வகையுடைப் பெண்இனிது பேணி வழிபடின் – நான்மணிக்கடிகை 37

இன்னிசை வெண்பா

நகைஇனிது நட்டார் நடுவண் பொருளின்
தொகைஇனிது தொட்டு வழங்கின் - 1வகையுடைப்
பெண்இனிது பேணி வழிபடின் - பண்இனிது
பாடல் உணர்வார் அகத்து. 37

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

மகிழ்ச்சி நண்பரிடையில் இன்பமானது;

செல்வக் குவியல் எடுத்து ஏழைகட்கு வழங்கப்பட்டால் இன்பம் தருவதாம்;

வகையான பெண் கணவனைப் போற்றி அவன்வழி நின்றால் இன்பந் தருபவளாவள்,

இசை பாட்டை யுணர வல்லாரிடத்து இனிதாம்.

கருத்து:

நண்பரிடத்தில் முகமலர்ச்சி துளும்பும்; வறிஞர்களுக்கு வழங்குமிடத்துப் பொருட்டிரள் இன்பந்தரும்; கணவனைப் போற்றி அவன்வழியில் நிற்றலாற் பெண்டிர் இனியவராவர்; பாடல் உணர்வாரிடத்துப் பண் இனிமை தரும்.

விளக்கவுரை: ‘நகை'யுந் ‘தொகை'யுந் தொழிற்பெயர்; பொருளின் தொகை பொருட்கூட்டு.

‘வகை' யென்பது, நினைவு சொற்செயல்களின் நல்வகையை; அஃதாவது சிறப்பை யுணர்த்திற்று; அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என நால்வகைக் குணமுடைமையுமாம்.

பேணுதல், உண்டி முதலிய வேண்டுவ கொடுத்துக் காத்தல்;
வழிபடல் - கணவன் கருத்துவழி நிற்றல்.

‘பொருளின் தொகை யினிது தொட்டு வழங்கின்' என்பதனை, ‘உப்புக் குவட்டின் மிசையிருந்து உண்ணினும், இட்டுண்ணாக் காலது கூராதாம்' என்னும் உவமானத்தாற் கண்டு தெளிக.

1. தகையுடைய.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Oct-21, 6:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே