நட்டார் வழங்கத் தளிர்க்குமாம் மேல் – நான்மணிக்கடிகை 36

நேரிசை வெண்பா

மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர் - 1பெய்யல்
முழங்கத் தளிர்க்குங் குருகிலை; நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல் 36

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

குவளை மலரைப் போன்ற கண்கள் மையினால் எடுத்துக் காட்டும்:

மிக்க இருட்டில் நிமிர்ந்தெரியும் நெருப்பு விளக்கெண்ணெயால் விளங்கி யெரியும்;

மேகம் பெய்தற்குக் குமுற குருக்கத்திமரம் இலைகள் துளிர்விடும்;

மேலோர்கள் உறவாயினார்க்குக் கொடுத்தலால் மேலும் பொருளிற் பெருகுவர்.

கருத்து:

கண்கள் மையிடுதலால் விளங்கும்; விளக்கு நெய்யாலெரியும்; குருக்கத்தி மழை முழக்கத்தால் இலை தளிர்க்கும்; அடுத்தார்க்கு வழங்குதலால் ஆன்றோர் தளிர்ப்பர்.

விளக்கவுரை:

நிமிர்சுடர்- கொழுந்தோடி யெரியுந் தீச்சுடர்.

ஈற்றடிக்கு, நண்பராயினார் பொருளுதவி செய்தலாற் கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோர் தமது தொண்டில் மேலும் மேம்படுவரென உரைப்பினுமாம்.

இத்தி என்றும் குருக்கத்தி என்றும் அழைக்கப்படும் மரம், ஐம்பது அடி உயரம் வரை வளர்ந்து, குடை போல பரந்து விரிந்த கிளைகளுடன், நெருக்கமான பசுமை வண்ண இலைகளைக் கொண்டு, நிழல் தரும் கனி மரமாகும். ... இந்த மரங்களின் இலைகள், வேர்கள், மரப்பட்டை, காய்கள் மற்றும் கனிகள் மருத்துவ பலன்கள் மிக்கவை. மரத்தின் பட்டைகளைக் கீற, பால் சுரக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Oct-21, 5:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே