சொல்வதும்

அறிவுடையவர்களாகிய நல்லவர்கள் கேட்டால் அவர்கட்குச் சிரிப்பை உண்டாக்கும்.

காதுகளே பெண்கள் முகத்துக்கு நகையணிந்து அழகு செய்யும் சிறப்புறுப்பாகும்.

கல்லாதான் நுட்பம், காதில்லாள் இறுமாப்பு, இல்லாதன் ஒல்லாப் பொருளீதல், அளியானென்றல், நல்லார் கேட்டு நகைத்தல் ஆகிய ஐந்து பொருள்களும் இச்செய்யுளில் அமைந்திருத்தல் காண்க.

ஏக்கழுத்தம் - இறுமாப்பு.

பொழிப்புரை:

கல்லாதா னொருவன் தான் ஆராய்ந்து காணும் நுண்மைப் பொருளும், காதிரண்டும் இல்லாதாள் அழகுடையேன் என்றெடுத்த முகத்தினளா யொழுகலும், பொருளில்லாதவன் இல்லாதார்க் கீய்த்தளியா னென்றாலும், ஒருவன் தான் தனக்கியன்ற பொருளன்றி யியலாத பொருளை ஈயாதா னென்றலும் அறிவுடைய நல்லோர் கேட்பின் நகையாம்.

கருத்துரை:

கல்லாதான் நுட்பம் முதலானவை அறிஞர்க்கு நகைப்பினையே விளைவிக்கும்.

ஆசிரியனிடத்தில் நூல்களை முறையுடன் கல்லாதவன் நுண்பொருளாய்ந்து சொல்ல முற்பட்டால் நேர் பொருளன்றி இடக்கர்ப் பொருளையே விரிக்க முற்பட்டு அறிஞர் இகழ்ச்சிக்கு உரியவனாவன்.

‘’கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்,’’ என்ற குறள் மேற்படி பொருளை வலியுறுத்துவனவாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-21, 8:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே